(Reading time: 22 - 44 minutes)

மனதோர மழைச்சாரல்... - 05 - வத்ஸலா

பெருசா ஒண்ணுமில்லைமா. நீ மயக்கமா இருக்கும் போது சார் உனக்கு தாலிக்கட்டிட்டார் அவ்வளவுதான்.' உடலும் மனமும் ஒரு நொடி சிலிர்த்துப்போக அப்பாவிடமிருந்து விலகிய அவள் பார்வை, புன்னகை மாறாமல்  நின்றிருந்தவனை சரேலென அடைந்தது..

'தாலி கட்டிவிட்டானா????!!!! யார்? என் வசியா? என் வசி எனக்கு தாலி கட்டிவிட்டானா? ,நிஜமாகவா??? இதழ்களில் தன்னையும் அறியாமல் ஓடிய சந்தோஷ சிரிப்புடன் இமைகளை தாழ்த்தியவளின் பார்வையில் பட்டது அவளது கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலி.

அதை மெல்ல தொட்டு தனது கையில் ஏந்திக்கொண்டவளின் கண்கள் மின்ன, மனமெங்கும் சந்தோஷ மேகங்கள் கூட சில நொடிகள் வானத்தில் நடைப்பயின்றாள் அருந்ததி. இத்தனை நாட்கள் இவள் காத்திருந்தது இதற்காக தானே.!!!

Manathora mazhai charal

'ஆனால் சில நொடிகள்!!!! சில நொடிகளே அந்த ஆனந்தம். ஏதேதோ எண்ண ஓட்டங்கள்  சுருக்கென தைத்து செல்ல, மெல்ல மெல்ல தரை இறங்கினாள் அவள். அவளது சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்தது. கண்கள் தாலியின் மீதே நிலைத்திருக்க, அவள் உள்ளதில் அலை மோதின கேள்விகள். தாலி கட்டிவிட்டானா? ஏனாம்???? எப்படியாம்????? எதற்காம்?.?????

அப்பாவும், ரிஷியும் அவளது முக பாவங்களையே படித்தபடி நின்றிருக்க, அவள் நிமிர்த்தவில்லை கண்களை!!!!. இருவரும் அவளது முக மலர்ச்சியை தேடியே காத்திருப்பதை மட்டும் நன்றாக உணர முடிந்தது அவளால்.

'என்னமா ஷாக் ஆயிட்டியா? இருவரையும் அவர் புறமாக திருப்பியது இயக்குனரின் குரல். 'ஏதாவது மேஜிக் பண்ணி சேர்த்து வைங்கப்பான்னு கேட்டியே. அப்பா சேர்த்து வெச்சிட்டேன் பார்த்தியா?' குரலில் உற்சாகம் பொங்கி வழிய கேட்டார் அப்பா.

'அப்பா தான் இதை நடத்தி இருக்கிறாரா?' அம்மாவும் அஸ்வத்தும் இதற்கு ஒப்புக்கொண்டார்களா? அவளுக்குள்ளே இன்னும் அதிகமாக கேள்விகள். ஆனால் எதையும் யாரிடமும் கேட்கவில்லை அவள்.

எங்கிருந்தோ தேடிப்பிடித்து புன்னகையை இதழ்களில் கோர்த்துக்கொண்டாள் அருந்ததி. முகத்தில் மலர்ச்சியை கூட்டிக்கொண்டாள். அப்பாவின் எதிரில் எதையும் காட்டிக்கொள்ள விரும்பவில்லை அவள்.

ஆனால் அவனுக்கு நன்றாகவே புரிந்தது. 'ஹாய்... வசி...' என்று ஒவ்வொரு முறை அவனிடம் அவள் சாதாரணமாக ஓடி வரும்போது கூட அவள் கண்களில் தெறிக்கும் சந்தோஷ மின்னல்களின் சாயல் கூட இப்போது இல்லை.!!!!! இல்லை!!! இது என்னவளின்  இயல்பான மகிழ்ச்சி இல்லை!!!

இதை உணரவில்லை இயக்குனர். மகிழ்ச்சியின் உச்சியிலேயே நின்றார் அவர். என்ன தோன்றியதோ, ரிஷியின் பக்கம் திரும்பியவர் 'இங்கே வாப்பா...' என்றார்.

மெதுவாய் நடந்து அவளருகில் வந்து நின்றான் ரிஷி. அவள் இமைகள் மெல்ல உயர சந்தித்தன கண்கள். சரியாய் மூன்றே நொடிகள்!!!! தான் பேசிவிட்ட வார்த்தைகளுக்கு பல லட்சம் முறை மன்னிப்பு கேட்கும் தவிப்பு அவன் விழிகளில், உணர்சிகளை துடைத்துவிட்ட பாவம் மட்டுமே அவள் முகத்தில்....

சட்டென அவள் வலது கையை பிடித்து அவன் கையில் கொடுத்துவிட்டிருந்தார் இந்திரஜித். 'என் பொண்ணை உன் கையிலே பிடிச்சு கொடுத்திட்டேனப்பா. இனிமே எல்லாத்துக்கும் நீ தான் பொறுப்பு. பத்திரமா பார்த்துக்கோ '

கையிலிருந்த பூங்கொத்தை கட்டிலின் மீது வைத்தவன் 'நிச்சியமா அங்கிள்' என்றபடியே அவள் கையை தனது கைகளுக்குள் வைத்து அடைக்காத்துக்கொண்டான். அவள் முகத்தை பார்த்தபடியே அவள் அருகில் அமர்ந்தான்.

அவன் முகம் கூட பார்க்கவில்லை அவள். அவனது  கைகளுக்குள்ளிருந்து விடுபட தவித்தன அவள் விரல்கள். அவள் முகம் கசங்கி, குறுகியது. இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு பாவத்தை அவள் முகத்தில் பார்த்ததில்லை அவன். அவன் கைகள் அவள் விரல்களை தன்னாலே விடுவித்தன. சட்டென கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டாள் அருந்ததி.

இதை அறியாதவாரக 'உனக்கு ஒண்ணு தெரியுமா? உங்க கல்யாணத்தை பத்தி தான் இப்போ தமிழ்நாடு முழுக்க பேச்சு. எனக்கு எவ்வளவு போன் கால்ஸ் தெரியுமா? நீ நல்லா குணமானதும் இண்டஸ்ட்ரிலே ஒருத்தர் விடாம எல்லாரையும் கூப்பிட்டு கிராண்டா ஒரு ரிசெப்ஷன் வைக்கணும்.' குரலில் கலந்திருந்த உற்சாகம் கொஞ்சம் கூட குறையாமல் பேசிக்கொண்டிருந்தார் அவர். .

'எனக்கு திருமணம் நடந்தது எனக்கு தெரியும் முன்பாகவே உலகம் முழுக்க தெரிந்து விட்டதா????' மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள் அருந்ததி. அவனுக்குள்ளே அவளது ஒவ்வொரு முக பாவத்துக்கும் விளக்கவுரை ஓடிக்கொண்டிருந்தது.

அவளது முகத்தில் பரவிக்கிடந்த மிதமிஞ்சிய சோர்வு அவனை வருத்தியது.

'உடம்பு எப்படிடா இருக்கு? அப்பாவின் வார்த்தைகளுக்கு சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல் தலையாட்டிக்கொண்டிருந்தவளை கலைத்து திருப்பியது அவனது இதமான குரல்.

அவனது மென் குரலைக்கேட்டு கொஞ்சம் வியப்பில் விழுந்து மீண்டாள் அவள். இதுவரை அவன் அவளிடம் இப்படி பேசிக்கேட்டதில்லை அவள். நெருங்கி வரும் அவளை கத்தரித்து தள்ளி நிறுத்தும் அவசரம் மட்டுமே அவன் வார்த்தைகளில் எப்போதும் இருக்கும்.

சரியாய் அந்த நொடியில் அறைக்கதவு தட்டப்பட 'நாங்க உள்ளே வரலாமா..' ஒலித்தது சஞ்சீவின் குரல். அவன் அறைக்குள் நுழைய அவனுக்கு பின்னால் கையில் பூங்க்கொத்துக்களுடன் சில நடிக- நடிகையர். எல்லார் முகங்களிலும் மகிழ்ச்சி அலைகள்.

ரிஷி கட்டிலை விட்டு எழுந்து நிற்க, ரிஷியையும், அருந்ததியையும் சூழ்ந்து நனைத்தது அவர்களின் வாழ்த்து மழை. எல்லாவற்றக்கும் அழகான புன்னகையை மட்டுமே பதிலாக்கிகொண்டிருந்தாள் அருந்ததி.

இயக்குனருடனான அவர்களின் மரியாதை நலம் விசாரிப்புகளுக்கு பிறகு 'எங்களையெல்லாம் உனக்கு நிஜமாவே அடையாளம் தெரியுதா அருந்ததி?' தொடங்கினான் சஞ்சீவ்.

'ம்........ ஏன் சஞ்சா?'

அங்கே நின்றிருந்த ஒரு நடிகையின் கையை பிடித்து இழுத்து அவள் முன்னால் நிறுத்திகேட்டான் சஞ்சீவ் 'இவளை தெரியுதா.??? இவளைத்தான் மேக் அப் இல்லாம அடையாளம் கண்டு பிடிக்கிறது கஷ்டம்'

அவள் முறைத்து அவனை அடிக்க கை ஓங்க சின்னதாக சிரித்தாள் அருந்ததி 'நல்லா  தெரியுதே சஞ்சா'

'அப்பாடா...' என்றான் அவன். 'இல்ல, உனக்கு ஆக்சிடென்ட் வேறே ஆகியிருக்கு. நீ திடீர்னு நடுவிலே கொஞ்சம் பக்கத்தை காணோம் அப்படின்னு சொல்லிடுவியோன்னு எனக்கு ரெண்டு நாளா ஒரே பயம். அப்புறம் நீ நடிச்ச படத்தையெல்லாம் நான் உனக்கு திரும்ப நடிச்சு காட்டணும். நீ படத்திலே மாடி மேலே இருந்தெல்லாம் குதிப்பே. அதையெல்லாம் நான் எப்படி நடிச்சு காட்டுறது அப்படின்னு எனக்கு ஒரே கவலை'

அவன் வார்த்தைகளில் தன்னை மறந்து மனம் மலர சிரித்து விட்டிருந்தாள் அருந்ததி. 'அவளது சிரிப்பில் தொலைந்தே போனான் ரிஷி' அவளை விட்டு விழி அகற்றவில்லை ரிஷி.

எல்லாரும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் ரிஷி. அவள் ஒரு முறை தன்னை திரும்பி தன்னை திரும்பி பார்த்துவிட மாட்டாளா என்று ஒரு ஏக்கம் அவனுக்குள்ளே. அவளும் இத்தனை நாட்கள் இப்படிதான் தவித்திருப்பாளோ?. நான் ஒரு முறை நான் திரும்பி பார்த்து விட மாட்டேனா என ஏங்கியிருப்பாளோ?

'ரோஜாப்பூ...' மிக ரசியமாய் தனக்கு மட்டும் கேட்கும் வகையில் உச்சரித்தான் ரிஷி 'ஒரு தடவை என்னை பாருடா.'

என்ன புரிந்ததோ? எதை உணர்ந்தாளோ? சரேலென திரும்பி அவனை பார்த்தாள் அருந்ததி. சில வினாடி  பார்வை உரசல், பின்னர் சட்டென இமை தட்டி விலகிக்கொண்டாள் அவள். சில்லென்ற தூறல் அவனுக்குள்ளே. போதும். இப்போதைக்கு இது போதும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.