(Reading time: 46 - 92 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 28 - புவனேஸ்வரி கலைச்செல்வி

பிராமியின் பேச்சுக்கு தலை அசைத்துவிட்டு வந்த மீரா கிருஷ்ணனை போனில் அழைத்தாள் ..

" கண்ணம்மா " என்றவனின் குரல் கேட்டு, கரைந்துதான் போனாள்  அவள் ..

" ஹெலோ .. கண்ணம்மா இருக்கியாடா ??"

VEVNP

" கண்ணா .. அத்தை ... அத்தை .. நம்மை "

" தெரியும்டா ..அம்மா சொன்னாங்க "

" பிசினஸ் விஷயம் தானே கண்ணா ? நீங்க மட்டும் போய்ட்டு போய்ட்டு வர முடியாதா ? ஒரு வருஷம் எப்படி நாம நம்ம வீட்டை பிரிஞ்சு அங்க இருக்க முடியும் ? நம்ம ஆபீஸ்லையே திறமையான யாரையும் அனுப்ப முடியாதா ?"

அவளின் கேள்விகளில் ஒன்றை மட்டும் புரிந்துக் கொண்டான் கிருஷ்ணன் .. அவனின் தாயார் உண்மையை அவளிடம் சொல்லவில்லை போலும் ..  அவனக்குமே இப்போதைக்கு சொல்லாமல் இருப்பதே சரி என்று தோன்றியது . உண்மையை சொன்னால் அவள் துவண்டு போக வாய்ப்புகள் உண்டு ..அதையும் மீறி அவள் இதற்கு ஒத்துழைப்பாள்  என்ற நம்பிக்கையும் அவனுக்கு குறைவாகவே இருந்தது எனலாம் .. ஏனென்றால் இந்த ஆறு மாதங்களில் அவள் அவன் குடும்பத்துடன் ஏற்படுத்திக் கொண்ட பிணைப்பு அப்படி. சூர்யா முதல் ஜானகி அனைவருமே அவளை சார்ந்துதான் இருந்தனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதும் குடும்பத்தை நிர்வாகிப்பதையுமே முக்கிய கடமையென இருந்தாள்  மீரா . ஒரு புறம் தனது தாய் எடுத்த முடிவு கஷ்டம் என்றாலும் கூட இன்னொரு புறம் அவர் பேச்சில் இருக்கும் நியாயம் அவனுக்கு புரிந்தது .. நெகிழ்ந்துதான் போனான் அவரின் அன்பில் .. அவன் சிந்தனையில் இருக்கும்போதே அவள் தொடர்ந்து பேசினாள் ..

" உங்களுக்கே தெரியும் கிருஷ்ணா ... கல்யாணத்துக்கு பிறகுதான் லைப் ஏ  பூர்த்தி அடைஞ்ச மாதிரி உணருறேன்... அதுனாலத்தானே நான் வேலையை கூட ரிசைன்  பண்ணேன் ... இப்போ இதே குடும்பத்தை விட்டுட்டு கண்காணா தேசத்தில் எப்படி  இருக்க முடியும் " என்றவளின் குரல் தழுதழுத்தது ..

" இது பாரு கண்ணம்மா , என்னால மட்டும் இது முடியும்னு நினைக்கிறியா டா .... கொஞ்ச நாள்தான் டா "

" ...."

" ஒரு மூணு நாலு மாசத்தில் திரும்பி வந்திடலாம் " என்றான் சமாதானமாய் ..

" நிஜம்மாவா கண்ணா ? " என்றவளின் குரலில் மீண்டும் கொஞ்சம் உற்சாகம் பிறந்தது ..

 " ம்ம்ம் ஆமா " என்றவன் இல்லை என்பது போல தலை அசைத்தான்.. அவனருகில் இல்லாத காரணத்தினால் தனக்காக அவன் பொய் சொல்வது  அவளுக்கு தெரியாமல் போனது .. கிருஷ்ணனுக்கும் இப்போதைய தேவை அவளின் நிம்மதி மட்டுமே என்பதால் கொஞ்சம் உற்சாகமாகவே பேச்சை தொடர்ந்தான் ..

" ஆமாடி பொண்டாட்டி .. நான் மலேசியாவிற்கு இதுக்கு முன்னாடியே போயிருக்கேன் .. அப்போ கூட நினைப்பேன் இங்க இருக்குற அழகை ரசிக்க பக்கத்துல யாரும் இல்லையேன்னு .. ஆனா இப்போ பாரு என் செல்லத்தையே நான் கூட்டிட்டு போக போறேனே .. எனக்கு எவ்ளோ சந்தோசம் தெரியுமா .. அப்படியே  ஒரு ஹனிமூன் போனது போல இருக்கும் " என்றான் கிறக்கமான குரலில் ..

“எதை பேசினாலும் கடைசியா பேச்சை அங்கேயே நிறுத்துறது .. ரொம்ப மோசம் நீங்க "

" ம்ம்ம்ம்கும்ம்ம்ம் என் நேரம் டீ ... யாரு நான் மோசமா ?  நான் பாட்டுக்கு சிவனேன்னு வேலைய பார்த்துகிட்டு இருக்கும்போது நீ மோகினியாட்டம் மயக்கிட்டு போவ, சரின்னு கிட்ட வந்தா, அத்தை கூப்டுறாங்க, ஆட்டுக்குட்டி கூப்பிடுறாங்கன்னு ஓடி போயிருவ "

" அதெல்லாம் அப்படித்தான் .. நான்தானே ஓடினேன் .. உங்களை பின்னால் வர கூடாதுன்னு உங்க கை காலையா கட்டிப் போட்டேன் ? "

" அப்படி போட்டிருந்தாலும் பரவாயில்ல .. நீதான் பார்வையாலேயே வசியம் பண்ணுறியே "

" அடடே .... உங்க பேச்சே சரி இல்லை .. ஆபீஸ் ல இருக்கிங்கன்னு ஞாபகம் இருக்கா உங்களுக்கு ? எனக்கு இங்க ஆயிரம் வேலை இருக்கு .. நீங்க முதலில் போனை வைங்க..  "  என்று சிரித்தபடியே போனை அணைத்தாள் ... அவள் பேசி முடித்தப்பின்னும் போனையே பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன் ..

" மன்னிச்சிரு கண்ணம்மா .. நான் உன்கிட்ட எப்பவும் உண்மையா இருக்கணும்னு தான் நினைக்கிறேன் .. இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிருடா .. நாம மலேசியா போனதுமே நான் உண்மையை சொல்றேன். எல்லாம் சரி ஆகிடும்டா .. நான் உன்கூடவே தான் இருக்கேண்டா.. ஐ லவ் யு கண்ணம்மா ..இப்பவும் எப்பவும் ஐ லவ் யு டா  "

மீராவும் அவர்களது அறையில் அமர்ந்து சிந்தனையில் தான் இருந்தாள் .. இந்த ஆறு மாதங்களில் எவ்வளவு ஒன்றிவிட்டேன் நான் இந்த குடும்பத்தோடு என்று சிலிர்த்துக் கொண்டாள் ... தான் கடந்துவந்த நாட்களை மீண்டும் அசைபோட்டாள் .. வாங்க நாமும் கடந்த ஆறு மாதங்களில் நம்ம ஜோடிகள் என்னென்ன பண்ணாங்கன்னு  பார்ப்போம் ..

றுமாதங்களுக்கு முன்பு,

" போய்ட்டு வரோம்  தாத்தா  , வரோம் பாட்டி " என்று அவர்களிடம் இருந்து விடைபெற்றனர் அனைவரும் .. கலங்கிய விழிகளை துடைத்து கொண்டே பேசினார் தாத்தா ..

" அடடே என்ன பழக்கம் பா இது?  எங்க போக போறீங்க ? இங்க இருக்குற பட்டினம் தானே ? இதுக்கு ஏன் அழனும் ? எங்களை பார்க்கணும் போல இருந்தா உடனே வந்துருங்க " என்றார் இலகுவாய் ..

அனைவருக்குமே அவர்களை பிரிய மனமே இல்லை .. எப்போதும் கலகலப்பாய் பேசும் மது கூட அமைதியாகத்தான் இருந்தாள் ... அதை கவனித்த தாத்தா " இது பாரு கேர்ள்  ப்ரண்ட் , அவங்க எல்லாரும் என்னை பார்க்க வரலன்னா கூட நான் மன்னிசிடுவேன்.. ஆனா நீ என்னை பார்க்காம இருந்த அப்பறம் நான் உன்கிட்ட பேசமாட்டேன் சொல்லிட்டேன் " என்று செல்லாமாய் மிரட்டினாள் ..

மதுவும் " கண்டிப்பா பாய் ப்ரண்ட் ..உங்களை பார்க்காமல் நான் எப்படி இருக்க போறேன்னு தெரியலையே கோபால் ..தெரியலையே " என்றாள்  சரோஜா தேவி அவர்களை போல ..

" நான் கோபாலா " என்று தாத்தா  கேட்க, களுக்கென சிரித்த மித்ரா " கோபால் அவளுடைய சென்னை லவ்ஸ் போல "என்று வாரினாள் ..மதுவோ நேராய் ஷக்தியிடம்  " மிஸ்டர் ஷக்தி உங்க அத்தை பொண்ணு பத்திரமா வீடு சேரணும்னா கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லுங்க " என்று மிரட்டினாள் ... அவர்களின் பேச்சை திசை திருப்பும் வண்ணம் ரகுராம் ஏதோ பேசிக்கொண்டு இருக்க, தாத்தா பாட்டியிடம் மீண்டும் ஆசிர்வாதம் வாங்கினான் அர்ஜுனன் ..

" இங்கிருந்து போக மனசே இல்லை தாத்தா .. கண்டிப்பா இனி அடிக்கடி வருவோம் .. நீங்களும் ஒரு தடவையாவது அங்க வந்துட்டு போங்க ... உடம்பை பார்த்துகோங்க . என் போன் நம்பரும் உங்ககிட்ட இருக்குதானே ? எதுவாக இருந்தாலும் எனக்கு போன் பண்ணுங்க " என்றான் ...

" கண்டிப்பா தாத்தா இனி அடிக்கடி வருவோம் " என்றான் அர்ஜுனன் ..

அபிராமியும் " ஆமா மாமா .. மருமகள்க ரெண்டு பேருக்கும் நம்ம வீட்டு பழக்கவழக்கம் எல்லாம் பழகிடட்டும்  நாங்களும் பொறுப்பை அவங்க கையில் ஒப்படைச்சிட்டு உங்களோடவே இருக்குறோம் " என்றார் .. அவரின் கருத்துக்கு சிவகாமி , சூர்யா, சந்துரு  மூவருமே " ஆம் " என்று ஆமோதித்தனர் ..

" ரொம்ப சந்தோசம்ம்மா " என்றார் வள்ளி பாட்டி .. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தங்களது பரம்பரை நகையை பெண்கள்  அனைவருக்குமே பங்கிட்டு தந்தார் பாட்டி ..

" அச்சோ என்ன பாட்டி .. எங்களுக்கு இதெல்லாம் ? " என்று வாய்விட்டு கேட்டனர் மதுவும் மித்ராவும் ..

" அட இதெல்லாம் போகும்போது நாங்க கொண்டு போகவா போறோம் ?.. இதுல என்ன இருக்கு நீங்களும் எங்களுக்கு பேத்தி மாதிரி தானே " என்றார் ஆத்மார்த்தமாய் .. அனைவருமே கண்கலங்கி நின்றனர் ..

" சரி சரி .. நேரமாகுது .. எல்லாரும் பத்திரமா கிளம்புங்க "

பிரியமனமில்லாமல் திரும்பி சென்றனர் அனைவரும் ..

" என்ன வள்ளி இது சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு "

" கஷ்டமா இருக்குங்க "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.