(Reading time: 15 - 30 minutes)

06. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி

ருள் மறைந்து மெல்ல மெல்ல சூரிய ஒளிக்கதிர்கள் பூமிக்குள் பிரவேசித்தன.  சோம்பலாய் கண் சிமிட்டிய சூரியனை பார்த்து எள்ளி நகையாடியப்படி  காலைக்கடனை தொடங்கி வைத்தன எறும்புகள்..  காலை உணவை தேடிச் சென்று கொண்டிருந்த எறும்புகளின் பயணம் காரில் இருந்த பெண்களையும் எழுப்பிவிட்டது .. காரில் இருந்த வினிதாவை எறும்பு கடிக்க , சுயஉணர்வு பெற்று கண்விழித்தாள்  அவள் .

அதன் வலியில் சற்று நினைவு வந்தவளின் கண்கள், தாங்கள் இருக்கும் நிலையை எடுத்து காட்டியது.. சற்று முன்பு நடந்த ஒரு பெரிய விபத்தில் அவர்களது கார் கவிழ்ந்து கிடக்க, அவளையும் சித்ராவையும் கழுத்து நெரித்து கொள்வதற்காக ஓர் உருவம் வந்தது.. உடல் எங்கும் அவளுக்கு வலித்தது.. இருப்பினும் தப்பிக்க வேண்டுமே! தன்னால் இயன்றவரை முயன்று குரல் எழுப்பி, சித்ராவையும் விழிக்க வைத்தாள்.. பெண்கள் இருவருமே காரில் இருந்து வெளிவந்து தலை தெறிக்க ஓடினர்.

தங்களை காப்பாற்றி கொள்ளும் உந்துதலில் பயந்து ஓடிய பெண்கள், எதிரில் வந்த ஒருவர் மீது மோதி சட்டென நின்றனர்.

Nizhalaai unnai thodarum

"என்னமா வினி, காலையிலேயே ரெண்டு பேரும்  ஓடி பிடிச்சு விளையாடிக்கிட்டு இருக்கீங்க? அதுசரி, அதுக்காக என் மேல ஏன் மோதிட்டிங்க?" புன்னகையுடன் அமைதியாய் வினவிய செக்யூரிட்டியை ஏதோ பேயை  பார்ப்பது போல பார்த்து வைத்தனர் இருவரும்.

முதலில் அதை கவனிக்காமல் பேசிக்கொண்டே போன அவர், இருவரும் தன்னை பயத்துடன் பார்ப்பதை கண்டுக்கொண்டு புருவம் உயர்த்தினார். "என்னம்மா உங்க முகமே சரி இல்லை.. ஏதும் பிரச்சனையா?"  என்று அக்கறையாய் விசாரித்த செக்யூரிட்டியிடம்

" ஒன்னும் இல்ல அங்கிள்.. காரை பைக் மேல விட்டுட்டேன் எக்சிடன்ட் ஆச்சு" என்று பதட்டமாய் ஆரம்பித்த வினி, சட்டென சித்ராவின் முகம் பார்த்தாள் ..

" என்னடி? நீ அவர் கிட்ட உதவி கேட்கலாம்.. அதை விட்டுட்டு என்னவோ உளறுற?" என்றாள்  சித்ரா..

" சித்ரா, இப்போ நாம இருக்குற இடத்தை நல்லா பாரு.. பார்த்துட்டு அப்பறமா பேசு" என்றாள்  வினிதா .

" ஏன் நாம்?" என்று கோபமாய் பேச வாயை திறந்தவள் தாங்கள் இருக்கும் இடத்தை பார்த்து அதிர்ந்தேவிட்டாள் .

எப்படி இது சர்த்தியாமாகும். அவர்கள் சென்ற கார் நெடுசாலையில் விபத்துக்கூள்ளானது. ஆனால் அவர்கள் இப்போது இருக்கும் இடம் அபார்ட்மண்ட் கார் பார்க்கிங்கில்!. இது என்ன கனவா?

மனதில் ஒர் உறுத்தல் தோன்ற இருவரும் ஒரே நேரத்தில் அவர்களில் காரை பார்க்க அதில் சிறு கீறல் கூட இல்லாமல் இருந்தது. விபத்துக்குள்ளானது போல எந்தவொரு தடயமும் இல்லாமல் புது கார் போல இருந்தது அவர்களின் கார்.

"வினி, எப்படி டீ இது?? நாம அங்க தானே இருந்தோம்? " அதிர்ச்சியுடன் சித்ரா கேட்க,

" அதான் எனக்கும் புரியல ..எப்படி இங்க வந்தோம்?" என்றாள்  வினிதாவும்.

" அக்..."

" ஹான் என்ன?" - வினிதா

" ஒ.. ஒண்ணுமில்ல " என்று தலையசைத்த சித்ராவை கேள்வியுடன் பார்த்தாள்  வினிதா..

அமுதாவின் வீடு ...!

"கீழ விழுந்திங்களா  ரெண்டு பேரும்  ? நெற்றியில் வீக்கமா இருக்கே ... கண்ணுக்கு கீழே கூட லேசா ரத்தம் கட்டின மாதிரி இருக்கு ரெண்டு பேருக்கும்.. சரி நைட் எங்க போனிங்க ரெண்டு பேரும்? நான் நிறைய தடவை கால்  பண்ணேன்.. நீங்க போன் எடுக்கலையே" அமுதா அவள் பாட்டுக்கு கேள்விகளை அடுக்கி கொண்டே போக இருவருமே பதில் சொல்லாமல் இருந்தனர்.

அவர்கள்  அமைதியாய் இருக்கவும், அமுதாவும் அமைதியாய் அவர்களை உற்று நோக்கினாள் ..

"நீங்களாய் ஏதும் சொன்னாதானே எங்களுக்கு தெரியும்? இப்படியே அமைதியா இருந்தா நாங்க என்ன நினைக்கிறது? " என்று கோபமாய் கேட்டாள்..

" எக்சிடண்ட்  ஆகிடுச்சுன்னு நினைக்கிறோம் அக்கா.. ஆனா எங்களுக்கே அது தெரியல"

"என்ன டீ உளறுறிங்க?"

"சுந்தரம் தாத்தா தான் சொன்னார் அது பேய் வீடுன்னு " என்று தன் பங்குக்கு உளறி கொட்டினாள்  சித்ரா.

“சுந்தரம் தத்தாவா!!!!” அவளின் பதிளில் அமுதாவும் அமுதனும் அதிர்ச்சி ஆனார்கள்.

"அவர்தான் இறந்து மூன்று வருஷம் ஆகிடுச்சே.. அவர் எப்படி உங்களிடம் சொல்ல முடியும்?"  அமுதன் அதிர்ச்சியாய்  சொல்ல, இப்போது உறைந்து போவது சித்ரா, வினிதாவின் முறையானது..

அனைவரின் முகத்திலும் அதிர்ச்சியும் கேள்வியும் குடிகொண்டு குண்டூசி விழும் சத்தம் கூட கேட்குமளவு அமைதி நிலவ, முதலில் சுதாரித்தாள் சித்ரா. இதற்கு மேலும் மறைத்து வைத்து என்ன பயன்?

நடந்தது அனைத்தையும் மறைக்காமல் ஒப்பிக்க தொடங்கியவள், தினம் இரவு சுந்தரம் தாத்தாவுடன் பேசுவதையும் கூறினாள். வினிதாவோ, அவர்களை சுற்றி நடக்கும் மர்மத்திற்கு பதில் தேடும் சிந்தனையில் அமர்ந்திருக்க, ஒருவழியாய் நடந்தது அனைத்தையும் கூறி முடித்தாள் சித்ரா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.