(Reading time: 14 - 28 minutes)

லையை குனிந்து கொண்டு தான் உள்ளே நுழைய வேண்டும் என்ற கட்டாயத்தை பறைசாற்றும் முன் புறமாக தாழ்ந்து நிற்கும் வீடுகள். ஒன்றோடொன்று ஒட்டியப்படி வரிசையாக காட்சியளித்த சந்து சந்தான தெருக்களை கடந்து சென்றவளுக்கு எல்லாம் வித்தியாசமாக இருந்தது. வழியில் தென்ப்பட்ட பெண்ணிடம் சித்தாராம்மா வீட்டை பற்றி விசாரித்து அவள் கை காட்டிய வீட்டு முன் சென்று கதவை தட்டினாள்.

"ஹா ....இதோ வருகிறேன்..." என யாரோ கத்திய குரலின் பின் கதவு திறக்கப்பட்டது. ஒரு பதிமூன்று வயது மதிக்கத்தக்க சிறுமி பாவாடை சட்டை அணிந்து ரெட்டை ஜடையிட்டு முகத்தில் கேள்வியோடு நின்றிருந்தாள். அதை வாய் வார்த்தையாகவே "யார் வேண்டும்" என்று கேட்டும் விட்டாள்.

சிரிப்புடன் சித்தாராம்மாவை பார்க்க வந்தேன் என்றவளை ஒரு சில நிமிடம் யோசனையுடன் பார்த்தவள் ஏதோ சொல்ல வரவும் சித்தாராம்மா இறுமிக் கொண்டு பின்னாலே வரவும் சரியாக இருந்தது. இந்திராவை பார்த்து சில நிமிடங்கள் ஆச்சர்யமாக விழி விரித்தவள் "வாங்கம்மா உள்ளே வாங்க..." என்றாள் பணிவான மரியாதை கலந்த குரலில்.

ஒரு இரும்பு சேரை இழுத்து போட்டு அதில் இந்திராவை அமர வைத்தவள் தன் இரு மகள்களிடம் அவளை அறிமுகம் செய்தாள். அதோடு தன் மூத்த மகள் அஞ்சுவை காபி கலந்து எடுத்து வரவும் பணித்தாள். சமையல் அறையினுள் சென்று தான் சமீபமாக விருப்பப்பட்டு வாங்கிய அழகான ஒரு பீங்கான் கப்பில் காபியை கலந்து எடுத்து வந்தாள்அஞ்சு. எந்த மறுப்பும் கூறாமல் அதை வாங்கி அருந்தினாள் இந்திரா. அருந்தி முடித்த கப்பை தரையில் வைத்தவள் தன் கைப்பையினுள் ஏற்கனவே தயாராக வைத்திருந்த சில ஐநூறு ருபாய் தாள்களை எடுத்து சித்தாராம்மாவிடம் கொடுத்தாள். 'வேண்டவே வேண்டாம்...' என மறுத்துவிட்டாள் சித்தாராம்மா. இப்படி தான் நடக்கும் என இந்திராவிர்கு ஆரம்பத்திலே தெரியும்...

சேரை நகர்த்தி விட்டு அவர்களுடன் பாயில் சம்மனமிட்டு அமர்ந்தவள் "அஞ்சுக்கு ஒரு அக்கா இருந்து இப்படி காசு கொடுத்தா அதை வேணாம்னு சொல்லுவீங்களா...? இல்லை தானே... இப்போ என்னை உங்க முதல் மகளா நெனுச்சு இதை வாங்கிக்கோங்க..." என்றாள் சாமார்த்தியமாக. இப்படியொரு தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்ப்பார்க்காத சித்தாராம்மா என்ன சொல்வதென்று அறியாமல் அமைதியாக இருந்தாள். இந்திராவிர்கு அவளின் மேலுள்ள மரியாதை கூடியதே தவிர தன் பணத்தை வாங்காதவளின் மீது பரிதாபம் வரவில்லை.

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

இது வேலைக்காவாது என முடிவெடுத்தவள் "சரிம்மா நீங்க தயங்தறது புரியுது... நீங்க என்னை மகளாகவும் நினைக்க வேண்டாம் பணத்தை சும்மாவும் வாங்க வேண்டாம்... அட்லீஸ்ட் இதை நீங்க உங்களோட முன் சம்பளமா வாங்கிக்கோங்க...உடம்பு சரியானப்புறம் இதை வேலை செய்து கணக்கு சரி செய்திடலாம்... அதுக்காக இத கடன் வாங்கினதா நினைச்சு வருத்தப்படவும் வேணாம்... செய்ய போகிற வேலைக்கு கிடைக்கற பலனா கணக்கிட்டுக்கோங்க... நான் வந்து உங்கள அடிக்கடி பார்த்துட்டு போவேன்.. அதுல எந்த தயக்கமும் உங்களுக்கு இல்லையே...?" என கடகடவென பேசியவளை கவலையுடன் தடுத்த சித்தாராம்மா  "அய்யோ அப்படி எதுவும் இல்லம்மா...உதவி செய்ய இவ்வளவு தூரம் நீங்க வந்ததுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷமும் நிம்மதியும் கூட..." என மனமுருகியவள் பெரும் தயக்கத்துடன் அந்த பணத்தை வாங்கி கொண்டாள்.

அஞ்சுவிர்கும் ஜினுவிர்கும் இந்திரா பேசிய பேச்சும் அவளின் இளகிய மனமும் பிடித்துப் போனது. அவள் கிளம்பும் வரை "அக்கா அக்கா" என ஹிந்தியில் ஓராயிரம் முறை அழைத்திருப்பார்கள். அன்று முதல் இரண்டு நாளில் ஒரு முறையாவது சித்தாராவின் வீட்டிர்கு விசிட் அடிப்பதை வழக்கமாக்கி கொண்டாள். அதில் பல முறை பழ வகைகளும் தின்பண்டங்களும் கூட வாங்கிச் சென்றாள்.  சித்தாராவிர்கு ஏனோ இந்திராவின் அன்பு புதிதாகவும  ஆறுதலாகவும் இருந்தது.

ரவீந்தர் ஊரில் இல்லாததால் ஒரு கேஸ் சம்மந்தமாக முக்கியமான சில காகிதங்கள் தயார் செய்து அதை நகல் எடுத்து வைக்க ரவீந்தர் ஷீத்தலிடம் கூறியிருந்தார். மதிய நேரம் மித்ராவுடன் உணவகம் கிளம்ப போனவளின் கைப்பேசிக்கு ஷீத்தலிடமிருந்து அழைப்பு வந்தது. ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டதால் கொஞ்ச நேரத்தில் அலுவலகத்திர்கு வந்துவிடும் க்ளைன்டை காத்திருக்க சொல்லுமாறு கேட்ட தோழியிடம் "பதட்டப்படாம வா...நான் பாத்துக்குறேன்..." என்று சமாதானப்படுத்தி விட்டு மித்ராவை முன்னே அனுப்பியதோடு தனக்கான சீட்டில் மீண்டும் அமர்ந்து கொண்டாள். சில நிமிடங்களில் அலுவலகத்தின் முன் அதிக விலைமதிப்புள்ள  காரில் இருந்து முரட்டு முக பாவனையோடு நாற்பது வயதினுள் இருக்கும் ஒருவனும் அவரை விட வயதுள்ள இன்னொருவரும் இறங்கி சரசரவென  உள்ளே நுழைந்தனர்.

அனுமதி எதுவும் கேட்காது உள்ளே நுழைந்தவர்களில் "வக்கீல் எங்க...??" என்றார் அந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதன் ஹிந்தியில் சற்று அதட்டலான குரலில். 'என்னதிது கொஞ்சம் கூட சென்சில்லாம...' என எண்ணியவாறு அவரையே முறைத்தவள் அப்போது தான் கவனித்தாள் பக்கத்தில் அருவறுப்பான பார்வையால் தன்னையே அளவெடுத்துக் கொண்டிருந்த அந்த மற்றொருவனை. ஒரு வெறுப்பான பார்வையை இருவரின் மேல் உமிழ்ந்தவள் "அங்க வெயிட் பன்னுங்க..." என்றாள் ஓரமாக போடப்பட்டிருந்த சோபா இருக்கையை சுட்டி காட்டி. சோபாவில் அமர்ந்திருந்தவனின் பார்வை இந்திராவையே வெறித்துக் கொண்டிருக்க இந்திராவிர்கு 'எவன்டா இவன்... பார்வையும் அவனும் ஆளும் ச்சை..' என்று எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.

கொஞ்ச நேரம் இந்திராவை சோதித்து விட்டு  "சாரி சாரி" என்றவாறு உள்ளே நுழைந்தாள் ஷீத்தல். அவர்களிடம் ஒரு நகலை கொடுத்து எல்லாம் பேசி முடித்து அனுப்பிவிட்டு வந்தவள் "ஹே இந்து இன்னும் கிளம்பலையா நீ..??" என்றாள் ஆச்சர்யமாக. இல்லை என்பது போல் தலையாட்டியவள் "இப்போ வந்தவுங்க தான் அந்த ஆக்ஸிடென்ட் கேஸ்ல மாட்டினவுங்களா....?" என்று கேட்ட தோழியை பார்த்து சலிப்பாக சிரித்த ஷீத்தல் "ம்ம்... இவனுக தான்...பட் இப்போ வந்தது வேறொரு மேட்டருக்காக.. நீ ஃபீவர் வந்து லீவ்ல இருந்தப்போ தான் இவனுக டீடைல்ஸ் ஒட்டு மொத்தமா தெரிஞ்சுது.. பக்கா க்ரிமினல்ஸ்... ரவீந்தர் சார் ஏன் தான் இந்தாளுகள புடிச்சிட்டு அலையுராறோ...!!!" என்றாள் வெறுப்பாக.

ரவீந்தர் சமீபமாக கையாளும் ஆக்ஸிடன்ட் கேஸை பற்றி இந்திராவும் அறிந்திருந்தாள். திட்டமிட்ட சதியென்று ஆதாரமாக நிரூபிக்கப்பட எல்லா வாய்ப்புகள் இருந்தும் குற்றவாளியின் அதிகார பலத்தால் பாதிக்கப்பட்ட நபரின் போராட்டம் காற்றறோடு பறந்த இறகாய் இடம் தெரியாமல் போன கதை ஷீத்தல் மூலம் தெரிய வந்ததும் ரவீந்தரை நினைத்து இந்திராவிர்கு ஆத்திரமாக வந்தது. சட்டம் மட்டுமல்லாது அதன் ஓட்டைகளையும் அறிந்து வைத்துக் கொண்டு காசை சம்பாரிக்க ஏன் இந்த புனிதமான பணியை உபயோகிக்கிறார் என தோழியிடம் கூட ஒரு முறை நொந்து கொண்டாள். அதை பற்றி மேலும் எதுவும் பேசாமல் இருவரும் வீட்டிர்கு கிளம்பினர். பேசி இருந்தால் இனி வரப்போகும் பிரச்சனைகளை தடுத்திருக்கலாமோ...?

நாட்கள் உருண்டோடியது. சித்தாரா எப்போதும் போல் வேலைக்கு வர ஆரம்பித்திருந்தாள். சித்தாராவின் மகள்கள் அஞ்சுவையும் ஜினுவையும் அடிக்கடி சென்று பார்ப்பதை இந்திராவே ஒரு நாள் நிரஞ்சனாவிடம் கூறவும் முதலில் திடுக்கிட்டாலும் பின்பு மருமகளின் உதவும் நோக்கை புரிந்து கொண்டு "எல்லாம் சரி தான்... ஆனால் அதிகம் சிரமம் எடுத்துக்காதே" என்ற செல்ல கண்டிப்புடன் இந்திராவின் போக்கிலேயே விட்டு விட்டாள் அவளின் அன்பு மாமியார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.