(Reading time: 19 - 37 minutes)

07. காதல் பின்னது உலகு - மனோஹரி

ந்த மோதிரத்தைப் பார்க்கவும் ஏமாற்றமும் கொதிப்புமாய் கொந்தளித்துத்தான் போனான் அதிபன். எப்படி இவனை இத்தனையாய் ஏமாற்றிவிட்டாள்? என்ன ஒரு நாடகம்? எப்படிப்பட்ட  நடிப்பு? அவளுக்கு உதவ நீட்டிய கையிலிருந்து உருவி இருக்கிறாள் எனில் என்ன ஒரு குறுக்கு புத்தி? சே…

சத்தமின்றி அந்த மோதிரத்தை எடுத்து கையில் அணிந்து பார்த்தான். பார்வைக்கே தெரிகிறதுதான் அது அனுவின் மோதிரமாய் இருக்க வாய்ப்பே இல்லையென… அவளது குச்சி விரலுக்கும் இந்த மோதிரத்தின் அளவுக்கும்? அதுவும் அதே டிசைன்…. A வை இரண்டாக திறந்து மூட முடியும் என்பது போன்ற அமைப்பில்…. இவனுக்காய்….இவனுக்கே இவனுக்காய்  நீரா டிசைன் செய்து கொடுத்தது….. நீராவின் நினைவில்…. அடி மனது அதுவாக வலிக்க….

அந்த மோதிரத்தை அணிந்து பார்த்தான். இவன் மோதிரம் தான் என உறுதிப் படுத்தும் விதமாக வழக்கம்போல் இவன் விரலுக்கு சற்று லூசாக இருக்கிறது…. இவன் மோதிரமே தான். அதனால்தான் அனுவால் இதை எளிதாக உருவ முடிந்ததுமே…….

Kadhal pinathu ulagu

அம்மாவின் நகையை இவள் எங்கு ஒளித்து வைத்திருக்கிறாள்? சிறிதாய் திறந்திருந்த பீரோ கதவின் வழியாய் விழிகளால் தேடினான்.

அம்மா இந்த அனுவை எத்தனையாய் எப்படியாய் நடத்தினார் ? அவரைப் போய் ஏமாற்றிவிட்டாளே….. அதுவும் அவர் இப்படி மனம் தளர்ந்து படுக்கையில் விழும் அளவிற்கு…..

காலையில் பார்த்த அம்மா முகம் மனதில் வர….. அனுவை தர தரவென போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு போய் நைய்ய புடைக்க  வேண்டும் என அவனுள்ளம் பர பரவென கொதிக்கிறது என்றால்…….

அங்கும் இங்குமாய் செவ்வரி ஓடி அழன்றிருந்த, அழுது அழுது சிவந்திருந்த, தாங்க முடியா தவிப்பை தன்னுள் சுமந்திருந்த அந்த கண்கள்…..  நீராவின் இரு கண்கள்…. மனதில் தோன்ற….அது தந்த வலியில்….அதன் நினைவில்….. கண்களை இறுக மூடி தன்னை சமன படுத்தியவன்… மீண்டுமாய் மோதிரத்தை கழற்றி இருந்த இடத்திலேயே வைத்துவிட்டான்.

 இவனால் ஒரு பெண்ணை, அதுவும் இப்படி தனியாக வந்து நிற்பவளை, திருடி என ஊர்கூட்டி சொல்லவோ தண்டிக்கவோ முடியவே முடியாது…..

அனு வரையில் அவள் எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும்…..இவன் வரையில் இவன் இப்படித்தான் இருக்க முடியும்….. ஒரு மோதிரத்தில்…..ஒரு சில பவுன் நகையில் இவன் எதையும் இழந்துவிடப் போவதில்லை…… போனது போகட்டும்.

ஆனால் அனுவை இப்படியே விட்டுவிட முடியுமா? அப்படி விட்டால் என்னாவதாம்? முதலில் அவள் எதற்கு வந்திருக்கிறாள்? ஏதோ இவனது உறவினர் பெயரை தப்பின்றி சொல்லிவிட்ட ஒரே காரணத்திற்காக ஒரு வீட்டை அவளுக்கு கொடுத்தாகிவிட்டது….

எதையும் விசாரிக்காமல் இவனது சின்ன தாத்தா மற்றும் அவரது மருமகள் பெயரை அவள் சரியாக சொல்லி விட்ட ஒரே காரணத்திற்காக அவளை வீட்டில் ஒருத்தி போல் சேர்த்து வைத்திருக்க முனைந்தால் அவள் இவன் வீட்டிலேயே கைவரிசையை காமிக்காமல் என்ன செய்வாளாம்?

ஆக இதற்கெல்லாம் முடிவு இவன் அவளை இங்கிருந்து துரத்தி அடிப்பதுதான்…. போ என்ற ஒற்றை வார்த்தையில் போகிறவளாக தெரியவில்லை அவளைப் பற்றி நினைத்துப் பார்க்கையில்…..ஏதோ திட்டமிட்டு வந்திருக்கிறாள். திட்டத்தோடு இத்தனை தூரம் வருபவள் வெறும் திட்டுக்குப் பயந்தா திரும்பிப் போய்விடுவாள்.?

அதுவும் இவன் கவனித்தவரை அவளுக்கு அளவில்லா பிடிவாதம் வேறு இருக்கிறது.

ஆமாம் உண்மையில் இவள் எதற்கு வந்திருக்கிறாள்? அவள் யார்? அவள் பின் புலம் என்ன? யோசித்துப் பார்க்கையில் என்னவெல்லாமோ தோன்றுகிறது….

வனது சின்ன தாத்தாவுக்கு அதாவது அனு சொல்லும் அந்த கனிமொழி ஆன்டியின் மாமனாருக்கு, முன்பு ஏகப்பட்ட சொத்துக்கள் உண்டு….வசதியான குடும்பம்…. அவரது ஒரே மகன் நவமணி கல்யாண ப்ரச்சனையில் ஓடிப் போனவர் போனவர்தான்….. தன் மகனை பின்நாட்களில் எவ்வளவோ எதிர்பார்த்தார் இவனது அந்த தாத்தா…..அவரால் முடிந்த வரை தேடவும் செய்தார்….பலன்தான் பூஜ்யம்….

ஓரளவிற்கு மேல் மனம் தளர்ந்து போன அவர்….தன் சொத்துக்கள் எதையும் பராமரிக்கவில்லை…பயிர் செய்யவில்லை…… யாருக்காக சம்பாதிக்க என்ற கேள்வி அவரிடம்…. மனதோடு உடலும் படுக்கையில் விழ….. ஒவ்வொரு சொத்தாக அவர் விற்றுதான் ஜீவனம் செய்தார்….

ஒரு கட்டத்தில் இவனது அப்பா ஆர்மியிலிருந்து திரும்பி வந்து கொண்டல்புரத்தில் குடியேறியபோதுதான் தன் சித்தப்பாவின் நிலைமை புரிந்து தன் தகப்பனைப் போல தன் ஒன்றுவிட்ட சித்தப்பாவை பார்த்துக் கொண்டார்.

அதன் பின் பிறந்தவன்தான் அதிபன்…. அவர்கள் அறிந்தவரை இரண்டு வீட்டுக்கும் சேர்த்தே முதல் குழந்தை இவன்தான். மனதளவில் பெரிதும் தவித்திருந்த பூங்காவனத்தாருக்கு இவன்தான் கண்கண்ட பேரன்….சொந்த பேரனாகத்தான் இவனைப் பார்த்தார்… நேசித்தார் அவர்…கடைசியில் தன்னிடம் மீதி இருந்த சொத்துக்களை இவன் பேரில் தான் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் அவர் என்பதே, அவரது மரணத்துக்குப் பின்தான் இவனது வீட்டிற்கே தெரியும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.