அங்கே கோகுலின் வீட்டில்.... தனது கைப்பேசியில் முரளியை அழைத்தான் கோகுல்.... எப்படியும் அவன் இப்போது தூங்கி இருக்க மாட்டான் என்று தெரியும் கோகுலுக்கு....
'சொல்லுடா... சாப்பிட்டாச்சா?
எப்போது அழைத்தாலும் எல்லாரையும் இப்படிதான் கேட்பான் முரளி.
'இந்த உலகத்திலே மரணத்தையும், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு தெரியாதவனோட பசியையும் தவிர வேறெதுவுமே சீரியஸ் இல்லைடா' என்பான் அவன். பசி என்று யார் சொன்னாலும் அவர்களை வயிறு நிறைய சாப்பிட வைத்து விட்டு அதன் பிறகு அவர்களிடம் பேசுவதே அவனது வழக்கம்.
'சாப்பிட்டேன்டா... நீ என்ன பண்றே?
'ஸ்வீட் சாப்பிடறேன்...'
'அடப்பாவி... நடு ராத்திரிலே ஸ்வீட்டா? சரி அதை விடு மன்னி போட்டோ அனுப்பி இருந்தேனே பார்த்தியா? பிடிச்சிருக்காடா???
'பிடிச்சிருக்காவா? டேய்... நீயே உன் மனசை தொட்டு சொல்லு இதுவரைக்கும் நான் ஏதானும் ஒரு பொண்ணை பிடிக்கலைன்னு சொல்லி இருக்கேனா? நீங்களா ஒரு பொண்ணு போட்டோ காட்டறேள் நீங்க எல்லாருமா சேர்ந்து ஜாதகங்கறேள், பொருத்தங்கறேள், அப்புறம் இந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிடறேள்.... நானும் பல வருஷமா ஏதானும் ஒரு பொண்ணு என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லி நேக்கு எப்படியாவது மாங்கல்ய பாக்கியம் வந்துடாதான்னு ஜன்னல் கம்பியிலே கன்னத்தை வெச்சுண்டு காத்துண்டிருக்கேன்......' அவன் தனது குரலில் வருத்தத்தை பொருத்திக்கொண்டு சொல்ல கலகலவென சிரித்தான் கோகுல். இப்போது என்று இல்லை எப்போது அவனுடன் யார் பேசினாலும் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் சிரிக்க வைத்து விடுவான் முரளி.
'சிரிடா சிரி... என் கவலை நேக்கு ...' என்று கையில் இருந்த குலாப்ஜாமுனை இன்னொரு விள்ளல் வாயில் போட்டுக்கொண்டான் முரளி.
You might also like - Kanaamoochi re re... A romantic comedy...
'அதெல்லாம் இருக்கட்டும் நீ நேரடியா சொல்லு மன்னி போட்டோ பார்த்தியா இல்லையா?' அவன் பார்த்திருக்க மாட்டான் என்று கோகுலுக்கு தெரியும்.
'பார்த்துக்கலாம்டா. நிச்சயதார்ததிலே பார்த்துக்கலாம். அவதான் நேக்குன்னு ஆனப்புறம் உரிமையோட பார்த்துக்கலாம்' என்றான் முரளி. அவன் எப்போதும் அப்படிதான் என்று தெரியும் ஆனால் விளையட்டாக புலம்ப மட்டும் செய்வான்.
'எனக்கு 31 வயசு தாண்டா ஆச்சு. ஆனா எங்கே போனாலும் என்கிட்டே பேசறது எல்லாம் வயசான டிக்கெடாவே இருக்குடா. மனசு ஆறுதலா யாராவது ஒரு சின்ன பொண்ணு ஃபோனாவது பண்ணுமானு பார்த்தா....... கார்த்தாலே எழுந்ததும் எங்கப்பா... மறுபடியும் எங்கப்பா... திருப்பியும் எங்கப்பா... சாயங்காலம் வேறே ஏதோ ஒரு நம்பர்லேர்ந்து ஃபோன் அவசரம் அவசரமா எடுத்தேன் .....'
'எடுத்தா???"
'அது உங்க அப்பா... வெறுத்து போய் ஃபோன் ஆஃப் பண்ணிட்டேன்...'
தன்னை மறந்து சிரித்தான் கோகுல் . 'ஓ... அதனாலே தான் மன்னி ஃபோன் பண்ணும் போது கிடைக்கலையா? தன் பங்குக்கு கொஞ்சம் தூவினான் கோகுல்
'என்னது வேதா போன் பண்ணாளா???
அப்படிதான் போலிருக்கு. சரியா தெரியலை....'
'டேய் ..... விளையாடதே நிஜமா ஃபோன் பண்ணாளா?'
'நேக்கு தெரியாது பா. நம்பர் இருக்கு இல்ல ஃபோன் பண்ணி கேட்டுக்கோ..' அழைப்பை துண்டித்தான் கோகுல்.
தனது அறையில் தலையணையில் முகம் புதைத்து கிடந்தாள் வேதா. ஒலித்தது அவள் கைப்பேசி. புதிய எண்ணாக இருக்கிறதே என்றார் யோசித்தபடியே ஏற்றாள் அழைப்பை.
'வேதா????'
'எஸ்...'
'நான் முரளி பேசறேன்...' 'முரளி' பெயர் அறிவை எட்டி அவன் யாரென்று தெரிந்து கொள்ள அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டன.
'ஆங்... நா... நான்.. வேதாதான் பேசறேன். சொல்லுங்கோ...'
'சாப்பிட்டியாடா?' என்றான் முதல் கேள்வியாக.
அவனின் குரலில் இருந்த இதம் அவளை ஈர்க்க தவறவில்லை. கொஞ்சம் தடுமாறி 'ம்? ம்? சாப்பிட்டேன்' என்றாள் வேதா
'அதுக்கு ஏன் இவ்வளவு யோசனை? என்ன சாப்பிட்டே..?"
'அது வந்து தெரியலையே... என் தங்கை ஏதோ கலந்துண்டு வந்து உருண்டை பிடிச்சு குடுத்தா. நான் அப்படியே சாப்பிட்டிடுட்டேன்.' அவள் குழந்தை போல் சொல்ல புன்னகை பிறந்தது முரளியின் உதடுகளில்.
'அப்படியா... வெரி குட்' இதமாக சொன்னான் முரளி. அவனது மனதின் ஓரத்தில் கொஞ்சமாக இடம் பிடித்துக்கொண்டாள் அவள்.