(Reading time: 40 - 79 minutes)

19. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

தவை தட்டினாள் அபர்ணா. விஷ்வாவினுள்ளே தனது தோழியின் கணவனை பற்றி பலப்பல கற்பனைகள்........

கதவு திறக்கப்பட, புன்னைகையும், மகிழ்ச்சியும் ஆர்வமுமாக நிமிர்ந்தான் விஷ்வா.

அவன் கண்முன்னே நின்றிருந்தான் பரத். உடலின் மொத்த ரத்தமும் இதயத்துக்கு பாய்ந்தது போல் ஒரு உணர்வு விஷ்வாவுக்கு..

Ullam varudum thendral

தனக்குள் எழுவது அதிர்ச்சியா, கோபமா, ஆச்சரியமா சில நொடிகள் எதுவுமே புரியாமல் திகைப்புடனே நின்றிருந்தான் விஷ்வா

அதற்குள் அங்கே மற்றொரு அறையில் 'அம்மா விஷ்வா வந்துட்டான் மா' என்றாள் அஸ்வினி. அவன் மண்டபத்தின் உள்ளே வரும்போதே பார்த்து விட்டிருந்தாள் அவள்.

அங்கே இருந்த தாத்தா, இந்து, அத்தை மூவருக்குமே கொஞ்சம் திடுக்கென்றது.

அடுத்த சில நிமிடங்களில் பரத்தின் அறை வாசலில் அனைவரும் நின்றிருந்தனர்.

அந்த இடத்தில் பரத் நிற்பான் என்று கனவிலும் எதிர்ப்பார்க்க வில்லை விஷ்வா. அபர்ணாவின் உள்ளம் கவர்ந்தவன் கண்ணனா? நம்பவே முடியாமல், அப்படியே நின்றிருந்தான் விஷ்வா

பரத்தையும், அபர்ணாவையும் மாறி மாறிப்பார்த்தன அவன் கண்கள். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது அவனுக்கு ,ஏனோ இந்த முறை கொதிக்கவில்லை அவன் ரத்தம். எப்போதும் பரத்தை பார்த்த மாத்திரத்தில் எழும் பழைய ஞாபகங்கள் எதுவுமே அவனுள் எழவில்லை.

பரத்தின் அருகில் நின்றிருந்தாள் அபர்ணா. அவள் முகத்தில் அப்படி ஒரு தவிப்பு. தனது உயிர் நண்பனின் முகத்தில் ஒரு சின்ன புன்னகை கீற்று தோன்றிவிடாதா என எதிர்ப்பார்த்து துடித்துக்கொண்டிருந்தன  அவள் கண்கள். சட்டென கோபத்தில் பொங்கி விடுவானோ தனது தோழன் என்ற பயத்தில் கொஞ்சம் வேகமாவே துடித்துக்கொண்டிருந்தது அவள் இதயம். மூச்சை பிடித்துக்கொண்டு விஷ்வாவையே பார்த்தபடி நின்றிருந்தாள் அபர்ணா.

அவளுக்கு மட்டுமல்ல அங்கே நின்றிருந்த அனைவருமே இமைகளை அசைக்ககூட மறந்து நின்றிருந்தனர். விஷ்வாவின் ஒவ்வொரு அசைவையும் படம்பிடித்துக்கொண்டிருந்தது பரத்தின் பார்வை.

சில நொடிகள் கழித்து கொஞ்சம் தன்னிலை பெற்றவனாக, பரத்திடமிருந்து விலகிய பார்வை. 'என்னிடம் இதை முன்னமே சொல்லி இருக்க வேண்டாமா நீ?" என்ற கேள்வியுடன் அபர்ணாவை தொட்டது. அவள் முகத்தை பார்த்த மாத்திரத்தில் இளகிப்போனது விஷ்வாவின் இதயம். அவளிடம் எதையுமே கேட்க தோன்றவில்லை அவனுக்கு

அபர்ணாவின் முகத்தில் நிலைத்திருந்தன விஷ்வாவின் கண்கள். படித்துக்கொண்டிருந்தான் அவள் எண்ண ஓட்டங்களை.

'நீ சொன்னாலும் சொல்லட்டியும் என் புருஷன் நல்லவர்தான்' அன்று சொன்னாளே அவள். அப்போது மகிழ்ச்சியும், காதலும், வெட்கமுகாக சிரித்தனவே அவள் கண்கள், அது மட்டுமே நினைவுக்கு வந்தது விஷ்வாவுக்கு.

அது அத்தனைக்கும் சொந்தக்காரன் இந்த கண்ணன். அவளுக்கு எல்லாமுமாக இருக்க போகிறவன் இந்த கண்ணன், அவளது மகிழ்ச்சியின் ஆதாரத்தை நான் எப்படி வெறுத்துவிட  முடியும்.??

நான் அப்படி செய்தால் துவண்டு போய் விட மாட்டாளா என் தோழி? எங்கள் இருவருக்கும் இடையில் ஒருவரை தேர்ந்துடுக்கும் வலியை நான் அவளுக்கு தருவேனா???? இல்லை!!!!! அதற்கு வாய்ப்பே இல்லை. தெளிவாக சொன்னது அவன் மனம்.

மனம் ஒரு முடிவுக்கு வர பரத்தை நோக்கி திரும்பியது அவன் பார்வை. ஒரு பெருமூச்சு எழ அவன் இதழ்களில் சின்ன புன்னகை ஓடத்துவங்க, மெல்ல மேலெழுந்த அவனது வலது கரம் பரத்தை நோக்கி நீண்டு விட்டிருந்தது.

இப்படி சட்டென கை நீட்டுவான் விஷ்வா என்று எதிர்பார்க்கவேயில்லை பரத். வியந்தே போனான் அவன்.

ஒரே நிமிடத்தில் தூக்கி எறிந்து விட்டானா எல்லா கோபதாபங்களையும்? அபர்ணாவிற்காகவா? அவள் நட்பிற்காகவா? எத்தனை அருமையான நண்பன் இந்த விஷ்வா? அடுத்த நொடி சட்டென அவன் கையை பற்றிக்கொண்டான் பரத்.

முகமும் மனமும் மலர்ந்து போக மகிழ்ச்சியின் உச்சிக்கே போய்விட்டிருந்தாள் அபர்ணா. இப்படி ஒரு நிகழ்வு தனது கண்முன்னே நடக்கிறது என்று நம்பவே முடியவில்லை அவளால்

விஷ்வாவின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டது பரத்தின் கை. அவனது பற்றுதலிலேயே பரத்தின் மனமாற்றத்தை புரிந்து கொள்ள முடிந்தது விஷ்வாவால்.

மெல்ல கண்களை நிமிர்த்தி பரத்தின் கண்களை நேராக சந்தித்தான் விஷ்வா. அன்றைய தொலைப்பேசி உரையாடல் விஷ்வாவின் மனதில் வந்து போனது.

என்னுடன் பேசியது கண்ணனா? எல்லாமும் முன்பே தெரியுமா அவனுக்கு? தெரிந்த பிறகும் என்னிடம் அத்தனை அன்பாக பேசினானா?

'யூ ஆர் எ கிரேட் friend மிஸ்டர் விஷ்வா' சொன்னானே அவன் அவள் தோழன் நான்தான் என்று தெரிந்த பின்னரும் எங்கள் நட்பை  இவ்வளவு அழகாக ஏற்றுக்கொள்ள முடிந்ததா அவனால்'? பரத்தையே பார்த்தபடி நின்றவனின் கரம் தன்னையும் அறியாமல் பரத்தின் கரத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டன.

பல நாட்களுக்கு பிறகு இணைத்திருந்தன அந்த இரண்டு கரங்களும். வாரத்தைகள் எழவில்லை இருவருக்கும்.

இருவரையும் பார்த்து ரசித்தபடி சில நொடிகள் அப்படியே நின்று விட்டிருந்தாள் அபர்ணா. அவள் மட்டுமல்ல சுற்றி நின்றவர்கள் அனைவருமே கொஞ்சம் நெகிழ்ந்து போயிருந்தனர்.  

அந்த இடமே நிசப்தத்தில் மூழ்கி போயிருக்க, முதலில் சுதாரித்தார் தாத்தா.  ஆங்.... போதும்..... போதும்.... எல்லாரும் இந்த உலகத்துக்கு வாங்க என்றார் அவர்.

அவர் குரலில் தன்னிலை பெற்றாள் அபர்ணா. சின்ன சிரிப்புடன் விஷ்வாவை பார்த்து கேட்டாள் அவள் 'என்ன விஷ்வா? மாப்பிள்ளை ஓகேவா? நான் கல்யாணம் பண்ணிக்கலாமா? என்ன சொல்றே?

அடுத்த நொடி  'டேய்... ராசா.... சரின்னு சொல்லிடுப்பா.... இப்போதான் கஷ்டப்பட்டு லவ் பண்ணி கல்யாணம் வரைக்கும் வந்திருக்கான்.....  கவுத்துடாதேடா.....விஷ்வாவின் முகத்தை பார்த்தபடி சின்ன சிரிப்புடன் தாத்தா   சொல்ல  புன்னகையுடன்  தலை குனிந்துக்கொண்டான் விஷ்வா..

எதையும் பேசும் மனநிலையில் அவன் இல்லை என்று நன்றாகவே புரிந்தது அவருக்கு.

'சாப்பிட்டியா விஷ்வா?' சூழ்நிலையை இயல்பாக்க முயன்றார் அவர்.

'இல்லை. ஏதோ வேலையிலே மாட்டிக்கிட்டான்' பதில் அபர்ணாவிடமிருந்து வந்தது. நான் சாப்பாடு எடுத்து வைக்க சொல்லி இருக்கேன். மணி மூணாச்சு பாரு வா விஷ்வா சாப்பிடலாம்.

மற்றவர்கள்  புன்னகையுடன் கலைந்து செல்ல பரத்தை பார்த்து தலை அசைத்துவிட்டு அபர்ணாவுடன் நடந்தான். விஷ்வா. அவர்களுடன் நடந்தாள் இந்துஜா. அவன் செல்வதையே பார்த்தபடி நின்றிருந்தான் பரத்.

என்ன தோன்றியதோ சில நொடி மௌனத்திற்கு பிறகு மெல்ல சொன்னாள் அபர்ணா 'தேங்க்ஸ் விஷ்வா'

எது? என்றான் விஷ்வா. எத்தனை நாளா இந்த பழக்கம்? எனக்கு தேங்க்ஸ் சொல்ற பழக்கம்.? உதை படுவே.

அதுக்கில்லே விஷ்வா. நீ......

எதுக்குமில்லை.... என்றான் விஷ்வா. இன்னைக்கும், நாளைக்கும் உன் வாழ்கையிலே ரொம்ப ஸ்பெஷல் டேஸ். இன்னையிலேர்ந்து உன் சந்தோஷங்கள் ஆரம்பம். நீ இனிமே எப்பவும் சந்தோஷமா இருக்கணும். அது மட்டும்தான் எனக்கு வேணும். ஓடு. போய் ரிசெப்ஷனுக்கு ரெடி ஆகு போ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.