(Reading time: 10 - 20 minutes)

நாம ஏன் ராமு அங்கிள் தற்கொலை முயற்சி பண்ணினதை முன்னாடி நடந்தா மாதிரி சொல்லணும். அவர் பணம் கிடைக்கலை, போலீஸ்க்கிட்ட இருந்தும் பதில் வரலைங்கற மன வருத்ததுல இப்போ பண்ணிட்டா மாதிரி செட் பண்ண முடியாதா?”

“இதுவும் நல்ல யோசனையாதான் இருக்கு கௌரி. என்ன ராமன் சார் உங்க நண்பர் இதுக்கு ஒத்துக்குவாரா?”

“கண்டிப்பா பணம் திருப்பி கிடைக்க இதுதான் வழின்னா கண்டிப்பா ஒத்துப்பான். அதோட இன்னும் ஒருத்தர் இருக்கார். எனக்கு ரொம்ப தெரிஞ்சவர், அவரும் இந்த மோசடியால பாதிக்கப்பட்டவர். அவர்கிட்டையும் பேசிப்பார்க்கறேன். அவரும் ஏதானும் ஒரு விதத்துல கண்டிப்பா உதவி செய்வார்.”

“ராமன் ரொம்பப் பேர் கிட்ட சொல்லாம இருக்கறது நல்லது. ஏன் சொல்றேன்னா நாம செய்யறது நாடகம் அப்படின்னு தெரிஞ்சு போச்சுன்னு வச்சுக்கோங்க, அப்பறம் பாடுபட்டது அத்தனையும் வீணாப் போய்டும்.”

“இல்லை சார். அவரைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். கண்டிப்பா யார் கிட்டயும் சொல்ல மாட்டாரு.”

“உங்க நண்பர் தற்கொலை முயற்சி, அதோட சேர்ந்து இறந்து போன குடும்பத்தையும் மீடியாக்கூட பேச வச்சோம்ன்னா விஷயம் கொஞ்சம் சீரியஸ்ஸா ஆகிடும். என்ன சொல்றீங்க”

“சரி பாலு. நான் ராமுகிட்டயும், ஆனந்தன் கிட்டயும் பேசிட்டு உங்களுக்கு சொல்றேன். அப்பறம் எப்படி பண்றதுன்னு எல்லாரும் ஒண்ணா உக்கார்ந்து பேசலாம்”

“ராமன் முடிஞ்சா இப்போவே அவங்க ரெண்டு பேருக்கும் போன் போட்டு இங்க வரச் சொல்லுங்களேன். நாம உக்கார்ந்து பேசி இன்னைக்கு ஒரு முடிவுக்கு வந்துட்டோம்ன்னா நான் திங்கக்கிழமை எங்க மேலதிகாரிகள் கிட்ட பேசும்போது சுலபமா இருக்கும்”, என்று பாலு கூற, ராமன் ராமுவையும், ஆனந்தனையும் கைபேசியில் அழைத்து மணி வீட்டிற்கு வரும்படி கூறினார்.

டுத்த அரை மணியில் ராமுவும், ஆனந்தனும் வந்து சேர, ராமன் அவர்களுக்கு பாலுவை அறிமுகப்படுத்தி அவர்கள் அதுவரை பேசியதை எடுத்துக் கூறினார்.

“ஹ்ம்ம் எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை பாலு சார். பணம் திரும்பக் கிடைக்க இது ஒரு வாய்ப்பா இருக்கும்ன்னா ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது. ”, என்று ராமு அவர்களின் திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டினார்.

“ஆமாம் பாலு சார் எனக்கும் இது நல்ல திட்டமாத்தான் தெரியுது. அதோட கூட எனக்கு இன்னொரு யோசனை தோணுது.”

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க ஆனந்தன்.”

“இல்லை ராமு சார் மட்டும் தற்கொலைக்கு முயன்றா மாதிரி சொல்றதை விட நானும் சேர்ந்து அந்த முயற்சி பண்ணினதா சொல்லலாம். அப்போ இன்னும் கொஞ்சம் மக்கள் கவனத்தை ஈர்க்க முடியும். என்ன சொல்றீங்க.”

“அது ரெண்டு பேரும் ஒரே நேரத்துல அந்த மாதிரி பண்ணினா சரியா வருமா ஆனந்தன்.”

“அதுல ஒண்ணும் பிரச்சனை வராது ராமன் சார். நான் இருக்கறது சென்னைல ஒரு கோடி , ராமு இன்னொரு கோடி. ரெண்டாவது ரெண்டு பேருக்கும் உறவு முறைலையோ, இல்லை நட்பு முறைலையோ எந்த சம்மந்தமும் இல்லை. அதனால சந்தேகமே வராது”

“ஆமாம் ராமன், ஆனந்தன் சொல்றா மாதிரி ஒருத்தர் அப்படிங்கும்போது அத்தனை பாதிப்பு இருக்காது. இதே மூணு, நாலு பேர் அப்படின்னா பாதிப்பு மிகப் பலமா இருக்கும். இன்னும் ரெண்டு பேர் கூட சேர்த்துக்கலாம்.”

“இல்லை நிறைய பேர் வேண்டாம். எப்படியானும் விஷயம் வெளிய பரவிடும். நீங்க ரெண்டு பேர் மட்டும் போதும். சரி நான் எங்க மேல் அதிகாரிங்க கூடப் பேசிட்டு உங்களுக்கு எப்படி பண்ணலாம்ன்னு சொல்றேன். ராமன் கௌரி கல்யாணத்துக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு?”

“நவம்பர் மூணாவது வாரம், இன்னும் ஒரு நாலு வாரம் இருக்கு பாலு”

“ஓ அப்போ நம்ம பிளானை நாம இந்த வாரத்துக்குள்ள செயல்படுத்தணும்.   அப்போதான் கல்யாணத்தும்போது நீங்க ப்ரீயா இருக்க முடியும்.”

“அதுவும் கரெக்ட்தான். ராமு, ஆனந்தன் நீங்க ரெண்டு பேரும் எதுக்கும் ஒரு வாட்டி வீட்டுல இருக்கறவங்க கூட இன்னைக்கே பேசிடுங்க. சப்போஸ் அவங்க ஒத்துக்க முடியாதுன்னு சொன்னாலும் நாளை ஒரு நாள் இருக்கு.வேற யோசிக்க நமக்கும் வசதியா இருக்கும்”

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இருக்காது ராமன். நாம ப்ரோசீட் பண்ணலாம். தேதி, இடம் மட்டும் அப்பறமா முடிவு பண்ணிட்டு சொல்லுங்க”, என்று கூறிவிட்டு, அனைவரிடமும் விடை பெற்று ராமுவும், ஆனந்தனும் கிளம்பினார்கள்.

“பாலு, நீங்க எந்த சேனல்க்கு நியூஸ் கொடுக்கறதா இருக்கீங்க?”

“நிலா தொலைக்காட்சிக்குதான் தரலாம்ன்னு இருக்கோம். இப்போதைக்கு அவங்கதான் அந்தக் கட்சிக்கு எதிரா இருக்காங்க”

“ஓ அப்படியா. என் பையனோட நண்பனோட அண்ணா அங்கதான் வேலை செய்யறார் போல. நாம ஏதாவது வேணும்ன்னா அவர்க்கிட்ட உதவி கேட்டுக்கலாம். இல்லை ப்ரோக்ராம் டெலிகாஸ்ட் ஆகர வரை விஷயம் வெளில போகாமையும் பார்த்துக்கலாம்”

“கண்டிப்பா ராமன். நான் திங்கக்கிழமை சாயங்காலமா உங்களுக்கு போன் பண்றேன். அப்போப் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். பத்துகிட்டையும் நாம பேசினதை சொல்லிடுங்க”

“கண்டிப்பா. வீட்டுக்கு போன உடனே சம்மந்திக்கு போன் சொல்லிடறேன். அவரும் நாம என்ன முடிவு எடுத்தோம்ன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருப்பார். அப்போ நாங்களும் கிளம்பறோம். திங்கக்கிழமை சாயங்காலம் உங்க போன்க்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்”, என்றபடியே பாலுவிடம் விடை பெற்று ராமனும், கௌரியும் கிளம்நினார்கள்.

வீட்டைச் சென்றடைந்து ஹரியிடமும், ஜானகியிடமும் அன்று பேசியதைக் கூறி, பின் பத்துவிற்க்கும் விஷயத்தை போன் மூலம் தெரிவித்தார் ராமன்.

“ஏன்னா, இதெல்லாம் சரியா வருமா. இப்படி திரும்ப தற்கொலை அது இதுன்னா அவாத்துல இருக்கறவாளுக்கு எத்தனை கஷ்டமா இருக்கும். அதுவும் இப்போதான் ராமுவாத்துல கொஞ்சம் தேறி வந்திருக்கா. மறுபடியும், மீடியா அது இதுன்னா அவாளுக்கு திரும்ப மனக்கஷ்டம் ஆகாதா. அதே மாதிரி அந்த இறந்து போனவரோட மனைவி இன்னமும் அதிர்ச்சிலேர்ந்து வெளில வந்து யாரோடையும் பேசக் கூட ஆரம்பிக்கலை. ஏற்கனவே நொந்துப் போய் இருக்கறவாளை இன்னமும் கேள்வி கேட்டு நோகடிக்கணுமா?”

“நீ சொல்றது வாஸ்த்தவம்தான் ஜானகி. ஆனால் அவனைக் கார்னர் பண்றதுக்கு வேற வழி இல்லையே. கௌரி கல்யாணம் நிக்கறதை சொன்னாலும் அது அத்தனை பாதிப்பை ஏற்ப்படுத்தாது.   பார்க்கலாம், முடிந்த வரை அவாளை ரொம்பக் கேள்வி கேக்காம பாத்துக்க வேண்டியதுதான். ஹரி நீ உன் friend கிட்ட பேசினியா?”

“அப்பா நான் கெளதம் கிட்ட இன்னைக்கு பேசினேன். அவனோட அண்ணா நியூஸ் டிவிஷன்லதான் வேலையா இருக்கார். எப்போ என்ன ஹெல்ப் வேணும்னாலும் சொல்லு, கண்டிப்பா பண்ணுவாருன்னு சொன்னான்”

“சரிடா ஹரி. பாலு சார் போன் வந்ததுக்கு அப்பறமா அவாக்கிட்ட சொல்லலாம். இப்போவே அவசரப்பட வேண்டாம்”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வாசலில் அழைப்பு மணி ஒலிக்க, கதவைத் திறந்த கௌரி அங்கு நின்றிருந்தவர்களைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். 

தொடரும்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.