(Reading time: 40 - 79 minutes)

நியாயமா பார்த்தா அவன் மேலே பெரிசா தப்புன்னு ஒண்ணும் இல்லையே விஷ்வா.' இந்து  அன்று சொன்ன வார்த்தைகள் அவன் மனதிலாடியது. இத்தனை நாள் அவன் மனதை சரியாக புரிந்துக்கொள்ளாமல் நான் அவன் மீது கோபப்பட்டுக்கொண்டிருந்தேனோ? பரத்தை விட்டு விழி அகற்ற முடியாமல் யோசித்தபடியே நின்றிருந்தான் விஷ்வா.

அபர்ணாவின் அப்பா, அண்ணன், அண்ணி, இந்து, அத்தை அஸ்வினி தாத்தா உட்பட அனைவரும் மேடை மீது இருக்க சில நிமிடங்களில் நிறைந்த மனதுடன் மாங்கல்யத்தை கையில் எடுத்தான் கண்ணன்.  

மகழ்ச்சி, ஆனந்தம், சந்தோஷம் என்றெல்லாம் வார்த்தையில் வர்ணித்துவிட முடியாத ஒரு பரவச உணர்வில் இருந்தாள் அபர்ணா. அவளது வாழ்கையில் இந்த நொடி இவ்வளவு சீக்கிரம் வருமென அவள் நினைக்கவில்லை.

தன்னை அணு அணுவாய் புரிந்துக்கொள்ளும், தனது உணர்வுகளுக்கு மிக அழகாக மதிப்புகொடுக்கும் ஒரு கணவனின் தோள் சாய்வதை விட ஒரு பெண்ணுக்கு வேறே மகிழ்ச்சி வாழ்கையில் இருக்க முடியுமா?

சுற்றி இருக்கும் எல்லோர் மனமும் மகிழ்ச்சியில் நிரம்பி இருக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க மனம் நிறைந்த புன்னகையுடன் மாங்கல்யத்தை ஏற்றுக்கொண்டாள் அவன் கண்ணம்மா.

அவளது தந்தையின் கண்கள் நிரம்பியே விட்டிருந்தன.

தனது அன்பு கணவனின்  கைப்பற்றி அக்னியை வலம் வந்தாள் அவள்.

அதன் பின்பு அவர்கள் அருகில் வந்தான் விஷ்வா.. பரத்தின் கையை பற்றி குலுக்கினான் விஷ்வா. மனநிறைவுடன் சொன்னான் 'இனிமேல் உன் வாழ்கையில சந்தோஷம் மட்டும் தாண்டா இருக்கணும்.

புருவங்கள் உயர புன்னகைத்தான் பரத் ' தேங்க்ஸ்டா'

அதற்கு மேல் எதுவுமே பேசத்தோன்றவில்லை விஷ்வாவுக்கு. அவனது பண்பிலும், அன்பிலும் மொத்தமாக தொற்றுப்போயிருந்தான் விஷ்வா.

அபர்ணாவை வாழ்த்திவிட்டு நெகிழ்ந்து போன மனதுடன் கீழே இறங்கினான் அவன்.

சில நிமிடங்கள் கழித்து அவன் அருகில் வந்து அமர்ந்தாள் இந்துஜா  'வி....ஷ்...வா...' என்றபடி.....

அவன் மனநிலையை புரிந்துக்கொண்டதைப்போல் அவனது கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டாள் அவள்.

அது எப்படி இவளால் பெயரை அழைப்பதில் கூட காதலை பொழிய முடிகிறதோ.... யோசித்தபடியே அவளை பார்த்திருந்தான் அவன்.

விஷ்வா..... நான் உன்னை வாங்க போங்கன்னு கூப்பிடவா?

ஏன் திடீர்னு?

இல்லை எங்க அண்ணி அண்ணனை அப்படிதான் கூப்பிடறாங்க. எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு பிடிக்குமா? கண்கள் படபடக்க கேட்டாள் இந்துஜா.

'நீ என்னை எப்படி கூப்பிட்டாலும் எனக்கு பிடிக்கும்டா' நிலாப்பொண்ணு சொன்னான் விஷ்வா.

அந்த நேரத்தில் அபர்ணாவின், மருதாணி கோலமிட்ட பாதங்களை மென்மையாக பற்றி அம்மி மீது வைத்து, மெட்டி அணிவித்துக்கொண்டிருந்தான் பரத்.

மெட்டி அணிவித்து விட்டு, அவள் பாதத்தை யாரும் அறியாமல் அவன் வருடிக்கொடுக்க, சிலிர்த்து சிவந்து பாதத்தை விலக்கிகொண்டாள் அபர்ணா.

கீழே விஷ்வாவின் அருகே அமர்ந்திருந்த இந்து அவனை பார்த்துக்கேட்டாள் 'நம்ம கல்யாணத்திலே நீங்களும் எனக்கு மெட்டி போட்டு விடுவீங்கதானே'

கஷ்டப்பட்டு வார்த்தைக்கு வார்த்தை 'ங்க' சேர்த்து பேசிக்கொண்டிருந்தவளை ரசித்தபடியே சொன்னான் 'நம்ம கல்யாணத்திலே இது எதுவும் கிடையாது. இந்த மாதிரி சம்பிரதயாமெல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதாடா? தாத்தாவும், அம்மாவும், தாலி எடுத்துக்கொடுக்க, அதை இந்த நிலாப்பொண்ணு கழுத்திலே கட்டுறது மட்டும் தான் வேலை'

கொஞ்சம் வாடித்தான் போனது அவள் முகம். 'சரி' என்றாள் மெல்ல.

அவள் முக மாற்றத்தை பார்த்தபடியே கேட்டான் விஷ்வா 'ஏண்டா? உனக்கு மெட்டின்னா ரொம்ப பிடிக்குமா?

ம்? திரும்பினாள் இந்துஜா. 'எனக்கு மெட்டி ரொம்ப பிடிக்கும் தான். ஆனா அதை விட விஷ்வா ரொம்ப பிடிக்குமே. அதனாலே விஷ்வா என்ன சொன்னாலும் எனக்கு ஓகே.' புன்னைகைத்தாள் அவள். அவளது அன்பில் அப்படியே உருகித்தான் போனான் விஷ்வா.

இரவின் தனிமை. மொட்டை மாடியில் நின்றிருந்தான் பரத். அங்கிருந்து தூரத்தில் தென்பட்ட கடலையும், வானத்தில் சிரித்துக்கொண்டிருந்த நிலவையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அவன்.

அலங்கரிக்க பட்டிருந்த அவன் அறைக்குள் அழகான, மிதமான அலங்காரத்தில் வந்து நின்றாள் அபர்ணா. அவன் அறைக்குள் இல்லாது போக அந்த அறையை ஒட்டிய பால்கனிக்கு வந்தாள் அவள்.

அங்கேயும் இல்லை அவன். அவன் மாடியில் தான் இருக்கவேண்டும் என்பதை  உணர்ந்தவளாக அங்கிருந்து மாடிக்கு சென்ற படிகளில் ஏறி மெல்ல அவன் பின்னால் வந்து நின்றாள் அவள்.

அவள் கொலுசொலியிலும், அவள் சூடியிருந்த மலர்களின் வாசத்திலேயும் அவள் வந்ததை உணர்ந்த போதும் அவள் பக்கம் திரும்ப வில்லை அவன்.

சில நொடிகள் புன்னகையுடன் நின்றவளின் மனதில் சட்டென பாரதியின் 'மாலை பொழுதிலொரு மேடை மிசையே' பாடலின் ஞாபகம்'. அந்த பாடலில் பாரதியின் பின்னால் சென்று கண்களை மூடும் கண்ணம்மாவின் ஞாபகம்.

அவள் உடலெங்கும் மெலிதான ஒரு சிலிர்ப்பு எழ, சின்னதான ஒரு உந்துதலில் அவன் பின்னால் சென்று அவன் கண்களை மூடினாள் அபர்ணா.

சில நொடிகள் அவனிடத்தில் மௌனம் பின்னர் அழகாக சொன்னான் பரத்.

பாங்கினிற் கையிரண்டும் தீண்டியறிந்தேன்

பட்டுடை வீசு கமழ் தன்னிலறிந்தேன்

ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன்

ஒட்டு மிரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்

“வாங்கி விடடி கையை யேடி கண்ணம்மா!

மாயம் எவரிடத்தில்?”

மொத்தமாக சிலிர்த்து போனாள் அபர்ணா. தன் மனதில் எழுந்த அந்த பாடல் வரிகளை அவன் அப்படியே சொல்வான் என அவள் எதிர்பாக்கவேயில்லை. அவள் வியந்து போய் அழகாக சிரிக்க அவள் கைகளை விலக்கி சட்டென திரும்பி, தனது கைகளை அவளுக்கு மாலையாக்கி அவள்  கண்களுக்குள் பார்த்து கண் சிமிட்டி சிரித்தான் பரத்.

'அய்யோ !!!!!!!!! சான்சே இல்லை.' வியந்து மலர்ந்து கண்கள் விரிய அழகாக சிரித்தாள் அவள். உங்க கிட்டே இருந்து பாரதியை நான் எதிர்பார்க்கவே இல்லை. இது எத்தனை நாளா?

செல்லமாக அவள் மூக்கை கிள்ளியபடியே. சொன்னான் 'எல்லாம் என் கண்ணம்மாவை பார்த்தப்புறம்தான். உனக்கு நான் கண்ணம்மான்னு பேர் வெச்சதுக்கு அப்புறம் தான். கண்ணம்மாவை பத்தி பாரதி என்ன சொல்லியிருக்கார்ன்னு தெரிஞ்சுக்க படிக்க ஆரம்பிச்சேன்'

அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு, அவள் நெற்றிமுட்டி அழகான புன்னகையுடன் சொன்னான் பரத்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.