(Reading time: 14 - 28 minutes)

10. நகல் நிலா - அன்னா ஸ்வீட்டி

ல்லிசைக்கு நடப்பது எதையும் முழுதாக உணரக் கூட முடியவில்லை. மதுரனிடமிருந்து இப்படி ஒரு நடத்தையை அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அவனால் இப்படி கூட பேச முடியுமா? இப்படி பட்ட கீழ்தர எண்ணங்கள் கூட அவன் இதயத்தில் வருமா? அதுவும் இவள் மீது…..

என்ன வேண்டும் அவனுக்கு? இவள் அவன் வாழ்வில் வருவது அவனுக்கு ப்ரச்சனை என்றான்…..அதன் உண்மையை இவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது தான்….இப்பொழுது தான் விலகிவிட்டாளே அதுவும் மொத்தமாய் முழுதாய்.  திரும்ப வர முடியாத பாதைக்குள் திருமணம் எனும் பயணத்துக்குள் நுழைந்து விட்டாள்தானே…இன்னும் என்னவாம் அவனுக்கு?

என்னமாய் வார்த்தைகளை கொட்டிவிட்டான்?  விஷம் கூட இத்தனை வேதனை தராதே!!! அவிவைப் போய் என்னதாய் சொல்லிவிட்டான் அவன்? கணவனின்றி கையில் குழந்தையோடு நின்ற இவளை உலகம் ஆயிரம் பேசலாம், ஆனால் அவன் பேசலாமா? இவளை மட்டுமா குறை சொன்னான், அவன் தங்கையின் குழந்தையையும் தானே அது களங்கப் படுத்தும்….

Nagal nila

தான் மெல்ல நடுங்கிக் கொண்டிருப்பதையும், தன் உடல் கொதித்துக் கொண்டிருப்பதையும் தான் நிக்கியின் கைகளுக்குள் மெல் அணைப்பில் இருப்பதையும் மெல்ல மெல்ல உணர்ந்தாள் அவள்.

முழுவதுமாய் புரிய பதறி விலகினாள் பெண்.

“சாரிமா….” சொன்ன நிக்கியின் முகத்திலும் குரலிலும் அத்தனை அத்தனை குற்ற உணர்வு.

இந்த நிக்கியை என்னதாய் நினைக்க? கட்டாயப் படுத்தி கல்யாணம் செய்துவிட்டு, பின் கட்டியணைப்பதற்கு  சாரி கேட்கும் paradox ப்ரஜை.

ஆனாலும் இன்று இவன் இல்லாமல் இவள் சமாளித்திருப்பாள் என்று சொல்வதற்கில்லை. ஏன் அன்று ஹாஸ்பிட்டலில் பிள்ளையத்தா என பேட் அங்கிளாய் வந்து நின்றானே மதுரன் அந்த நேரத்தையும் கூட நிக்கி இல்லாமல் இவள் எப்படி சமாளித்திருப்பாளாம்???

“உன்ன அங்க நான் அப்டி அனுப்பியிருக்க கூடாது…”

ஓ அதுக்குதான் சாரியா!!!

மெல்ல தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள முனைந்தாள் இசை. தான் வீட்டில் இருப்பதே இப்பொழுது தான் முழுதாய் புரிபடுகிறது.

“அவிவ்….?” இவனும் இவளுமாக இங்கே என்றால் குழந்தை எங்கே?

“அவனுக்கு டி வி போட்டு கொடுத்து உட்கார வச்சுருக்கேன்…..”

ஏனோ சொல்லத் தோன்றியது இசைக்கு

“தேங்க்ஸ் நிக்கி….நீங்க இல்லனா சமாளிச்சுருக்க மாட்டேன்…”

கேட்டிருந்த அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

என்ன நினைக்கிறான் இவன்.? மதுரனும் தான் என்ன நினைக்கிறான்? ஏதாவது இவளுக்கு புரிகிறதாமா?

நிக்கியை விட்டு விலகி நடந்தாள். உடல் வெகு பாரமாய் இருப்பது போல் உணர்வு.

போய் அப்படியே படுக்கையில் விழுந்தது தான் தெரியும் அவளுக்கு.

இடையில் எப்பொழுதோ நிக்கி அவளை எதற்கோ அழைத்தது ஞாபகம் இருக்கிறது. மற்றபடி எதுவும் இல்லை. உலகிற்கு திரும்பி வர கொஞ்சமும் விருப்பம் இல்லை.

நெற்றியில் ஏதோ சில்லிடுகிறது. அந்த உணர்வில் மெல்ல கண் திறந்து பார்க்கிறாள்.  கண்களை தன் கையால் அழுந்த துடைத்துக் கொண்டு திரும்பவுமாக கூடப் பார்த்தாள். பார்க்கும் விஷயம் உண்மை தான்.

அம்மா…..!!!!

எங்கு சேர்த்து வைத்திருந்தாள் இத்தனை நாள் இத்தனை அழுகையை என நல்லிசைக்கே தெரியாது…. கதறிவிட்டாள்….

மடியில் விழுந்து…… கட்டி அணைத்து….

“சாரிமா…..சாரிமா…வெரி சாரிமா…..” இதை தவிர வேறு எந்த வார்த்தைகளும் வாயிலிருந்து வரவேயில்லை….

மதுர் விஷயத்தில் அப்பா தப்பு செய்திருக்கலாமாய் இருக்கும்….ஆனால் இவள் ஏன் அம்மாவையும் தண்டித்துவிட்டாள்? அவிவைப் பிரிய நினைக்க கூட இவளுக்கு எப்படி இருக்கிறதாம்? இவளைப் பிரிந்து அம்மா என்னமாய் துடித்துப் போயிருப்பார்?????

ஒரு கட்டத்தில் அழுகை கேவலாகி, அதுவே பின்  மூச்சுக்காய் அவள் தவிக்கும் படி மூச்சிளைப்பாகியது.

“aunty அவள எழும்பி உட்கார வைங்க….மூச்சுவிட ஈசியா இருக்கும்…..” நிக்கியின் குரலில் அவனும் அங்கு இருக்கிறான் என்பதே அப்பொழுதுதான் உறைக்க அவன் தான் அம்மா இப்பொழுது இங்கு வரக் காரணம் என புரிய, தலை தூக்கி அவனை திரும்பிப் பார்க்கிறாள். இசை.

அவனையும் மீறி இப்பொழுது இவள் கண்களுக்கு கிடைப்பது…..அது அது….அப்பாதானே!!!

தாடியும் தவிப்புமாய்…எலும்பும் தோலுமாய்……

எதுவும்….யாரும்…..என்னமும் நியாபகம் வரவில்லை நல்லிசைக்கு

துள்ளி எழுந்தவள் அடி பட்ட மானாய் கதறியபடி  அப்பாவின் மார்பில்….

“ஐயோ அப்பா!!!! என்ன செய்துட்டேன்பா நான்….?”

அழுகையெல்லாம் ஓய்ந்து ஓரளவு நிதானப் பட்ட பின் அம்மா தான் இவளை அழைத்தாள்.

“லிசிமா….போதும்டா….போய் முகம் கழுவி ஃப்ரெஷப் செய்துட்டு வா….மாப்ளயும் எவ்ளவு நேரம் வெய்ட் பண்ணிட்டு இருக்கார் பாரு….சாப்ட போலாம் வா…”

அம்மா இயல்பாய் நிக்கியை மாப்பிள்ளை என்க முன்பு அவர் மதுரையும் அப்படித்தானே சொன்னார் என ஞாபகம் வந்து வைக்கிறது……ஆனாலும் அதையும் இதையுமாய் நினைத்து இப்பொழுது யார் மனதையும் காயப் படுத்த இவளுக்கு விருப்பம் இல்லை…..

ம்மா சொன்னபடி எழுந்து போய் இவள் கிளம்பி வந்த போது, கிட்சன் டைனிங் டேபிள் அருகில் அனைவரும் ஆஜர். அவிவும் அவனது தாத்தாவும் ஒரு டேபிளில், இவளது அம்மா பரிமாற தயாராக அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, நிக்கி அவருக்கு எது தேவைப் படும் என்பதை பார்த்து பார்த்து ஒவ்வொரு பாத்திரமாய் எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தான்.

“போய் உட்காருங்க மாப்ள…நான் பார்த்துப்பேன்….இந்தா லிசி வந்தாச்சு….நாங்க பார்த்துப்போம் உட்காருங்க….”

இவளைப் பார்த்ததும் நிக்கி முகத்தில் ஒரு கூடுதல் மலர்ச்சி. அவனைப் பார்த்து புன்னகைத்து  வைத்தவள் போய் அவளது அப்பா அருகில் அமர்ந்து கொண்டாள்.

“ஏய்….இதென்ன….போய் மாப்ள பக்கத்துல உட்காரு….” வேற யாரு அம்மா தான்.

“இல்ல இப்ப அப்பா கூடதான்…..”  சொல்லியபடி அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டாள் இவள்.

அம்மா இவளை ஒரு பார்வை, நிக்கியை மறு பார்வை பார்த்தார். பின் எதுவும் சொல்லவில்லை….

“எவ்ளவு நாள் கழிச்சுப் பார்க்றா…இருக்கட்டும் aunty….தினமும் என் கூட தான…” நிக்கி தான்.

“நீங்களும் உட்காருங்க aunty….எல்லோரும் அவங்கவங்களே செர்வ் செய்துக்கலாம்…..” நிக்கியின் பிடிவாதத்தில் அதுதான் நடந்தது.

அப்பா இவளுக்கும் அவிவிற்குமாய் ஊட்டிக் கொண்டே சாப்பிட, நிக்கி இவள் அம்மாவுடன் அரட்டைக் கச்சேரி செய்தபடி…..

ஏதோ எங்கோ இவளுக்குப் பிடிக்கிறது. வாழ்க்கை ஒன்றும் கொடூரமானது இல்லை தான் போலும்.

லன்ச் ஆர்டர் செய்யலாம் என்ற நிக்கியின் ஐடியாவை அவன் சொன்ன வேகத்தில் மறுத்துவிட்ட அம்மா, மதிய சப்பாடு சமைக்கவென கிட்ச்சனை ஆக்ரமித்ததோடு, இவளை தன்னுடன் நிறுத்திக் கொண்டார். அம்மாவுக்கு உதவி என்பதை விட அவருக்கு இவளிடம் தேவைப்பட்டது உறுதி. மகள் நன்றாக இருக்கிறாள் என்ற உறுதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.