(Reading time: 40 - 79 minutes)

ணவு பரிமாறினாள் அபர்ணா. அதனுடன் எல்லாருக்கும் இனிப்பை பரிமாறிவிட்டு அவளும் சாப்பிட அமர்ந்தாள்.

பரத்தின் தட்டில் இருந்த இனிப்பை பார்த்தவுடனேயே விஷ்வாவுக்குள், பழைய நினைவுகள்.

சின்ன வயதில் எப்போதும் இருவரும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுத்தான் பழக்கம். பரத்தின் தட்டில் இனிப்பு இருந்தால் அதை முதலில் சாப்பிடுவது விஷ்வவாகத்தான் இருக்கும். அது ஏனோ பரத்தின் தட்டில் இருந்து எடுப்பதில் ஒரு சந்தோஷம் விஷ்வாவுக்கு.

பரத்தின் நினைவுகளும் அந்த இடத்துக்கே செல்ல, இனிப்பை தொடாமல் மற்றவைகளை சாப்பிட்ட படியே இருந்தான். விஷ்வா  எடுத்து விட மாட்டானா என்று ஒரு இனம் புரியாத ஆசை. ஓரக்கண்ணால் விஷ்வாவை பார்த்தபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தான் பரத்.

எடுக்கத்தான் நினைத்தான் விஷ்வா. ஆனால் ஏனென்றே புரியாத ஒரு தயக்கம் அவனுக்குள்ளே. அதை உடைத்துக்கொண்டு வெளியே வர தெரியவில்லை அவனுக்கு.

அவனது நிலையை சரியாக புரிந்துகொண்டவர் தாத்தா. யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தவருக்கு சட்டென ஒரு மின்னல்.

மெல்ல துவங்கினார்  'நாளைக்கு பிப்ரவரி 14. வேலென்டைஸ் டே. அதை தவிர வேறே என்ன விசேஷம் சொல்லுங்க பார்ப்போம்'. கேட்டார் தாத்தா.

விஷ்வாவோட பர்த்டே.... சட்டென பதில் வந்தது இந்துவிடமிருந்து.

'வெரி குட்' என்றார் தாத்தா. 'நம்ம லவர் பாயோட பர்த்டேவை நாளைக்கு நாம கேக் வெட்டி கொண்டாட போறோம்'

'நீங்க வேறே தாத்தா. நான் என்ன சின்ன குழந்தையா கேக் வெட்டி கொண்டாடுறதுக்கு?' என்றான் விஷ்வா.

'அப்படி இல்லைடா. ரொம்ப நாளைக்கப்புறம் நாமெல்லாம் ஒண்ணு கூடி இருக்கோம்  இந்த வருஷம் கொண்டாடுவோம்டா. வேறே யாரையும் கூப்பிட வேண்டாம். நம்ம வீட்டிலே உள்ளவங்க மட்டும் தான் ஒகேவா.???'

'ஓகே தாத்தா' என்றாள் இந்து. நாளைக்கு கொண்டாடிடுவோம்.

பரத், விஷ்வா இருவரும் பேசாமல் அமர்ந்திருக்க, இருவரின் நினைவுகளும் ஒரே புள்ளியை நோக்கிதான் நகர்ந்துக்கொண்டிருக்கும் என்பதை தாத்தாவால் நன்கு உணர முடிந்தது.

விஷ்வாவுக்கு பன்னிரண்டு, பதிமூன்று வயது இருக்கும் போது நடந்த ஒரு இனிமையான சம்பவம் இது.

இதே போன்றதொரு பிப்ரவரி 14. விஷ்வாவின் பிறந்தநாள். அப்போதெல்லாம் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடுவதில் விஷ்வாவுக்கு விருப்பம் அதிகம்.

அவனது பிறந்தநாளுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன் தனது தந்தையுடன் ஊருக்கு கிளம்பினான் கண்ணன்.

அவனை ஊருக்கு அனுப்பவதில் விருப்பமே இல்லை விஷ்வாவுக்கு. எப்படியும் பிறந்தநாளுக்கு வந்துவிடுவேன் என்ற வாக்குறுதி தந்துவிட்டு கிளம்பினான் கண்ணன்

சரியான நேரத்துக்கு வந்து சேர முடியவில்லை கண்ணனால். விஷ்வாவின் நண்பர்கள் அனைவரும் வந்துவிட்டிருந்தனர்.

எல்லாரும் அவன் கேக் வெட்டுவதற்காக காத்திருக்க, விஷ்வா பரத்திற்காகவே காத்திருந்தான். யார் சொல்லியும் கேட்கவில்லை அவன். பரத் வரும் வரை பிறந்தநாள் கொண்டாட்டங்களை துவங்கவே இல்லை. நண்பர்கள் எல்லாரும் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு கிளம்பினர். அப்போதும் கவலை படவில்லை விஷ்வா. 'எனக்கு இவங்க யாரும் முக்கியமில்லை. கண்ணன் மட்டும் என் கூட இருந்தா போதும்' என்றான் அவன்.

பரத் வீடு வந்து சேரும் போது இரவு பதினோரு மணி ஆகி இருந்தது. அதன் பிறகு கொண்டாடினான் அவன் பிறந்தநாளை.

அந்த கணங்களே இப்போது விஷ்வா, பரத் இருவரின் நினைவில் ஓடிக்கொண்டிருந்தன.

இருவரின் மனதிலும் ஒரே கேள்வி திரும்ப திரும்ப வந்தது. எங்கே போனார்கள் அந்த கண்ணனும், விஷ்வாவும்?. நடந்த சம்பவம் வேண்டுமானால் சிறு பிள்ளைத்தனமானதாக இருக்கலாம். ஆனால் அதன் அடிப்படையான பாசம் எங்கே போனது?

யோசித்தபடியே பரத் சாப்பிட்டு முடித்து கைகழுவிக்கொண்டு கொண்டு வர, 'சரி. என்றார் தாத்தா நாளைக்கு ஈவினிங் எல்லாரும் விஷ்வா வீட்டிலே இருக்கோம்'.

மெல்ல எழுந்தது விஷ்வாவின் குரல் 'கண்ணன் வருவானான்னு கேளுங்க தாத்தா.'

அங்கே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவனின் தோள்களை  அப்படியே அணைத்துக்கொண்டு  சொன்னான் பரத் 'வருவேண்டா. கண்டிப்பா வருவேன்'

மறுநாள் மாலை ஐந்து மணி. பரத்தை தவிர எல்லாரும் விஷ்வாவின் வீட்டிற்கு வந்து விட்டிருந்தனர்.

ஏதோ வேலை இருப்பதால் முடித்து விட்டு வருகிறேன் என அபர்ணாவை அனுப்பிவிட்டிருந்தான் அவன்.

தனது அறையில் இருந்தான் விஷ்வா. அங்கே சார்ஜரில் இணைக்கபட்டிருந்த அபர்ணாவின் கைப்பேசி ஒலித்தது. திரை 'கண்ணா' என்று ஒளிர, சில விநாடி யோசனைக்கு பிறகு அதை எடுத்து  ஹலோ என்றான் விஷ்வா.

மறுமுனையில் ஒரு பெண் குரல் 'நாங்க ஹாஸ்பிடலிலிருந்து பேசறோம். இந்த போன் உங்களுக்கு தெரிஞ்சவரோடதா? அவருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. இங்கே அட்மிட் பண்ணி இருக்காங்க.

அதன் பிறகு என்ன நடந்தது என்று விஷ்வாவுக்கே தெரியவில்லை. யாரிடமும் எதுவும் சொல்லவில்லை அவன். தனது வண்டியை எடுத்துக்கொண்டு மருத்துவமனையை நோக்கி பறந்தான் அவன்.

மருத்துவமனையை அடைந்து, விழுந்தடித்துக்கொண்டு உள்ளே ஓடினான். மருத்துவமனையின் வரவேற்பில் பரத்தின்  கைப்பேசியை விஷ்வாவிடம் கொடுத்தார்கள். அவன் அவசர சிகச்சை பிரிவில் இருக்கிறான் என்று தெரிந்துக்கொண்டு அதை நோக்கி ஓடினான் விஷ்வா.

அங்கே இருந்த டாக்டரிடம் அனுமதி பெற்று உள்ளே சென்று பார்த்தவனுக்கு நிம்மதி பெருமூச்சு எழுந்தது 'அங்கே இருந்தது கண்ணன் இல்லை.'

மருத்துவமனை முழுவதும் தேடி விட்டு அவன் அங்கே இல்லை என்று உறுதி செய்துக்கொண்டு வெளியே வந்தான் அவன்.

இதயம் தாறுமாறாக துடித்துக்கொண்டிருந்தது. பல நாட்களுக்கு பிறகு உள்ளம் கண்ணனுக்காக பதறிக்கொண்டிருந்தது 'என்னவாயிற்று என் கண்ணனுக்கு?'

நேராக அவனது வீட்டை நோக்கி பறந்தான். வீடு பூட்டி இருந்தது.

அடுத்தது அவன் கல்லூரி. அங்கிருந்து அவன் கிளம்பி வெகு நேரம் ஆகியிருந்தது.

தனது வீட்டுக்கு அழைத்தான் விஷ்வா 'கண்ணன் வந்தானா?'

இல்லையே என்று வந்தது பதில். அவர்களிடம் எதுவும் சொல்லாமல் அழைப்பை துண்டித்தான். ''என்னவாயிற்று என் கண்ணனுக்கு?'

அவன் கைப்பேசி மட்டும் தனியாக கிடக்கிறதே என்னவாயிற்று அவனுக்கு' பதற்றத்தின் எல்லையில் இருந்தான் விஷ்வா. நேரம் இரவு ஏழை நெருங்கிக்கொண்டிருக்க பைத்தியக்காரன் போல் தெருவில் சுற்றிக்கொண்டிருந்தான் அவன்.

புரியவில்லை. என்ன செய்வதென்றே புரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து  கனத்து போன இதயத்துடன் தனது வீட்டை நோக்கி சென்றான் விஷ்வா.

வீட்டு வாசலை அடைந்த மாத்திரத்தில் அவனுள்ளே நிம்மதி பிரவாகம். வீட்டு வாசலில் பரத்தின் பைக். தனது வண்டியை அப்படியே கீழே போட்டு விட்டு வீட்டினுள் ஓடினான் விஷ்வா.

உள்ளே சோபாவில் அமர்ந்து எல்லாருடனும் பேசிக்கொண்டிருந்தான் பரத். சட்டென அவன் மீது பாய்ந்து அவனது சட்டையை மொத்தமாக பிடித்தான் விஷ்வா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.