(Reading time: 11 - 22 minutes)

திர்ஷ்டவசமாக அவர்களை கடந்து சென்ற காரை அவன் நிறுத்தி அந்த ஓட்டுனரிடம் பேச, சில நிமிடங்களில் காரில் புறப்பட்டு விட்டிருந்தனர்.

அந்த நீர் நிலையையே சுற்றி சுற்றி வந்தது அந்த புகை வடிவம். காற்று வேகமாக வீசத்துவங்க,  சாய்ந்து கிடந்த மரத்தின் அருகில் வந்தது அது. அந்த மரக்கிளையில் சிக்கி இருந்தது அவளது ஒற்றை கொலுசு. காற்றின் வேகத்தில் மெல்ல அசைந்து மெலிதாக ஒலி எழுப்பியது அந்த கொலுசு.

அம்......மா அம்.. மா ...... அம்மா.... வலிக்குது...... சற்றுமுன் ஒலித்த அவள் குரல் அந்த பகுதியில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.

'மாது.....ம்ம்மா...., கொஞ்சம்  தளர்ந்து போய்  அந்த கொலுசின் அருகிலேயே நிலைக்கொண்டது அது..

சிறிது நேரத்தில் மருத்துவமனையை அடைந்திருந்தனர் முகுந்தனும், மாதங்கியும்.

அவளது கணுக்காலில் ஏற்பட்டிருந்த சின்ன எலும்பு முறிவை தவிர இருவருக்குமே பெரிய காயங்கள் இல்லை.

சில மணி நேரத்தில் தாத்தாவும் கண் விழித்திருந்தார்.

மறுநாள் அதிகாலை ஐந்தரை மணிக்கு அவனது  வீட்டுக்கு டாக்சியில் வந்து இறங்கினர் முகுந்தனும் மாதங்கியும்.

வீட்டு கேட்டை தாண்டி உள்ளே நுழைந்த நிமிடத்திலேயே அவளை கவர்ந்து இழுத்தது அங்கே நிலவிய அமைதி. பெரிய மாளிகையாக இல்லா விட்டாலும், சற்றே பெரிய வீடுதான் அது.

வீட்டை சுற்றி வாழை மரம், மாமரம், பூச்செடிகள் என கனிகளும், பூக்களுமாக நிறைந்திருந்தது அந்த வீட்டு தோட்டம். அதிகாலை பறவைகளின் சத்தம் அவளை வரவேற்றது.

காலிலிருந்த கட்டுடன் கொஞ்சம் சிரமப்பட்டே நடந்தாள் மாதங்கி. வீடு வாசலை நெருங்க வெளியே வந்து வரவேற்றனர் அவனது பாட்டியும், முகுந்தனின் அண்ணி கவிதாவும்.

அண்ணியின் கையில் இருந்தது குழந்தை. இவள் அதை நோக்கி கை நீட்ட. சட்டென இவளை நோக்கி தாவி விட்டிருந்தது அது.

'அப்பூ குட்டி தானே நீ? ' என்றபடியே குழந்தையை அள்ளி முத்தமிட்டாள் மாதங்கி.

சிறிது நேரத்தில் தாத்தாவும் வீட்டுக்கு வந்து விட்டிருந்தார். இருவரையும் நலமோடு பார்த்தபிறகே அவரிடம் நிம்மதி பிறந்தது.

குளிச்சிட்டு வந்து விளகேத்துமா என்றார் மாதங்கியிடம்.

குளித்துவிட்டு பூஜை அறையை அடைந்தாள் மாதங்கி. அங்கே இருந்த விளக்குகளை ஏற்றினாள் அவள். உடல் சிலிர்த்தது அவளுக்கு. பூ மாலைகளுடன் மின்னிகொண்டிருந்த அந்த அம்பிகையின் விக்கிரகத்தையும் அதன் முன்னே மிளிர்ந்து கொண்டிருந்த அந்த தீபங்களையும் பார்க்கும் போதே அவளுக்குள்ளே அமைதி பிரவாகம்.

'கொஞ்ச நாள் நீ இந்த வீட்டை விட்டு எங்கேயும் போகாதே மா. எல்லாம் நல்ல படியா நடக்கும். சொன்னார் தாத்தா.

புன்னகையுடன் தலை அசைத்தாள் மாதங்கி.

வீட்டில் இருக்கும் எல்லார் பேச்சிலும், நடவடிக்கைகளிலும் அன்பு மட்டுமே நிறைந்திருப்பதை அவளால் நன்றாக உணர  முடிந்தது.

தாத்தாவின் பூஜா பலன்களும், அங்கே தினசரி ஒலிக்கும் மந்திர ஒலிகளின் சக்தியும், அந்த வீட்டில் இருக்கும் யாருக்கும் தீங்கு நினைக்காத நல்ல உள்ளங்களின் சங்கமும் அந்த வீட்டுக்கே ஒரு தெய்வீக சக்தியை கொடுத்திருந்தது.

எந்த எதிர்மறை சக்தியும் அந்த வீட்டுக்குள் கண்டிப்பாக நுழைய முடியாது தெளிவாக புரிந்தது அவளுக்கு,

நிம்மதியாக கழிந்தன நான்கு நாட்கள்.

இன்னும் இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம். அது முடிந்த ஒரு வாரத்திலேயே அவர்கள் திருமணம் என முடிவாகி இருந்தது.

அதை மாதங்கியின்  மாமாவிடம் சொல்லி இருந்தார் தாத்தா.

அந்த செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து அவளது இரண்டு அக்காவினுள்ளும் புகைச்சல். அதை அறிந்துதான் இருந்தார் அவளது மாமா.

அங்கே இவர்கள் சென்றால் ஏதாவது பிரச்சனையை கிளப்ப நினைப்பார்கள் என்று புரிந்தவாரக சொன்னார். 'நிச்சியத்திற்கு நாம யாரும் போக வேண்டாம். கல்யாணத்துக்கு காலையிலே போனா போதும்.

அது எப்படிங்க? என்றாள் பெரியவள் சுமதி. நாம போகலைன்னா மாதங்கி வருத்தப்பட மாட்டாளா? உள்ளே பொங்கிய  பொறாமையை மறைத்துக்கொண்டு, பொய்யான அக்கறை பூச்சுடன் வெளி வந்தது அவள் குரல்.

'ஒண்ணும் வருத்தப்பட மாட்டா' என்றார் அழுத்தமாக. மாதங்கியின் சந்தோஷத்தில் எந்த தடையும் வருவதை விரும்பவில்லை அவர்.

'நம்ம சார்பா நான் யாரையாவது அனுப்பி வெச்சுக்கறேன். என்னை மீறி நீ போக நினைச்சா. அப்படியே போயிடு. மறுபடியும் இந்த வீட்டுக்குள்ள நீ வர முடியாது' அவர் குரலில் இருந்த தீவிரம் சுமதியின் மனதில் ஒரு கலக்கத்தை உருவாக்கத்தான் செய்தது. அவரை மீறி செல்லும் தைரியம் இல்லை அவளுக்கு.

இதையெல்லாம் கேட்டபடியே நின்றிருந்தாள் மாதங்கியின் இரண்டாம் தங்கை ராஜி.

'இல்லை. மாதங்கி  சந்தோஷமாக இருக்க கூடாது' பற்றி எரிந்தது அவளுக்குள்ளே.

அவர்களது அம்மாவுக்கு எப்போதுமே மாதங்கி என்றால் உயிர். சின்ன வயதில் எனக்கு கிடைக்க வேண்டிய அம்மாவின் அன்பையெல்லாம் பறித்துக்கொண்டவள்தானே இந்த .மாதங்கி. அதனாலேயே அம்மாவுக்கு பின்னர் அவளுக்கு எந்த மகிழ்ச்சியும் கிடைத்து விடக்கூடாது என்பதில் குறியாய் இருந்திருக்கிறாள் ராஜி.

இப்போது எங்கிருந்து வந்தானோ இந்த டாக்டர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை அள்ளிக்கொண்டு சென்று விட்டானே? இவளுக்கு டாக்டர் கணவனா? மாளிகை வாசமா? நடக்கவே கூடாது இது.

அன்று. மதியம் முகுந்தன் வீடு முகவரியை தேடி எடுத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பி விட்டிருந்தாள் ராஜி.

அன்று மாலை நேரம் ஆறு மணியை தொட்டுக்கொண்டிருந்தது. கொஞ்சம் நடக்க துவங்கி இருந்தாள் மாதங்கி.

முகுந்தனுடன் அவர்கள் வீட்டு தோட்டத்தில் நடந்துக்கொண்டிருந்தாள் அவள். அவன் கையில் இருந்தது குழந்தை அபூர்வா.

இருள் சூழ துவங்கி இருந்தது. பேசிக்கொண்டே திரும்பியவளின் பார்வை அவர்கள் பக்கத்து வீட்டில் சென்று நின்றது.

கொஞ்சம் வித்தியாசமான பழைய வீடாக தெரிந்தது அது.

இது யார் வீடு? வீடே வித்தியாசமா இருக்கு! என்றாள் மாதங்கி அவன் பக்கம் திரும்பி.

அதுவா? அது ஒரு பாட்டியோட வீடு. வீட்டிலே அவங்க மட்டும் தான் இருக்காங்க அவங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் கிடையாது. அவங்களால சரியா நடக்ககூட முடியாது. வீட்டை விட்டு வெளிய வரவே மாட்டாங்க சொல்லிக்கொண்டே முகுந்தன் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருக்க......

அப்படியா? என்றபடி மறுபடியும் அந்த பக்கம் திரும்பினாள் அவள்.  அந்த வீட்டு வாசலில் உள்ள கொடியில் ஒரு சிவப்பு நிற புடவை காய்ந்துக்கொண்டிருந்து. ஏனோ அந்த புடவை மாதங்கியை ஈர்த்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

சில நொடிகளில் அந்த புடவை காற்றில் ஆடி பறந்து கொஞ்சம் விலக அதன் பின்னால் தெரிந்தது அந்த கிழவியின் உருவம். .

கொஞ்சம் குள்ளமாக சுருங்கிய தோலும், சிவந்து போன கண்களுமாக நின்றிருந்த அந்த கிழவியை பார்க்கவே திடுக்கென்றது மாதங்கிக்கு,

தனது பழுப்பு நிற பற்களை காட்டி மெல்ல சிரித்தாள் அந்த கிழவி.

தனது கைகளை  மாதங்கியை நோக்கி நீட்டி  வாவென அழைத்தாள் அவள்.

பயத்தில் தடுமாறிப்போய், இரண்டடி பின் வாங்கி முகுந்தன் மீது மோதிக்கொண்டு திரும்பினாள் மாதங்கி.

என்னாச்சுடா.? என்றான் அவன் அவள் விழிகளில் நிரம்பி இருந்த திகிலை உணர்ந்தபடி.

அது .... என்றபடி அவள் அந்த வீட்டை நோக்கி திரும்ப அங்கே புடவையும் இல்லை அந்த கிழவியும் இல்லை.

தொடரும்...

Episode # 05

Episode # 07

{kunena_discuss:781}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.