(Reading time: 22 - 44 minutes)

 

ண்களை மூடிக்கொண்டு கார் சீட்டில் சாய்ந்திருந்தாள் அவள். மனம் பழைய நினைவுகளில் மூழ்கிக்கொண்டிருந்த நேரத்தில், கார் அவர்களது வீடு வந்து சேர்ந்தது.

முதலில் எதிர்பட்டது வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த இந்து.

'அஸ்...வி.....னி......' அவள் காரிலிருந்து இறங்கிய மாத்திரத்திலேயே  அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள் இந்து. எப்படிப்பா? இப்படி திடீர்ன்னு வந்து நிற்கிறே?

பதில் சொல்லாமல் சிரித்தாள் அஸ்வினி.

பரத் காரிலிருந்து இறங்க, அவனை ஏற இறங்க பார்த்தாள் இந்து.

ஓ!!!!! நம்ம  proffessor தான் உன்னை வந்து கூட்டிட்டு வந்தாரா? உன் மேலே என்ன திடீர் பாசம்?. ரொம்ப நல்லா இருக்கே இது.! இதே பாசம் எல்லார் மேலேயும் வந்திட்டா இன்னும் நல்லா இருக்கும்' அவள் அர்த்தத்துடன் சொல்ல, அவன் சரேலென திரும்பி பார்த்த அந்த ஒற்றை பார்வை அவளுக்கு பதில் கொடுத்து விட்டிருந்தது.,

சின்ன புன்னகை கலந்த பெருமூச்சுடன் பரத்தின் பின்னால் நடந்தாள் அஸ்வினி.

அவர்கள் வீட்டுக்குள் நுழைவதற்குள், எதிர்ப்பட்டார் தாத்தா.

'வாம்மா...' என்றார் புன்னகையுடன்.

'அம்மாவை பார்க்கணும் போலே இருக்கு. 'நான் ஊருக்கு வரேன் தாத்தா. அம்மாகிட்டே இப்போ எதுவும் சொல்ல வேண்டாம். நான் வந்து பார்த்துக்கறேன்'  நேற்றே அவரை அழைத்து சொல்லி இருந்தாள் அஸ்வினி

அவர் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லாமல் அவளை வரவேற்றதை கேள்வியாக  பார்த்துக்கொண்டே, உள்ளே நுழைந்தான் பரத்.

அத்தை கண்ணில் தென்படவில்லை. 'அத்தை எங்கே தாத்தா.'? என்றான் பரத்.

'தூங்கறாபா. அசதியா இருக்கும். பாவம். எழுப்பறேன் இரு.' என்று அவர் நகர

'வேண்டாம் தாத்தா. தூங்கட்டும் நான் குளிச்சிட்டு வந்திடறேன்.' என்றாள் அஸ்வினி.

7.30 மணிக்கு பூஜை அறையில் இருந்தார் மைதிலி. அஸ்வினி வந்ததை யாரும் அவரிடம் அதுவரை சொல்லவில்லை.

அவர் பூஜையை துவங்கி இருக்க அங்கே வந்து பரத்தின் அருகில் நின்றாள் அஸ்வினி.

அவளை கவனிக்காமல் பூஜையில் லயித்திருந்தார் மைதிலி. பூஜையை முடித்துக்கொண்டு  அவர் கற்பூர தட்டுடன் அவர் எழுந்த நொடியில், ஒரு நொடி அவர் இதயம் நின்றே போனது.

என் எதிரில் நிற்பது என் மகளா???? நான் கண்ணுக்குள் வைத்து வளர்த்த என் கண்மணியா??? நம்பவே முடியாமல்தான் பார்த்தார் அவர். இத்தனை நாள் கழித்து தனது அருகில் வந்து நிற்கும் மகளை வாஞ்சையுடன் வருடியது அவள் பார்வை.

அதுவும் தனது கண்ணனின் அருகே அவள் ஜோடியாக நின்ற அந்த காட்சியில் ஒரு நொடி மெய் மறந்துதான் போனார் அவர். அவர் பார்வையின் அர்த்தத்தையும், அவரது அந்த ஒரு நொடி மன சஞ்சலத்தையும் உணர்ந்தவனாக கற்பூரத்தை வணங்கி விட்டு அந்த இடத்தை விட்டு சட்டென அகன்றான் பரத்.

அவனது அந்த செய்கையே அவரை தன்னிலைக்கு கொண்டு வந்தது. மகளின் பக்கம் திரும்பினார் மைதிலி. இரு ஜோடி கண்களிலும் கண்ணீர்.

தன்னை சுதாரித்துக்கொண்டு கற்பூர தட்டை பூஜை அறையில் வைத்துவிட்டு எல்லாரையும் சாப்பிட வர சொல்லுங்கப்பா அருகில் நின்ற தனது தந்தையிடம் சொல்லி விட்டு நகர்ந்தார் அவர்.

மகளை உட்கார வைத்து அவளுக்கு பரிமாறிவிட ஏனோ மனம் தவித்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், மிக சாதரணமாக எல்லாருக்கும் அவரே பறிமாறிக்கொண்டிருந்தார்.

அஸ்வினியின் முகத்தை நிமிர்ந்துகூட பார்க்காமல், ஏதேதோ நினைவுகளுடன் அவளுக்கு பரிமாறிக்கொண்டிருந்த போது தன்னையும் அறியாமல் சட்டென வெளிவந்தது அந்த வார்த்தை 'ராஜாத்தி இன்னும் ஒண்ணு போட்டுக்கோமா'

'ராஜாத்தி' அஸ்வினியை அப்படித்தான் அழைத்து வழக்கம். நீண்ட நாளுக்கு பிறகு அந்த வார்த்தை வெளிவர, சட்டென எல்லார் பார்வையும் அத்தையின் மீதே திரும்பியது.

கண்களை கூட நிமிர்த்தாமல் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார் அவர். அவள் தன்னை விட்டு விலகிய நாள் தான் அவர் நினைவிலாடியது.

ராஜாத்தி நில்லு.....மா. என்னை விட்டு போகாத..ம்மா. ராஜா....த்தி' அவர் கெஞ்சிக்கொண்டே அவள் பின்னால் அவர் நடந்த நிமிடம் இன்னமும் நினைவில் பசுமையாய்..

என் மகன், என் மகள், அவர்கள் எனக்கானவர்கள் என்று ஒரு தாயின் மனதின் ஆழத்தில் இருக்கும் நம்பிக்கையை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத தருணத்தில் உடைத்து விட்டு, நீ எனக்கு வேண்டவே வேண்டாமென்று அவர்கள் தூக்கி எறிந்து விட்டுப்போகும் நிமிடம், அந்த நரகமான நிமிடம் எந்த தாயின் வாழ்விலும் வர வேண்டாம் இறைவா. வரவே வேண்டாம்.' கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார் மைதிலி.

அ....ம்....மா .... என்றாள் அஸ்வினி.

சட்டென திரும்பி அருகில் அமர்ந்திருந்த தந்தையிடம் 'எங்கே வந்திருக்காப்பா இவ? திடீர்ன்னு என்ன அம்மா ஞாபகமாம்? அம்மாகிட்டே ஏதாவது வேலை ஆகணுமா? கேட்டு சொல்லுங்க.

அஸ்வினியின் கண்கள் தனது தாயின் மீதே...... அசைவில்லை அவளிடத்தில்....

என்ன மைதிலி? என்றார் தாத்தா. இத்தனை நாள் கழிச்சு வந்த பொண்ணுக்கிட்டே போய் இப்படி பேசறே.. என்றார் அவர்.

'அப்பா, என் முகத்தை பார்த்து  எனக்கு உன்னை பார்க்கணும்ன்னு தோணிச்சு, நீ வேணும்னு தோணிச்சு அதனாலே தான் கிளம்பி வந்தேன்னு. மனசார ஒரு தடவை அவளை சொல்ல சொல்லுங்கப்பா. அதோட நான் என் கோபத்தையெல்லாம் விட்டுடறேன்'. முடியாதுபா அவளாலே. அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தா இத்தனை நாள் ஒரு போன் கூட பண்ணாம இருந்திருப்பாளா? அப்படி வெறுத்து ஒதுக்குற அளவுக்கு நான் என்ன அவ்வளவு பெரிய துரோகியா? அவளை பெத்தவதானே பா.?  கண்ணீரை துடைத்துக்கொண்டார் அவர்.

நிசப்தம் மட்டுமே நிலவியது அங்கே. சாப்பிடக்கூட தோன்றாமல் தட்டையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் பரத்.

மெல்ல எழுந்தாள் அஸ்வினி. மைதிலியின் அருகே வந்து அவர் தோளை அணைத்துக்கொண்டு அவர் அருகில் குனிந்து சொன்னாள் 'ஆமாம். எனக்கு எங்கம்மாகிட்டே ஒரு வேலையாகணும் அதுக்கு தான் வந்தேன்.'

நீண்ட நாள் கழித்து மகளின் அணைப்பில் கொஞ்சம்  நெகிழ்ந்தவராக மைதிலி  திரும்பி அவள் முகத்தை பார்க்க 'எங்கம்மா சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு. எனக்கு எங்கம்மா சிரிக்கணும். அதை நான் பார்க்கணும். அதுக்கதான் வந்தேன். கூடிய சீக்கிரம் சிரிக்க வச்சிடுவேன்' என்றாள் புன்னகையுடன்.

என்னதான் மனதில் எழுந்த அந்த மன நிறைவை, நெகிழ்வை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்க அத்தை முயன்றாலும், அவருடைய மனதை தெளிவாக படித்துக்கொண்டிருந்தான் அவரையே பார்த்துகொண்டிருந்த பரத். பெற்ற மகளின் அணைப்பில் ஒரு தாயுள்ளம் இத்தனை மகிழ்ந்து குழந்தையாய் மாறிப்போய்விடுமா என்ன?

சாப்பிடுமா என்றாள் அஸ்வினி. நான் உனக்கு பரிமாறவா?

'எனக்கு ஒண்ணும் வேண்டாம். யாரும் வேண்டாம் போடி.' என்று சொல்லிவிட்டு அவளை விட்டு விலகி எழுந்து நடந்தார் மைதிலி. ஆனால் அந்த குரலில் எப்போதும் குடிக்கொண்டிருக்கும் இறுக்கம் குறைந்திருந்தது போலே தோன்றியது பரத்துக்கு.

சாப்பிட்டு முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பி விட்டிருந்தான் பரத். இரண்டு நாட்கள் விடுப்பு எடுக்க நினைத்திருந்தவனின் மனம், நேற்று அபர்ணாவிடமிருந்து வந்த அழைப்புக்கு பிறகு  மாறிவிட்டிருந்தது.

'அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே கிளம்பி விட்டிருந்தான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.