(Reading time: 22 - 44 minutes)

13. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

வன் கண்களை ஊடுருவினாள் அஸ்வினி. எப்படி இருக்கீங்க?.

ம். என்றவன் போலாமா? என்று நகர்ந்தான் அவளிடம் தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தைக்கூட பேச விரும்பாதவனாக நடந்தான் பரத்

விஷ்வாவின் மீது இருக்கும் அதே அளவிற்கான கோபமும், வருத்தமும் அஸ்வினியின் மீதும் உண்டு பரத்திற்கு. ஆனால் அது ஏனோ அவள் முகத்திற்கு நேரே அதை வெளிப்படுத்திவிட மனம் வரவில்லை அவனுக்கு, அவள் ஒரு பெண் என்ற காரணமா? இல்லை முன்பு அவள் மீது அவன் வைத்து விட்ட பாசத்தை இன்னமும் மறக்க முடியவில்லை என்ற காரணமா? அவனுக்கே புரியவில்லை.

Ullam varudum thendral

அவன் பின்னாலேயே நடந்தாள் அஸ்வினி.

ரயிலிலிருந்து இறங்க அவள் கொஞ்சம் தடுமாறிய நேரத்தில் சட்டென அவளை நோக்கி நீண்டதே அவன் கை! இப்போதென்றில்லை அவளை பொறுத்தவரை பரத் எப்போதுமே அப்படிதான்.

அவள் தடுமாறி  நின்ற போதெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவளை நோக்கி நீண்டு விடும் அவன் கைகள். அவள் மீது எப்போதும் ஒரு தனி பாசம் உண்டு அவனுக்கு.

விஷ்வாவும், அப்பாவும் வீட்டை விட்டு போன காலகட்டம் அது. அவன் தனது கல்லூரி படிப்பை முடித்திருந்த நேரம். அஸ்வினி அப்போதுதான் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்திருந்தாள்.

இவள் உடலில் இருந்த அந்த சிறு குறை. பள்ளியில் படிக்கும் வரை அதை பற்றி அவள் கவலைப்பட்டதே இல்லை. பட வேண்டிய சூழ்நிலையும் வந்ததில்லை.

கல்லூரிக்குள் நுழைந்த மாத்திரத்தில் அவளது அந்த நிலை அவளை சுருக்கென்று தைத்தது.

ஆண்களிடமிருந்து கிடைத்த கேலிப்பார்வையும் சரி, பெண்களிடமிருந்து கிடைத்த பரிதாபப்ப்பார்வையும் சரி, இரண்டுமே  அவள் மனதை துண்டாக்கியது..

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவளை சூழ்ந்துக்கொள்வார்கள் அவளது சீனியர் மாணவர்கள். அவள் நடையை கேலி செய்வதும், அவளை வர்ணிப்பதும், அவளிடம் அத்து மீற முயற்சிப்பதுமாய் ...... கல்லூரி  நரகமாய் இருந்தது  அவளுக்கு.

தன்னை தவிர, தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே அழகாக இருப்பதாகவே தோன்றும் அவளுக்கு.

'தன்னாலே அவர்கள் நடக்கும் வேகத்துக்குகூட நடக்க முடியாதே......' நினைக்கும் போதே மனம் துவண்டு போகும்.

எல்லாம் போதுமென்று தோன்றியது. படிப்பு, வாழ்க்கை எதுவுமே வேண்டாமென்று தோன்ற துவங்கியது. கல்லூரிக்கு போவதையே தவிர்க்க துவங்கினாள்

கணவனையும் மகனையும் பிரிந்து, தனது அண்ணனையும் இழந்து அம்மா ரொம்பவே தளர்ந்து போயிருந்த நேரமது. அவளிடம் தனது மனக்குமுறல்களை கொட்டவும் எண்ணம் இல்லை அவளுக்கு.

மனம் உடைந்து  போயிருக்கும் சூழ்நிலையில் பலர் யோசிக்கும் அந்த விஷயத்தையே அவளும் யோசித்தாள் 'தற்கொலை!!!!!!!!!!'

மனப்பக்குவம் இல்லாத அந்த வயதில், அந்த சூழ்நிலையில்  அதைத்தவிர வேறெதுவுமே நினைக்க தோன்றவில்லை அவளுக்கு, .தனது வாழ்கையை முடித்துக்கொள்ள முயன்ற போதுதான் பரத்திடம் பிடிப்பட்டாள் அவள்.

மனதில் இருந்த அழுத்தங்களையும், கண்ணீரையும் மொத்தமாய் சேர்த்து அவன் தோளில் கொட்டினாள் அவள்.

அவளது அத்தனை வலிகளுக்கும் அவனிடம் அப்படி ஒரு மருந்திருக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை அவள்.

சரிம்மா... நீயும் போயிட்டா உங்க அம்மாவோட நிலைமை பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா? கேட்டான் அவன்.

பதில்லை அவளிடம்.

எந்த பிரச்னைக்கும் இது முடிவில்லைமா அவள் தலையை வருடியபடியே சொன்னான் பரத்.

எந்த பிரச்னைனாலும் மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு இருக்கிறது ரொம்ப தப்பும்மா. அப்படியே  வச்சிட்டிருந்தேன்னா இப்படிதான் மனசை தப்பு தப்பா யோசிக்க வைக்கும். பக்கத்திலே இருக்கிறவங்க கிட்டே, பெரியவங்ககிட்டே சொல்லணும் அப்போதான் அதுக்கு ஒரு வழி கிடைக்கும். இனிமே எப்பவும் இப்படி செய்யாதே. மனசிலே இருக்கறதை யார்கிட்டேயாவது சொல்லு. சரியா? நிதானமான குரலில் சொன்னவன் சில நொடிகள் எதையோ யோசித்தபடியே அமர்ந்திருந்தான்.

பின்னர் மேல்லக்கேட்டான். 'ஸோ... உனக்கு காலேஜ் போக பயமா இருக்கு. பிடிக்கலை அப்படிதானே? என்றான் அவன்.

ம்.

நான் எப்பவும் காலேஜ்லே உன் கூடவே இருந்தா, நீ தைரியமா படிப்பியா? கேட்டவனை வியப்பு மேலோங்கப்பார்த்தாள் அஸ்வினி. அது எப்படி நடக்கும்???

சே. .எஸ் ஆர் நோ!!!!. நீ தைரியமா படிப்பியா?

ம்......

குட். நாளைக்கு காலையிலே காலேஜ் போக ரெடியா இரு.

அவளது கல்லூரியிலேயே அவனுக்கு விரிவுரையாளர் வேலை கிடைத்திருந்தது. வேறொரு பெரிய நிறுவனத்தில் கிடைத்திருந்த வேலையை வேண்டாமென ஒதுக்கி விட்டு, சின்ன வேலை என்ற போதும், அவளுக்காகவே இதை ஏற்றுக்கொண்டான்.

காலையில் கல்லூரிக்கு கிளம்பும் போது சொன்னான் அவன் 'நான் உங்க காலேஜ்லே தான் இருப்பேன். ஆனா நான் உனக்கு சொந்தம்னு அங்கே யாருக்கும் தெரியக்கூடாது. சரியா.???

ஏன் அப்படி?

'அது அப்படிதான். உன் பிரச்சனைகளை நீயே எதிர்த்து நிக்க கத்துக்கோ. இன்னைக்கு நான் உன் கூட இருக்கேன். எப்பவும் இருப்பேன்னு சொல்ல முடியுமா? எல்லாத்தையும் தைரியமா face பண்ணு.. பலம்ங்கிறது உடம்பிலே இல்லைமா மனசிலே இருக்கு. உன்னை கேலி பண்றவங்களை தைரியமா நிமிர்ந்து பாரு முதல்லே. அதுக்கப்புறம் எல்லாம் தானே சரியாகும். அதுக்காக உனக்கு ஏதாவது ப்ராப்ளம் அப்படின்னா கண்டுக்காம விட்டுடுவேன்னு நினைக்காதே. என் பார்வை எப்பவும் உன்னை சுத்தியேதான் இருக்கும்' என்றான் பரத்.

அவன் சொன்னதைப்போலவே அவன் பார்வையின் காவல் தனக்கு இருக்கிறது என்ற தைரியத்திலேயே எல்லாவற்றையும் எதிர்க்கொள்ள துவங்கினாள் அவள்.

சில நாட்களிலேயே வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக எளிதாவதுபோல் தோன்றியது.

'உன்னை கேலி செஞ்சவங்களை உன் படிப்பாலேயே அடி' என்பான் அவன். படித்தாள் அவள். அவள் படிப்புக்கும் அவனே குருவானான். பாடங்களை அத்தனை அழகாக புரிய வைப்பான் அவன்.

கல்லூரியில் வார்த்தைக்கு வார்த்தை 'பரத்வாஜ் சார்' பரத்வாஜ் சார் என்பாள் அஸ்வினி . ஆனால் அவன் யார் என்று தனது தோழியரிடம் கூட சொன்னதில்லை அவள்.

ஜெயிக்க துவங்கினாள் அஸ்வினி. அவளது ஒவ்வொரு வெற்றிக்கும் பூரித்து போவான் அவன். படிப்பு முடிந்தவுடனேயே ஒரு பெரிய நிறுவனத்திலும் வேலைக்கிடைத்தது அவளுக்கு.

எல்லாருக்கும் தெரிந்தது அவள் கல்லூரியில் அவன் வேலைப்பார்த்தது மட்டுமே. நடந்தது எல்லாம் இவர்கள் இருவருக்கும் உள்ளேயே இருக்கிறது இந்த நிமிடம் வரை. விஷ்வாவிடம் கூட சொன்னது இல்லை அவள். அவன் கொடுத்த தன்னம்பிக்கையும் தைரியமும் இன்று வரை துணை வருகிறது அவளுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.