05. என்னைத் தந்தேன் வேரோடு - Anna Sweety
ஆதவன் வரப்போவதின் அறிகுறி தெரியவும், தெரிந்த வெளிச்சத்தில் மேல் நோக்கி நடக்க தொடங்கினர் மிர்னாவும் வியனும். நேற்றைய உற்சாகம் அப்படியே இருந்தது அவனிடம். ஆனால் அவள் மௌனமாக வந்தாள்.
“ரொம்ப டயர்டா இருக்குதோ மிர்னா....?ரொம்ப டல்லா இருக்கீங்க...சாரி என்னால தான்...” வியன் உண்மையாய் வருந்தினான்.
“டயர்டாலாம் இல்ல வியன்...வாட் நெக்ஸ்ட்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்...”
“வாட்....ஆச்சர்யமா இருக்குதே.....அடுத்து என்னன்னு தெரியலைனா அது மிர்னாவே கிடையாதே...” போலி ஆச்சர்யத்துடன் அவளை மேலும் கீழுமாக பார்த்தான்.
“நேத்து என் கூட இருந்த பொண்ணுதானா இது..? வேற யாரையும் நான் மாத்தி கூட்டிட்டு வந்துடலையே....? நான் என் அண்ணியோட அக்காவ ஸேஃபா கூட்டிட்டு போய் சேர்க்கனும்...”
“ வேரியோட அக்காவத்தான் நானா? மத்தபடி நான் உங்களுக்கு எதுவும் கிடையாதா வியன்...?”
கேட்டேவிட்டாள் மிர்னா. நிமிர்ந்து அவன் முகம் பார்த்த அவள் முழுவிழிகளிலும் காதல் யாசகம்.
காதலை யாசிக்க கூடாதுன்னு காதலிக்காதவங்க மட்டும்தான் சொல்லமுடியும்.
அப்படியே அவளை இழுத்தணைத்து, நேற்று இட்டிருந்த மை இன்னும் விலகாத அந்த முட்டை கண்களில் மெல்லியதாய் ஒரு முத்தமிட வந்தது ஒரு எண்ணம் அவனுக்கு.
“கண்ணா..எனக்குன்னு ஒரு நிலை இருக்குது...அதை தாண்டி என்னால வரமுடியாதுடா....அது சரியாவும் வராது...”
அவனுடைய கண்ணாவில் அப்படியே கரைந்து போனாள் பெண். இத்தனையாய் இதுவரை எந்த வார்த்தையும் அழைப்பும் அவள் இதயத்தை குழைத்து கலைத்ததில்லை. சுகப்ராவகம். துன்ப ஓதம். எல்லாம்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன் அதன்பின் எதுவும் பேசவில்லை.
சில நிமிட மௌன நடை.
தன் உணர்வுகளை அடக்க போராடிக்கொண்டிந்தாள் மிர்னா. அதில் ஓரளவு வெற்றியும்...
பக்கத்திலேயே அந்த தார் பாதை பார்வைக்குப் பட்டது.
விரைவில் இவனைப் பிரிந்து தொடங்க வேண்டும் தனிப் பயணம்.
அவ்வளவுதான் அதை அவள் உணர்ந்த நொடி, அதுவரை சமாளிக்கலாம், தாண்டிவிடலாம் என இருந்த தைரியம், நம்பிக்கை, உறுதி எல்லாவற்றையும் பிரிவுத்துயராய் தோன்றிய உணர்ச்சி அலை ஒன்று இழுத்து சுருட்டியது தன்னுள்.
ஒன்றும் வேண்டாம் அவனும் அவன் அருகாமையும் அது போதும். அவனைத்தாண்டி வாழ்வென்றும், இரவென்றும், பகலென்றும், பாவை மனமென்றும் எதுவும் இல்லை.
இவன் இல்லா எதிர்காலம் பாலைவனம். பாலையில் கூட மணல் நிறைந்திருக்கும். இவனின்றி இவள் சூன்யம். அவனே அவள்.
பெரும் வெறுமை உணர்வு மனம் நிறைக்க எதிர்காலம் இருளாய் தோன்ற அடுத்த நொடிக்குள் கால் வைக்க மனமில்லை அவளுக்கு.
உடலில் சிறு நடுக்கம்.
திரும்பி அவனைப் பார்த்தாள்.
வெறித்தனமாய் இழுத்தணைத்து கத்தி கதறி தன் காதலை அவனிடம் சொன்னால்....?
பெண்மை ஒரு புறம் மறுக்க, அறிவு அடுத்தவிதமாக தாக்கியது.
உன் அம்மா சொன்ன யோசனைக்கும் இதுக்கும் என்ன வித்யாசம் தோன்றும் மற்றவர்க்கு?
வியன் இந்த காதலை புரிந்து கொள்வானா?
இருக்கலாம்; ஆனால் மத்தவங்க...? குறிப்பாக அவனது பெற்றோர்?
இவள் செய்து வைத்திருக்கிற காரியத்திற்கும், வேரி மருமகளாய் சென்றிருக்கும் விதத்திற்கும், இவளது அம்மாவின் வாய் வார்த்தைக்கும் யார் இவளை மருமகளாய் ஏற்க?
ஆழ புரிந்தது அவளுக்கு. வியனின் பேரிழப்பின் மேல் தான் இவள் காதல் கைகூட முடியும்.
அவனுக்குள் காதலிருக்கிறது....அந்த கண்ணா...அதுதான் அது... அவனை தடுக்கும் விஷயம் இதுதான்.
அவனது அத்தனை சந்தோஷத்தையும் அழிக்கவா இவள் காதல் கொண்டாள்?
இவள் சந்தோஷமா அவன் மகிழ்ச்சியா எது வேண்டும் இவளுக்கு?
தெளிவு பிறந்தது.
வேண்டாம் இந்த காதல்.
இருவருக்கும், ஏன் யார் ஒருவருக்கும் இதில் நன்மை இல்லை.
தெளிவும் முடிவும் குழப்பம் நீக்குவதற்கு பதில் பாராங்கல்லாக்கியது மனதை. இதயம் கணக்க தொய்ந்தாள்.
அழுவினியாம்.... அழுக்கு சுந்தரியாம், முழு முட்டாளுக்கு முத மந்திரியாம்....முன்னபின்ன செத்தவனுக்கு தான் சுடுகாடு தெரியும்....தோத்து பழகுனவனுக்குதான் ஒப்பாரி புரியும்....ஏய் தொடங்கினப்பவே தோத்துட்டேன்னு சொல்றதுக்கு.... எம்.எம்.க்கு எப்படிடி முடியும்...?
மைன்ட் வாய்ஸ் டோனில் அறிவு உசுப்பேத்த மிர்னாவுக்கு செய்ய வேண்டியது புரிந்துவிட்டது. எந்த சூழலிலும் இறுதி வரை போராடுறதுதான் அவளை இதுவரைக்கும் ஜெயிக்க வைத்திருக்கிறது..அப்படி இருக்க...இப்ப மட்டும் ஏன் டிரை பண்ணாமலே மண்ண கவ்வனும்... மனுஷங்க தான அவங்க எல்லோரும்... ஒவ்வொருத்தர்க்கா புரிய வைக்கலாம்... மனதிற்குள் சபதமேற்க மனம் முகம் எல்லாம் இயல்பு நிலைக்கு வந்தது. ஈ.....
அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
பட்சி சிக்கிகிட்டு வசமா...பால் கொழுக்கட்டைக்கு கொடு ஒரு டெம்மோ...அசந்து போய் ஆகனும் அவன் இப்போ உன் ரெமோ... மைண்ட் வாய்ஸ் மைக் பிடிக்க
அறிவுக்கொழுந்து... ஆப்பகடை எறும்பு.......அவனுக்கு உன்னை உன்னையாவே பிடிச்சாத்தான் அது காதல்...இல்லன அது சாக்கடை வாரல்...அவனா வந்து போடனும் கல்யாண அப்ளிகேஷன்....இப்படில்லாம் இம்ப்ரெஸ் செய்து கவுத்துனா அதுக்கு பேரு கால்குலேஷன்.
அறிவு இடித்துரைக்க...ஓகே...பி.கேட்ட மட்டும் நோ ப்ளானிங். மத்தவங்களுக்கெல்லாம் ஐ’ம் கமிங்ங்ங்ங்...
கொடைக்கானலில் வியனுக்கு தெரிந்த ட்ராவல்ஸில் சொல்லி டாக்ஸி வரவழைத்து மதுரை நோக்கிப் பயணம்.
வழியில் இவளைக் காரிலேயே விட்டுவிட்டு அவளுக்காக சில உடைகள் வாங்கி வந்தான் அவன். மலையில் விழுந்து எழுந்ததில் இருவர் உடையும் காண சகிக்காத அளவு மண் நிறமும் செடி கறையுமாய் இருந்ததே காரணம்.
“எங்க வீட்டில வந்து இதை மாத்திட்டு கிளம்பலாம்..” அவன் சொல்ல
“இல்ல வேண்டாம்...உங்க வீட்டுக்கு கண்டிப்பா வேண்டாம்...” ஆங்கிலத்தில் அவசர அவசரமாக மறுத்தாள் அவள் அம்மா அங்கு வந்து நின்றாள் என்னவாகும் என்ற நினைவுதான் காரணம். டிரைவருக்கு ஆங்கிலம் தெரியாதிருக்க வேண்டுமே...
“உங்க வீட்ல இருந்து வந்துடுவாங்கன்னு நினைக்கிறீங்களோ....? அப்படியே அவங்க வந்தாலும் அவங்க கூட உங்கள அனுப்ப இங்க யாரும் தயாரா இல்ல...” ஸ்பானிஷில் வந்தது பதில் வியனிடமிருந்து.
திரும்பி அவன் முகம் பார்த்தாள். ஆச்சர்யம். அடி வயிற்றில் இன்ப அமிலம். இவளுக்கு ஸ்பானிஷ் தெரியும் என அவன் அறிந்திருந்தது ஆச்சர்யம். அவள் தாயிடம் கூட அவளை தர மாட்டேன் என அவன் இவள் மீது எடுத்த உரிமை இன்ப அமிலத்திற்கு காரணம்.