(Reading time: 17 - 34 minutes)

 

நிற்கவில்லை இருவரும். 'அத்தை நில்லு...... அத்தை.' அவரருகே வந்தான் பரத். 'போகட்டும் விடு. நீ வேண்டாம்னு போறாங்க. போகட்டும். ஆனா ஒண்ணு இன்னொரு தடவை என் வீட்டு வாசப்படியை இவன் மிதிச்சான்னா இவன் காலை வெட்டிடுவேன்' பரத் சொல்ல அவனை ஒரு ஏளன பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தான் விஷ்வா.

இவை எல்லாவற்றையும் அதிர்ச்சியுடன் பார்த்தபடி நின்றிருந்தாள் இந்துஜா.

அவர்கள் சென்று விட, ஆசை ஆசையாய் அணிந்த மாலையை கழற்றினான் பரத்.. உறவினர்கள், நண்பர்கள், உடன் வேலைப்பார்வர்கள், அவனை சுற்றி நிற்க, பரிதாபப்பார்வை, ஏளன பார்வை, குற்றம் சுமத்தும் பார்வை, என பல வித பார்வைகள் அவனை துளைக்க அவனது அங்கத்தின் ஒவ்வொரு அணுவும் கூசியது.

இதயம் துடிப்பது அந்த நொடியே நின்று விடாதா? என்றுக்கூட தோன்றியது பரத்துக்கு. ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தான் பரத்.

இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் தளரக்கூடாது. தன்னைதானே தேற்றிக்கொண்டான் அவன்.

என்னதான் முயன்றாலும், தனது நண்பர்களுடன் எப்போதும் போல் இருக்க முடியவில்லை அவனால். இந்த காரணத்தினாலேயே தான் வேலைப்பார்த்த கல்லூரியை விட்டு வேறு கல்லூரிக்கு மாறினான் அவன்.

திரைப்படத்தில் இது போன்ற திருமணம் நின்று போகும் காட்சிகள் வந்தால் கூட அவனது உள்ளம் பற்றி எரியும்.

கதாநாயகி மணமேடையில் அமர்ந்திருக்கிறாளாம். கதாநாயகன் வந்து திருமணத்தை நிறுத்தி விட்டு அவளை அழைத்து சென்று விடுகிறானாம். கை தட்டுகிறார்கள் ரசிகர்கள். அவளருகே அமர்ந்திருக்கும் அந்த மாப்பிள்ளையை பற்றி யாருமே யோசிப்பதில்லை. அவனுக்கும் கனவுகள் இருந்திருக்காதா? திருமணம் நின்று போனால் சுள்ளென வலிக்காதா?...

ஏமாற்றமும், புறக்கணிப்பும், அவமானமும் தந்த வலியில் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக மரக்கட்டையாகத்தான் மாறிப்போனது, அபர்ணா என்கிற சில்லென்ற பனி மழை அவனை உரசி செல்லும் வரை.....

சில நாட்கள் கழித்து கேள்விப்பட்டான் பரத் 'அஸ்வினியை திருச்சியில் இருக்கும் தனது இன்னொரு தாத்தாவின் வீட்டில் விட்டு விட்டு அமெரிக்காவுக்கு சென்று விட்டான் விஷ்வா என்று

இப்போது மறுபடியும் அவன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள் அண்ணனும் தங்கையும். அவன் கேட்டதையே இப்போது இவன் கேட்கலாம். 'இப்போது இவர்களுக்கு எங்கிருந்து வந்ததாம் அம்மாவின் மீது திடீர் பாசம்?

'தான் ஆடாவிட்டாலும் தனது சதை ஆடுகிறதாமா? இப்போது அவனுக்கு அம்மாவின் பாசமும் வேண்டுமாம். கூடவே என் தங்கையும் வேண்டுமாம்'. மெல்ல சிரித்துக்கொண்டான் பரத்.

'தெரியும் அவனுக்கு. தான் நினைத்தால் இந்த நொடி கூட விஷ்வாவை கீழே தள்ளி நொறுக்கி விட முடியுமென தெரியும் அவனுக்கு' .ஒரு பெருமூச்சுடன் யோசித்தபடியே நின்றிருந்தான் பரத்.

றுநாள் காலை விடிந்திருந்தது. உடற்பயிற்சி முடித்து விட்டு, வீட்டுக்கு வந்து குளித்து விட்டு தனது அறையை விட்டு வெளியே வந்தான்  பரத்.

நேரம் காலை 7.20

அத்தை இன்னமும் எழுந்திருக்க வில்லையா?

யோசித்தபடியே அவர் அறைக்குள் எட்டிபார்த்தான் பரத். கட்டிலிலேயே படுத்திருந்தார் அவர்,

அத்தை... என்னாச்சு அத்தை.? பதறும் குரலுடன் அவர் அருகில் வந்து நின்றான் பரத்.

அவர் மூச்சு திணறிக்கொண்டிருந்தது. வியர்வை வெள்ளத்தில் படுத்திருந்தார் அவர்.

அவர் அருகில் அமர்ந்து அவர் தலையை கோதியபடி கேட்டான்  என்னாச்சு அத்தை? வீசிங்கா?

வி..விஷ்வா.... அவர் உதடுகள் கஷ்டப்பட்டு உச்சரித்தன.

அத்தை... ராத்திரி தூங்கினியா இல்லையா.? அவன் நெஞ்சம் பதறியது. இது வழக்கமாக வரும் ஆஸ்துமா போல தெரியவில்லையே. பி.பி ஏறி இருக்குமோ?

எனக்கு விஷ்வாவை பார்க்கணும்டா...

நான் இருக்கேன் அத்தை....... வா முதல்லே ஹாஸ்பிடல் போகலாம்.

'இ...ல்லை...டா... எனக்கு 'என்' பிள்ளையை பா....ர்....க்கணும். நா...ன் பெ....த்த பிள்ளையை பார்க்க.....ணும்.

'என்' பிள்ளை என்ற வார்த்தையில் அவர் கொடுத்த அழுத்தம், எத்தனை தடுத்து பார்த்தும் முடியாமல் அவனது இதயத்தை அழுத்தமாக கீறத்தான் செய்தது.

கொஞ்சம் தடுமாறிப்போய்  நிமிர்ந்தான் பரத். 

தொடரும்...

கொஞ்சம் சோகமான எபிசோடு. அட்ஜஸ்ட் பண்ணிகோங்க எல்லாரும். வேறே வழி இல்லை. நான் கதையில் இதை எல்லாம் சொல்லியே ஆகணும். அடுத்த எபிசோடிலிருந்து கதை கூல் ஆகிடும் என்று நினைக்கிறேன்.

Go to episode # 15

Go to episode # 17

{kunena_discuss:726}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.