(Reading time: 11 - 22 minutes)

ம்பாதிக்கிறது அத்தனையும் உங்க கிட்டே தானே கொண்டு வந்து கொட்டறேன். அதுக்கப்புறமும் என்னை நிம்மதியா விட மாட்டேங்கறேளே. அடிமையாவே வெச்சிருக்கேளே ஏன் பா?' அவன் கொஞ்சமாக பற்ற வைத்ததில், வெடித்து சிதறிய வார்த்தைகளில், பேச்சிழந்து போனார் அப்பா. தனது மகள் இப்படி பேசி கேட்டதே இல்லை. அவர் கண்ணின் ஓரத்தில் கண்ணீர் துளி..

அவள் பேசிய விதத்தில் சுவாசம் கூட எழ மறுத்தது கோதைக்கு. அப்பாவின் கண்ணீர் வேதாவை  சட்டென தரை இறக்கியது. அவள் ஏதோ பேச முயல்வதற்குள், கண்களை துடைத்துக்கொண்டு, துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு அருகில் இருந்த கோவிலை நோக்கி நடந்தார் அப்பா.

றுநாள் காலை பொழுது.

குளித்து முடித்து தனது தினசரி அனுஷ்டானங்களையும், காயத்ரி மந்திர பாராயணத்தையும் முடித்து விட்டு, ஹாலுக்கு வந்தான் கோகுல். சோபாவில் அமர்ந்து அன்றைய தினசரியை அவன் கையில் எடுத்து அவன் புரட்டிகொண்டிருந்த  நேரத்தில்  வெளியில் கிளம்பி விட்டிருந்த அப்பாவை வழி அனுப்பி விட்டு உள்ளே வந்தார் அம்மா.

அவரது முகத்தில் பலநூறு தயக்க ரேகைகள். மெது மெதுவாக ஆரம்பித்தார் 'கண்ணா இன்னைக்கு சாயங்காலம்....'

'என்ன? பொண்ணு பார்க்க போகணுமா?' தினசரியின் பக்கங்களில் கண்களை ஓட்டிக்கொண்டே பளிச்சென கேட்டான் கோகுல்.

'ஏற்கனவே தெரியுமாடா நோக்கு???'

'கார்த்தாலே நீயும் அப்பாவும் பேசிண்டு இருந்ததை கேட்டுண்டுதான் இருந்தேன். ஏம்மா என் மனசிலே இருக்கறது நோக்கு தெரியுமா தெரியாதா? பேப்பரை மடித்துக்கொண்டே அம்மாவின் முகத்தை நேராக பார்த்து கேட்டான் கோகுல்.

'அதுக்கில்லைடா......'

'தெரியுமா? தெரியாதா?'

'தெரியும்டா.... கோதைதானே? கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு ரெண்டு பேரும் பேசிண்டிருந்தேளே, பார்த்தேன் நான்....' தயக்கமான குரலிலேயே சொன்னாள் அம்மா. கோதை தனது மகனுக்கு ஏற்றவள் என்ற நம்பிக்கை அம்மாவுக்கு இன்னமும் வரவில்லை.'

'தெரியறதோன்னோ... அப்பா கிட்டே பேசு...'

'கண்ணா நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளேன். வேண்டாம் டா. நம்ம அந்தஸ்துக்கும், உன் படிப்புக்கும் அவளெல்லாம்..... .நேக்கு பிடிக்கலைடா அவளை...... '

'அம்.....மா.....'  அம்மாவின் முக சுளிப்பிலும், வார்த்தைகளிலும் சுள்ளென எகிறிய கோபத்தில் உயர்ந்தது அவன் குரல்... 'நேக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு அவ்வளவுதான். நோக்கு பிடிச்சிருக்கா, பிடிக்கலையாங்கிறதை பத்தி நேக்கு கவலையே இல்லை. புரியறதா??? இறுக்கமான முகத்துடனும், அழுத்தத்துடனும் வெளி வந்தது அவன் குரல். ' .

மெல்ல தலை குனிந்தார் அம்மா.

சில நொடிகள் கழித்து குரலை தாழ்த்திக்கொண்டு 'நீ பேசு. இல்லையானா சாயங்காலம் நானே அப்பா கிட்டே பேசறேன். நான் மனசுக்குள்ளே நேக்கு கோதைதான்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கப்புறம் இன்னொரு பொண்ணை பார்த்து, அவளை வேண்டாம்னு சொல்லி அவ மனசை கஷ்டப்படுத்த நேக்கு இஷ்டமில்லை.'

'டேய்... டேய்.... கண்ணா...' அம்மாவின் குரல் கெஞ்சலான ஸ்ருதிக்கு இறங்கியது. 'அப்பா அவாகிட்டே வரேன்னு சொல்லிட்டார்டா. இப்போ மாத்த முடியாது. சும்மா ஃப்ரெண்ட்லி விசிட் அப்படின்னு தான் சொல்லி இருக்கார். போய் சும்மா பேசிட்டு வருவோம். மதத்தை அப்புறம் முடிவு பண்ணுவோம்.'

'முடியாது....என்னாலே வர முடியாது......'

'கண்ணா... ப்ளீஸ்டா..... அப்பாவுக்காக. அவாத்துக்கு போயிட்டு மட்டும் வந்திடுவோம் அந்த பொண்ணைதான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் காட்டாய படுத்த மாட்டேன் உன் இஷ்டத்தை மீறி அம்மா எதுவும் செய்ய மாட்டேன் .'

ஏதேதோ பேசி அவனை வருவதற்கு சம்மதிக்க வைத்திருந்தார் அம்மா. அவனுக்கு தெரியவில்லை.!!!! இந்த சம்மந்தத்தை பற்றி அப்பாவிடம் சொன்னதே கோதையின் தந்தை தான் என்பது தெரியவில்லை.!!!!

வேதா காலையிலேயே கிளம்பி சென்று விட்டிருந்தாள். அப்பா அவளிடம் எதுவுமே பேசவில்லை. காலை பூஜைகள் முடிந்த பிறகே அப்பாவின் மனம் ஒரு நிலைக்கு வந்திருந்தது. கோதை, வேதாவை  பற்றி பேசுவதை தவிர்க்கவே விரும்பினாள்.

மௌனமாகவே இருந்த அப்பாவை திசை திருப்ப கேட்டாள் 'இன்னைக்கு சாயங்காலம் ஏதாவது வேலை இருக்கப்பா? எங்கேயாவது போகப்போறேளா?

அப்போதுதான் நினைவு வந்தவராக சொன்னார் 'ஆமாம்மா. மறந்தே போயிட்டேன் பாரு. நம்ம மதுசூதனன் மாமாவாதுக்கு போகணும். அவாத்து பொண்ணு ஸ்ருதிக்கு, நம்ம கோகுலை பார்க்கலாம்னு பேசிண்டிருக்கோம். ரெண்டு பேருக்கும் ஜாதக பொருத்தம் பிரமாதமா இருக்கு. சாயங்கலாம் அவாளை பொண்ணு பார்க்க வர சொல்லி இருக்கோம்.'

மலர்ந்து, மகிழ்ந்து போனாள் கோதை 'நிஜமாவா பா? 'கோகுலுக்கு கல்யாணமா????'

அவனுக்கு ஒரு நன்மை நடக்க போகிறதென்றால் எனக்கேன் இத்தனை ஆனந்தம்? என் மனதில் அவனுக்கு நான் கொடுத்திருக்கும் இடமென்ன? இதையெல்லாம் யோசித்து பார்க்க தெரியவில்லை கோதைக்கு.

அவளது குரலில் இருந்த சந்தோஷம் அப்பாவுக்கே வியப்பை கொடுத்தது. கோதை இப்படி மகிழ்ந்து போவதை பார்த்து நீண்ட நாட்கள் ஆனது போலே தோன்றியது அப்பாவுக்கு.

'பொண்ணு அழகா இருப்பாளாபா? கோகுலுக்கு பிடிச்சிருக்கா? நானும் பொண்ணு பார்க்க வரேன்பா.. கண்களில் ஆர்வம் மின்ன சொன்னாள் கோதை.

'நீயா? நீ எதுக்குமா அங்கே எல்லாம். யாரவது ஏதாவது நினைச்சிக்க போறா.'

'அப்பா... அப்பா... ப்ளீஸ்பா... நான் ஒரு ஓரமா உட்கார்ந்துக்கறேன். யாரண்டையும் ஒரு வார்த்தை பேச மாட்டேன். நேக்கு அந்த பொண்ணை பார்க்கணும் .கோகுலுக்கு ஏத்தா மாதிரி இருக்காளான்னு பார்க்கணும். ப்ளீஸ்பா..' குரலில் கெஞ்சலை தவிர வேறதுவும் இல்லை. அப்பாவால் மறுக்கவும் முடியவில்லை.

வேண்டா வெறுப்பாகதான் கிளம்பினான் கோகுல். அப்பாவை எதிர்த்து பேசி பழக்கம் இல்லை அவனுக்கு. தந்தை எனும் ஸ்தானத்துக்கு மரியாதை கொடுத்தே பழகி இருந்தான் அவன். அதனாலேயே அவர் சொல்லுக்கு கட்டுபட்டு கிளம்பிவிட்டிருந்தான்.

அப்பாவுமே  யாருடனுமே அதிகமாக பேசமாட்டார். மிக சில நேரங்களில் யோசித்து, செதுக்கி அவர் பேசும் வார்த்தைகளின் ஆழம் கேட்பவர்களை புரட்டிப்போடும்.

கிளம்பும் முன். 'சும்மா போய் சாதாரணமா பேசிட்டு, கிளம்பி வந்துண்டே இருக்கோம். அதுக்கப்புறம் அவாகிட்டே நீ ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கோ. அதுக்கும் மேலே கல்யாணத்துக்கு சம்மதம் அப்படி இப்படின்னு ஏதாவது பேசினேள்ன்னா, நான் எல்லார் முன்னாடியும் என் மனசிலே இருக்கறதை பேசிடுவேன், அப்புறம் மானம் போச்சு மரியாதை போச்சுன்னு குதிக்கப்படாது புரியறதா?' அம்மாவின் காதை கடித்து விட்டே கிளம்பினான் கோகுல்.

அவர்கள் வீட்டு வாசலை சென்று அடைந்தது கோகுலின் கார். வரவேற்பு மிக பலமாகவே இருந்தது. அவர்கள் வீட்டு கூடத்தில் போய் அமர்ந்தனர் கோகுல் குடும்பத்தினர். தர்மசங்கடத்தின் மடியிலேயே அமர்ந்திருந்தான் கோகுல். அங்கிருந்து கிளம்பி ஓடி விட வேண்டுமென்றே தோன்றிக்கொண்டிருந்தது அவனுக்கு.

வழக்கமான அறிமுகங்கள், நலம் விசாரிப்புகளுக்கு பிறகு அப்பா கேட்ட அந்த கேள்வி அவனை கொஞ்சம் நிமிர்த்தியது. 'ஸ்ரீதரன் வாத்தியார் வரேன்னு சொன்னாரே இன்னும் வரலையா?'

'இதோ வந்துண்டே இருக்கார். இப்போதான் போன் பண்ணார். அவர் பொண்ணும் வரேன்னு சொன்னாளாம். அவளையும் அழைச்சிண்டு வந்துண்டு இருக்கார்' சொன்னார் மதுசூதனன்.

கண்கள் விரிய நிமிர்ந்தான் கோகுல். வருவது கோதையா??? இங்கே எதற்கு வருகிறாள் அவள்??? யோசித்தவனின் பார்வை தன்னாலே வாசல் பக்கம் சென்றது.

கீதம் தொடரும்.....

Episode # 02

Episode # 04

{kunena_discuss:890}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.