(Reading time: 17 - 34 minutes)

 

'ங்க அப்பா  போய் இன்னும் கொஞ்ச நாள் கூட ஆகலை அதுக்குள்ளே கல்யாணமா?  ரொம்ப நல்லா இருக்கு. பண்ணிக்கோ. தாராளமா பண்ணிக்கோ. நான் யார்கிட்டேயும் இப்போ பேசறா மாதிரி இல்லை'.அவன் குரல் தகித்தது.

'அப்படி இல்லைடா. நல்ல விஷயத்தை சீக்கிரம் முடிச்சா நல்லதுன்னு அத்தை நினைக்குறாங்க. அதனாலேதான். நீயும் எல்லாத்தையும் மறந்திட்டு வா விஷ்வா.' நிதானமான குரலில் சொன்னான் பரத்.

'எதைடா மறக்க சொல்றே. எங்க அப்பாவையா? போடா...... டேய்...... நான் எதுக்கும் எங்கேயும் வர மாதிரி இல்லை. போனை வைக்கிறேன்' துண்டித்து விட்டிருந்தான் அழைப்பை.

அப்போது கூட கோபம் வரவில்லை பரத்துக்கு. தகப்பனை இழக்கும் வலி எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவன் தானே அவனும். அவனது தந்தையின் மரணமாவது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால் விஷ்வாவுக்கு நிகழந்தது பேரதிர்ச்சி. அதிலிருந்து மீண்டு வர அவனுக்கு காலம் வேண்டாமா.? இவையெல்லாம் சொல்லி அத்தையை சமாதான படுத்தினான் பரத்.

திருமண நாள் நெருங்கியது. மறுநாள் திருமணம். அன்று மாலை வரவேற்பு. அலங்காரங்கள் முதற்கொண்டு அணியப்போகும் மாலைகள் வரை எல்லாவற்றையும் ரசித்து ரசித்து செய்தான், வாங்கினான் பரத். அவன் மேற்பார்வையிலேதான் எல்லாமே நடந்தது

அப்போது அங்கே சந்தோஷமும், கோலாகலமும் மட்டுமே நிறைந்திருந்தது. துவங்கியது  திருமண வரவேற்பு.

எளிமையான அலங்காரத்தில், அழகு மிளிர அவனருகே நின்றிருந்தாள் அஸ்வினி. வரவேற்புக்கு வந்தவர்கள் எல்லாரிடமும், அவளை தனது மனைவியாக அறிமுக படுத்திவிட்டிருந்தான் பரத்.

மலர்களும், வாழ்த்துக்களும், எங்கும் நிறைந்திருக்க மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தான் பரத். அன்றிரவு உறக்கம் கூட கிட்டவில்லை பரத்துக்கு.

ஜன்னலின் அருகே சென்று நின்றவனின் கண்களில்  ஒளிர்ந்துக்கொண்டிருந்த முழு நிலா தென்பட, அதை ரசிக்கும் ஆசையில் மண்டபத்தின் மொட்டை மாடிக்கு வந்தான் அவன்.

அங்கே இருட்டில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள் அஸ்வினி.

ஹேய்... என்னமா? இந்த நேரத்திலே இங்கே வந்து உட்கார்ந்து இருக்கே? பரிவுடன் கேட்டான் பரத்.

அவனைப்பார்த்த மாத்திரத்தில் தடுமாறி எழுந்தாள் அவள்.

பார்த்துமா... என்றான் அவன். அவள் தலை குனிந்தபடி நிற்க அவளருகில்,  வந்தான் பரத்.

தூக்கம் வரலியா? மெல்லக்கேட்டான் அவன்.

ம்ஹூம்.... நிமிரவில்லை அவள்.

அவள் முகம் வாடியிருப்பதை போன்றே தோன்றியது அவனுக்கு. நிமிர்த்தினான் அவள் முகத்தை. என்னாச்சுமா?

ஒண்ணு...ஒண்ணுமில்லை...

தடுமாறி பேசியவளின் தோளை மெல்ல அணைத்தது அவன் கை. என்னாச்சுப்பா?

அடுத்த நொடி அதிர்ந்து, மொத்தமாக நடுங்கி கண்கள் கலங்க,  அவன் கையை விலக்கிவிட்டு தள்ளி நின்றாள் அவள்.

ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு 'அஸ்வினி. என்னமா? பயமா இருக்கா?'

மெளனமாக தலை குனிந்து நின்றிருந்தாள் அவள்.

என்கிட்டே என்னமா பயம்?

ப... பயமில்லை...

அப்போ வேறே என்ன?

இல்லை... அது.... ஒண்ணுமில்லை... நான் கீழே போறேன். அவன் அழைப்பை கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் போய் விட்டிருந்தாள் அவள்.

ஒன்றுமே புரியாமல் நின்றிருந்தான் அவன்.

றுநாள் புத்தம் புதிதாக விடிந்திருந்தது.

மேள தாளங்கள் முழங்க, மலர் மாலைகள் மணக்க மேடையில் அவன், அவனருகே அவள். அக்னியின் முன்னே இருவரும் அமர்ந்திருக்க, அந்த நேரத்தில் உள்ளே நுழைந்தான் விஷ்வா.

மேடையில் ஏறி அவர்கள் அருகே வந்தவன் அஸ்வினியை, பார்த்து சொன்னான் 'எழுந்திரு  அஸ்வினி. என்னோட கிளம்பு.'

அவள் முகபாவத்திலிருந்து அவளே அவனை எதிர்பார்க்கவில்லை என்று தான் தோன்றியது பரத்திற்கு. மெல்ல எழுந்தாள் அவள்.

அவளுடனே எழுந்தான் பரத். 'என்னடா பண்றே நீ?' என்றான் விஷ்வாவை பார்த்து.

பரத்தின் பக்கம் திரும்பக்கூட இல்லை விஷ்வா. அஸ்வினியின் கையை பிடித்துக்கொண்டு நடந்தான்.

கழுத்தில் இருந்த மாலையுடனே, விஷ்வாவுடன் அவள் நடக்க, அங்கே எல்லாருக்கும் பேரதிர்ச்சி.

விஷ்வா.... நில்லு.... அதிர்ந்து ஒலித்தது பரத்தின் குரல். 'என்னடா விளையாடுறியா? நீ பாட்டு வந்தே, அவளை கூட்டிட்டு போயிட்டே இருக்கே.

'நான் மட்டும் வந்து கூட்டிட்டு போறேனேன்னு சந்தோஷப்படு. முதல்லே போலீசோட வந்து கல்யாணத்தை நிறுத்தலாம்னு நினைச்சேன். நீங்க எல்லாரும் அசிங்கப்படக்கூடாதுன்னு தான் நான் மட்டும் வந்தேன்' .

சுற்றி இருந்த அத்தனை கண்களும் பரத்தின் மீதே. உடல் கூசிப்போனது அவனுக்கு.

டேய்.... அத்தை பேசுவதற்குள் குறுக்கிட்டார் தாத்தா. என்ன விஷ்வா பண்றே நீ?. எதுவாயிருந்தாலும் உள்ளே போய் பேசலாம் வாங்க எல்லாரும்.

'அதெல்லாம் வேண்டாம் தாத்தா. தெரியட்டும். இஷ்டமில்லாத ஒரு பொண்ணை கட்டாயப்படுத்தி, கல்யாணம் பண்றீங்கன்னு எல்லாருக்கும் தெரியட்டும்' ஆத்திரத்துடன் ஒலித்தது அவன் குரல்.

'இஷ்டமில்லையா? யாருக்கு இஷ்டமில்லை.? என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்திலே முழு சம்மதம்' என்றார் மைதிலி..

'அதுதான்' என்றான் விஷ்வா. உன் பொண்ணு மனசிலே என்ன இருக்குன்னு கூட உனக்கு தெரியலை. அவ எனக்கு போன் பண்ணி அழறா. உனக்கு நாங்க ரெண்டு பேரும் எப்பவுமே முக்கியம் கிடையாது. உன் அண்ணன் பசங்க தான் முக்கியம்.

'டேய்... என்னடா பேசறே. நான் அவளை கேட்டுதான் முடிவு பண்ணேன். நீ சொல்லுமா அஸ்வினி.' தவிப்புடன் ஒலித்தது அத்தையின் குரல்.

பதில் பேசாமல் தலை குனிந்து நின்றிருந்தாள் அஸ்வினி.

அவ பேசமாட்டாமா...எங்களை நீ வாழ்கையிலே பேச விட்டதே இல்லையே.... அப்பாவை அனுப்பியாச்சு... இப்போ அடுத்தது இவளா....

இத்தனை நேரம் பேசாமல் நின்றிருந்த பரத்தால் அதற்கு மேல் பொறுமை காக்க முடியவில்லை.

விஷ்வா.... எகிறியது பரத்தின் குரல் .போதும். இதுக்கு மேலே பேசாதே.' அஸ்வினியின் முகத்தை பார்த்து கேட்டான் 'என்னமா பிரச்சனை?'

எனக்...எனக்கு...விஷ்வா கூட போகணும்.

சரி போ... சொல்லி விட்டிருந்தான் பரத்.

நடந்தார்கள் இருவரும். அவர்கள் பின்னாலேயே கெஞ்சிக்கொண்டே நடந்தார் மைதிலி ' ராஜாத்தி நில்லு.....மா. என்னை விட்டு போகாத..ம்மா. ராஜா....த்தி''

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.