(Reading time: 12 - 24 minutes)

"வர் தான் உங்க பிள்ளை வசந்தோட பாஸ்.. ஆனந்த்.. அன்னிக்கு மஹதி

கல்யாணத்துல அஜய்யோட மாப்பிள்ளை தோழனா இருந்தாரே?? ..அவர் தான்.. திடீர்னு இன்னிக்கு மாமாவை பார்க்கப் போன இடத்துலே பார்த்தேன்.. மாமா போனப்புறம் கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்தோம்.. அப்போ தான் அவர் கல்யாணம் பண்ணிக்க ஆசைன்னு சொன்னார்.. எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியலை..நல்லவர்.. ஆனாலும் எனக்குன்னு சில கடமைகள் இருக்கு.. இந்த சமயத்திலே இதை பற்றி யோசிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்..", என்றாள் பைரவி.

"ஓ.. ஆனந்தா.. வசந்த் சொல்லி கேட்டிருக்கேன்.. அன்னிக்கு சரியா பேச முடியலை..ரொம்ப நல்லவர்னு சொன்னான்.. அது சரி ஏம்மா உனக்கு அவ்வளவு என்ன பெரிய கடமை?.. கல்யாணம் காட்சின்னு நினைக்ககூட முடியாம?.. வயசுலே நடக்க வேண்டாமா?.. உங்கம்மாவுமா உன்னை ஒன்னும் சொல்லலை..நீயே இவ்வளவு பெரிய படிப்பு படிச்சு இப்போ ஆராய்ச்சியும் பண்ணறே..உன்னாலே சமாளிக்க முடியாதா?.. கல்யாணம் பண்ணிண்டு கடமையும் செய்ய?"

"இல்லே மாமி.. உங்களுக்கு தெரியாது நான் என்ன ஒரு நிலையில் இருக்கிறேன் என்று.. என் நிலை எந்த ஒரு பொண்ணுக்கும் வரக் கூடாது.. அடுத்து என்ன என்கிறது எனக்கே தெரியலை.. இந்த நிலையிலே ஒரு புது உறவா?.பயமா இருக்கு மாமி.. ஏற்கனவே இருக்கற உறவே நிலைக்குமான்னு தெரியலை..", என்றவளுக்கு சட்டென்று ஒரு வித இயலாமை வந்து சூழ கண்களில் நீர் பெருகியது..

பதறிவிட்டாள் சாரதா.. "கண்ணே உனக்கு என்னம்மா ஆச்சு.. எனக்கு வயத்தை பிசையறது.. என்னம்மா சொல்லு எங்கிட்டே..", என்று அணைத்துக் கொண்டாள்.

தாயிடம் வந்தடைந்த கன்று போல் அவளின் அணைப்பை அனுபவித்த பைரவிக்குள் பிரளயமே நிகழத் தொடங்கியது..

"மாமி.. உங்க மடியிலே நான் படுத்துக்கவா.. எனக்கு அம்மா நினைவு அதிகமா இருக்கு.."

வெளிபுறத்திலிருந்து பார்த்தால் யாருக்கும் தெரியாத அளவில் மதில் சுவர் இருந்ததால் அந்தத் திண்ணையிலயே சாரதாவின் மடியில் படுத்தாள் பைரவி.. கண்கள் நீரை பெருக்கிய வண்ணம் இருந்தது...மெல்ல தன் மன பாரத்தை இறக்கி வைக்கத் தொடங்கினாள்.

"மாமி.. சுமார் ரெண்டு மாசத்துக்கு முன்னாலே நான் என்னோட யுனிவர்சிடி லேபில் இருந்த போது எனக்கு ஒரு ஃபோன் கால் வந்தது.. அதிலே எங்கப்பா என்னை உடனே ஹாஸ்பிடலுக்கு வரச் சொன்னார்.. போய் பார்த்த போது தான் தெரிய வந்துது.. எங்கம்மா திடீர்னு மயக்கமாகி மூக்கிலே ரத்தம் வழிய வழிந்திருந்தது..ஹாஸ்பிடலில் டிரீட்மெண்ட் கொடுத்தோம்.. எல்லா டெஸ்டுகளும் எடுத்த போது தான் தெரிந்தது எங்கம்மாவுக்கு.. ஒரு விதமான கேன்சர் மாதிரி ஒரு நோய்னு.. இதை நாங்க மெடிகல் டெர்மில் போன் மேரோ ஃபெய்லியர்னு சொல்லுவோம்.. அதாவது நம்ம முதுகு தண்டு வடத்தில் ஒரு விதமான மஜ்ஜை இருக்கும்.. நம்ம எலும்புகுள்ளாக இருக்கும் கொஞ்சம் கடின திரவம் அது.. அது தான் நம் ரத்த உற்பத்திக்கு ஆதாரம்.. அது வேலை செய்யலேன்னா ரத்தம் உற்பத்தி ஆகாது.."

"என்னம்மா சொல்லறே கமலாவுக்கு என்ன நோய்?", என்று பதறியவளை பார்த்த பைரவி..

"அதான் சொன்னேனே.. ரத்த உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்குன்னு.. இதுவும் ஒரு வித கேன்சர் தான்.. ரத்த சம்மந்தப்பட்டது.. இதுக்கு நார்மல் கீமோ ரேடியேஷன் எல்லாம் குடுத்துட்டு.. எலும்பு மஜ்ஜையை மாற்றுவோம்.. அதாவது போன் மெரோ டிரான்ஸ்ப்லாண்ட் செய்வோம்..இதுக்குன்னு சில புரொசிஜர்ஸ் இருக்கு.. யாராவது ஹெல்தியான ஒருத்தர் கிட்டேந்து தானமா பெற்று மாற்றுவோம்.. இதிலே தானம் செய்யறவா ரத்த சம்பந்தம் உள்ளவாளா இருந்தா.. நிச்சயம் சக்ஸஸ் அதிகம்.. கல்யாணம் மாதிரி இதுக்கும் ரெண்டு பேருக்கும் பொருத்தம் பாப்பா.. டிஷ்யு மேச் ஆகனும்.. ஜெனிடிக் பேட்டர்ன் எல்லாம் பாப்பா.. அதுக்குத்தான் ரத்த தொடர்புள்ள மாமாவோட ரத்த சாம்பிள் டிஷ்யு சாம்பிள் வேணும்னு இன்னிக்கு கேக்கப் போனேன்..  அவரும் கோ ஆபரேட் பண்ணறேன்னு சொன்னார்.. அடுத்த வாரமே அவரும் அமெரிக்கா போறார்"

"தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமோல்லியோ.. நீ ?"

"மொதல்லே என்னோட சேம்பிள் ரத்தம்ல்லாம் கொடுத்தேன்.. மேச்சிங்க் பார்க்க..  அப்போதான் தெரிஞ்சுது சுத்தமா மேட்ச் இல்லைன்னு.. அது தவிர.. எங்களோட மரபணுவே வேறயா இருந்துது.. குழப்பத்துடன் வீட்டுக்கு போய் கொஞ்சம் பழைய விஷயங்களை அலசி ஆராய்ஞ்சதுலே ஒரு பழைய டைரி கிடைச்சுது.. அதிலே.. அம்மா நான் பிறந்த நாளில் ஒரு பாட்டை எழுதி வச்சிருந்தா.. "என்று நிறுத்தி எழுந்து உட்கார்ந்து சாரதாவை நிமிர்ந்து பார்த்தாள்.

அதிர்ந்து அவளை பார்த்தபடி அமர்ந்துவிட்டாள் சாரதா.. இனி நான் என்ன பண்ணுவேன்', என்று மனதில் நிகழ்ந்த பூகம்பத்தை அடக்க முடியாமல்..

"அப்போ..நீ..",

"கண்களில் நீர் பெருக.. மெல்ல தலையை ஆட்டியவள்.. "நீங்கள் நினைப்பது சரிதான். டைரியை படிக்கும் போதே என் அப்பா அங்கே வந்தவர் எனக்கு விஷயம் தெரிந்து விட்டதை பார்த்து விட்டு எனக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் ..நான்..  நான்தான்..", என்று ஆரம்பிக்கையில்

கேட்டை திறந்தபடி ராமமூர்த்தி உள்ளே வந்தார்.. பின்னேயே வசந்த்தும் உள்ளே வந்தான்.

"மாமி.. இதை பற்றி நாம் அப்புறம் பேசுவோம்.. இது நேரமில்லை. வாங்கோ உள்ளே போவோம்", என்று பிறர் அறியா வண்ணம் முகத்தை திருப்பி தன்னை சுதாரித்து கொண்டு வீட்டுக்குள் சென்று மறைந்தாள்.

சாரதாவும்,  'பகவானே.. நான் என்ன பண்ணுவேன்.. என்னை இப்படி சோதிக்கிறாயே... வாய் விட்டு அழக் கூட முடியவில்லையே', என்று மனதுள் புலம்பியவாறு பைரவியின் பின் சென்றாள்.

தொடரும்

Episode 21

Episode 23

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.