(Reading time: 15 - 29 minutes)

07. நகல் நிலா - அன்னா ஸ்வீட்டி

நிக்கியைப் பார்த்ததும் வர வேண்டிய எரிச்சல் ஒரு நொடி தாமதமாக வந்தது நல்லிசைக்கு. காரணம் விழித்ததும் அவள் மனம் யாரைத் தேடும் என்பதை உணர்ந்து அவிவை கூட்டி வந்து இவள் முதல் பார்வையில் படும் வண்ணம் வைத்திருக்கிறானே….

ஆனால் அடுத்த நொடி அவன் சொன்ன ‘குழந்தைக்கு நான் அப்பா’ வும் நவ்யாவின் கதறலும் ஞாபகம் வர கிளர்ந்தெழுந்த கோபம், ஒரு வேளை குழந்தையை கையில் வைத்திருப்பதே இவளை அவிவைக் காட்டி மிரட்டத்தானோ என்ற நினைவில் பயமாக, திகிலாக, இயலாமையாக உருமாறியது.

தவித்துப் போனாள் நல்லிசை. கோபமோ சந்தோஷமோ நினைத்ததை நினைத்தபடி காட்டிய காலம் ஒன்று இருக்கிறது அவளுக்கு. ஆனால் இப்பொழுது?

Nagal nila“ப்ளீஃஸ் நிக்கி என்ன விட்டுடு….ங்க…..எனக்கு அவிவ் இல்லாம முடியாது… அவன் மட்டும் தான் எனக்கு மிச்சமிருக்கிற ஒரே சந்தோஷம்…ப்ளீஃஸ் குழந்தைய எனக்கு குடுத்துடுங்க….” இவளை ஒருவிதமாய்ப் பார்த்தவன் அவிவை இவள் அருகில் படுக்கையில் உட்கார வைத்தான்.

“ஹாஃஸ்ப்பிட்டல் பெட்ல குழந்தைய உட்கார வைக்றது ஒன்னும் நல்லவிஷயம் கிடையாது” என்ற முனுமுனுப்புடன்.

மீண்டும் சுர்ரென்றது இவளுள். இத்தனைக் காலம் குழந்தை பிறந்ததா இல்லையான்னு கூட வராத அக்கறை இப்பொழுது மட்டும்? ஆனால் எத்தனை கோபத்திலும் அவிவ் முன் பேசக் கூடாத வார்த்தைகள் இவை. தன்னை அடக்கினாள்.

“அம்மா….நீங்க தூங்கிட்டீங்கம்மா…நான் பயந்துட்டேன்…..” இவளை அப்பி அணைத்தான் பிள்ளை. 7 வயதில் பெரிதாக மழலை எதுவும் கிடையாது அவிவ்விற்கு. ஆனால் பயந்தால் மட்டும் இவள் அம்மா மற்ற நேரம் மாம், மம்மா எல்லாம்.

வார்த்தை வரவிடாது கண்ணில் தண்ணி வந்தது. காயம் படாத இடக் கையால் பிள்ளையை அணைத்தாள்.

காயம் பட்டிருந்த அவள் தோளைப் பார்த்தான் மகன். “ரொம்ப வலிக்குதாம்மா…? நான் ப்ரே பண்ணிட்டேன்…சீக்கிரம் வலி போய்ரும்…” இவள் கண்ணீரின் காரணம் அது என நினைத்துவிட்டான் போலும் பிள்ளை. உண்மையில் உடலில் பட்ட அடி ஒன்றும் பலமில்லை. மனம்தான் மரித்திருந்தது. வாழும் ஆசை  இவளிடம் இடமின்றி இல்லாது போயிருந்தது.

“வலிக்கலைடா குட்டிப்பா….” என்றவள் குட்டிப்பா என்ற வார்த்தைக்கு பிள்ளையின் வழக்கமான அப்ஜஷகக்ஷன் யுவர் ஆனர் ஞாபகம் வர “சாரி அவிவ்மா” என மாற்றினாள்.

“இல்லமா அம்மாவுக்கு அவங்க சன் எப்பவுமே குட்டிப்பாதானாம்… அது….அது….. ஆங்…. எக்ஸ்ப்ரெஷன்  ஆஃப் லவ்…அப்புறம்…ம்…..ம்..டிஸ்ரெஸ்பெக்ட் இல்லையாம்… நிக்கோல் அங்கிள் தான் சொன்னாங்க..” குழந்தை பெருமிதமாய் சொல்லிக் கொண்டுபோக திக்கென்றது இவளுள்.

எத்தனை விதமாய் இதை அவள் சொல்லிப் பார்த்திருப்பாள்.? குழந்தை ஏற்றுக் கொண்டால் தானே….? இன்று நிக்கி சொல்லிவிட்டான் என்பதற்காக எத்தனை எளிதாக மாறிவிட்டான்? ….இந்த நிக்கி  கூப்பிட்டால் குழந்தை அவன் பின்னே போய்விடுவான் தானே?

மிரண்டு போய் இன்னுமாய் அணைத்தாள் மகனை. காயம் பட்ட கை வலித்தது இப்போது.

 “அவிவ் டியர் நீங்க தள்ளி வாங்க அம்மாவுக்கு வலிக்குது பாருங்க…” நிக்கியின் வார்த்தைகளில் அவன் மடிக்கு மாறியிருந்தான் மகன். கி கொடுத்த பொம்மை அதுதான் பிள்ளை அந்த நிக்கியிடம்.

இது ஃபேவரிடிசமா இல்லை ரத்த பாசமா?

“ப்ளீஃஸ் நீங்க கிளம்புங்க நிக்கி…” அவிவ் முன்னிலையில் இவள் நிக்கியை மதிக்க வேண்டிய தேவை அதிகமே…கெஞ்சினாள் இவள்.

“ஐயோ போகாதீங்க அங்கிள்…” பதறினான் மகன்.

“அப்டில்லாம் விட்டுட்டுப் போற ஐடியா எதுவும் இல்ல குட்டிப்பா…” அணைத்துக் கொண்டான் அவன்.

இவள் எதோ சொல்ல வாயைத் திறந்த அதே நொடி “ எக்‌ஸ்கியூஸ்மி “ என்றபடி உள்ளே வந்தான் அவன். மதுர்.

அத்தனைக்கும் பிறகும் அவன் வரவு ஆறுதலாக இருந்தது நல்லிசைக்கு. இவள் கீழே விழும் போதே தெரியும் அவனுக்கு விபத்து விஷயம் தெரிந்துவிடும் என அருகில்தானே இருந்தான். இவளுக்கான முதலுதவிகள் இன்ன பிற நிச்சயமாக அவனிடம் இருந்து இருக்கும் என்று நம்பினாள்.

காதல் என்ற அடிப்படையில் இல்லை எனினும் அறிமுகமானவர்கள் என்ற அடிப்படையிலாவது செய்வான்தானே.

ஆனால் கண்விழிக்கும் போது இங்கு இல்லையெனினும் இப்பொழுதாவது வந்திருக்கிறானே… நல்லிசைக்கு தான்  மதுரனிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்றெல்லாம் தெரியவில்லை ஆனால் நிச்சயமாக அவன் திருமண வாழ்க்கையில் வில்லி வேலைப் பார்க்கும் எண்ணம் துளியும் கிடையாது. அவனாவது முழுகுடும்பமாய் மூன்று தலைமுறை கண்டு வாழட்டும்.

“வாங்க மதுர்” இவளது அழைப்பில் முறைத்தான் நிக்கி மதுரனை. பின்னே அவனைப் போ என சொல்லும் அதே வாய் இவனை வா என்கிறதே!

“நீ யாரு? இங்க உனக்கென்ன வேலை?” வேறு யார் நிக்கிதான்.

“ஹலோ நான் வந்தது அவட்ட பேச….நீ யாரு இடையில….?” என்று எடுத்தெரிந்த தொனியில் தொடங்கிய மதுரன் ‘ப்ரீ’ என்றபடி திரும்பி வாசல் புறம் பார்த்தான்.

காரில் அவன் அருகில் இருந்த அந்தப் பெண் வந்து நின்றாள். “குழந்தைய கூட்டிட்டு வெளிய போய் நில்லுமா கொஞ்ச நேரம்…. ப்ளீஸ்டா “ அந்த பெண்ணிடமாக உருகியது மதுரனின் குரல்தான்.

நல்லிசைக்கு ஒன்றுமே புரியவில்லை ஆனால் நிச்சயமாக மதுரனின் செயல் எரிச்சலை தந்தது. சட்டமாக வந்து நிற்கிறான், எதோ அவன் வீட்டு சாமான் போல் பிள்ளையை தூக்கு என்கிறான்

“அவன் எங்கயும் போக மாட்டான்…” நிக்கிதான்…

“அவன் நல்லதுக்குதான் சொல்றேன் இசை….நான் பேசப் போற விஷயம் அவன் வயசுக்கு அதிகம்…” மதுரன் இவளைப் பார்த்து எரிச்சலாய் சொன்னான்.

நிக்கி இவளை ஒரு பார்வை பார்த்தவன் “வா அவிவ் “ என்றபடி பிள்ளையை அழைத்துக் கொண்டு வெளியே போனான். “பக்கத்துல தான் வெயிட் செய்றோம்…எதுனாலும் கூப்டுங்க இசை”

“உட்காருங்க மதுர்” இவள் இருக்கையை காண்பித்தாள்.

“நான் என்ன விருந்துக்கா வந்துருக்கேன்…? ஏன் தான் எனக்குன்னு எல்லாம் இப்டி நடக்குதோ? ஜஸ்ட் உன்ட்ட ஒரு விஷயம் பேசி முடிச்சிடனும்னுதான் வந்தேன்…லுக்…இது ப்ரீதா…என் ஃபியான்சி….2 வருஷமா லவ் பண்றோம்…வீட்ல சொல்லி இப்பதான் மேரேஜ் ஃபிக்‌ஸ் செய்தாங்க… முதல்ல இத மனசுல வச்சுக்கோ…என் மனசுல இவளத் தவிர வேற யாருக்கும் இடம் கிடையாது…” இவள் முகத்தை ஒரு கடு கடுப்புடன் பார்த்தான் மதுரன்.

எண்ணிலடங்கா உணச்சிகளுடன் எப்படி ரியாக்ட் செய்ய என தெரியாமல் அதிர்ந்து போய் பார்த்திருந்தாள் இசை.

”.இப்ப வந்து நிக்ற நீ…” பற்றி எரிந்தது அவன் குரல்.

“அது…மதுரனுக்கு 4 வருஷம் முன்னால ஊட்டில ஒரு ஆக்சிடெண்ட்….அதுக்குப் பிறகு உள்ளது தான் இப்போ இவருக்குத் தெரியும்….அதுக்கு முன்ன சின்ன வயசுல உள்ளதெல்லாம் ஓரளவு தெரியுது…இடையில் ஒரு 4 வருஷம் ஒன்னுமே தெரியலை….அன்னைக்கு நீங்க பார்த்தப்ப உங்கள இவருக்கு தெரியலை…அப்புறம் விசாரிச்ச பின்னால புரிஞ்சிது…”

அந்த ப்ரீத்தா மதுரனைப் போல் கடுகடுக்கவில்லை, ஆனால் பாவம் அவள் குரலே காட்டியது அவள் எவ்வளவாய் தவிக்கிறாள் என.

மதுரனுக்கு விருப்பமான ஒன்றை இசை மறுப்பதாவது? அதுவும் நான்கு வருடம் அவன் இவ்வுலகில் இல்லை என்றே நம்பி வாழ்ந்துவிட்டாள். இனி இவளுக்கு இல்லை அவன் என்றாக மட்டுமாக நினைத்து வாழ வேண்டும் அவ்வளவே. அவன் உயிரோடு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்ற நினைவே இவளுக்குப் போதாதா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.