(Reading time: 23 - 45 minutes)

"நீ எப்படி சொல்லறையோ அப்படியே செய்வோம்..  இப்ப எனக்கு ஒரு டோஸ் காப்பி தரயா"  என ராமமூர்த்தி சாரதாவிடம் கேட்டு விட்டு,

"என்ன வசந்த் , அம்மா சொல்லாறாப் போல செய்வோமா?"

"நான் வரேன் மா, டயம் ஆச்சு..  இன்னிக்கு டூ வீலர் வேற இல்லை.. ஏதோ மக்கர் பண்ணரது.. நீங்க பேசுங்கோ.. நீங்க எது செய்தாலும் எனக்கு ஓ.கே தான்" என்று வசந்த் விடை பெற்றான்.

வேகமாக நடந்தவன், அவனருகே வந்த ஷேர் ஆட்டோவில் ஏறி, சாந்தோமில் கடற்கரை அருகே இருந்த அந்த பங்களாவுக்குள் நுழைந்தவன், அங்கே ஏற்கனவே அலுவலக அறையில் இருந்த ஆனந்தை கண்டு காலை வணக்கத்தை சொல்லிவிட்டு தன் கணிணியை திறந்தான்.. அன்றைய வேலைகளை செய்ய தொடங்கினான்.

அந்த சமயத்தில் யாரோ வந்திருக்கும் குரல் கேட்டு, ஆனந்த் சற்று நேரங்கழித்து வருவதாக சொல்லிவிட்டு, அவனுக்கு சில வேலைகளை சொல்லிவிட்டு சட்னென்று வெளியே சென்று விட்டான்.

ஏதோ பலமாக சிரிப்பும் பேச்சுமாக அறைக்கு வெளியே அமர்க்களமாக இருந்தது.. தன் வேலை முடிந்து சற்று நேரம் உட்கார்ந்திருந்தவன், ஆனந்திடம் வேறு ஏதாவது வேலை இருக்கிறதா, இல்லையென்றால் நூலகம் செல்லலாமா என்று யோசித்த வசந்த்,  அலுவலக அறையிலியிருந்து வெளியே வர, அங்கே வரவேற்பறையில் சோஃபாவில், டாக்டர் விஜய் தாயார் அமிர்தா மாமி, மாமா உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, 'இவர்கள் ஏதற்கு இந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்' ... சட்டென்று சுவரின் பக்கமாக ஒதுங்கி தயங்கி நின்றான். 

"அப்போ, மேலே யோசித்து சொல்லுங்கோ..  ஏற்கனவே உங்க பொண்ணு கவிதாவோட ஜாதகம் என் பையன் விஜய்யோட நன்னா பொருந்தி இருக்கு.. என்னவோ எங்க போறாத காலம், பையன் தன்னோட கூட வேலை பார்த்த அந்த பொண்ணு மஹதியை கல்யாணம் பண்ண விருப்பப்பட்டான்.. கடைசி நிமிஷம் கல்யாணம் வரை வந்து, நிச்சயதார்த்துக்கு முன்னால நின்னு போச்சு.. நீங்களே சொல்லுங்கோ மாமி, சொன்ன சொல்லை காப்பாத்த வேண்டாமா.. நாங்க எங்களுக்காக எதுவுமே கேட்கலை.. முதல்லேயே செய்ய முடியாது, எங்களுக்கு வசதிப்படாதுன்னு சொல்லியிருந்தா நாங்க என்ன கட்டாயம் கொடுத்தே ஆகனும்னு கேட்டு தொந்தரவா பண்ணப் போறோம்.. அது என்னவோ அந்த பொண்ணுக்கு இஷ்டம் இல்லைன்னா, முன்னாடியே சொல்லியிருக்கலாமே...

சொல்லறதுக்கே கேவலமா இருக்கு.. அந்த பொண்ணு மேலே, அந்த அமெரிக்காரனுக்கு ஒரு கண்ணு.. இவளுக்கும் இஷ்டமோ என்னவோ.. என்ன கண்ணறாவியோ போங்கோ... எங்களை போலீஸ்ல பிடிச்சு கொடுப்போம் அப்படி, இப்படின்னு சொல்லி, அந்த பையனையே கல்யாணம் பண்ணிண்டுடுத்து.. என் பையன் விஜய், பரம சாது.. கடைசி நிமிஷத்துல இப்படி பண்ணவ மேலே நான் கேஸ் போடறேன்னு சொன்னேன், வேண்டாம் அவ இஷ்ட பட்டவளையே கல்யாணம் பண்ணிக்கட்டும்ன்னு எங்களை அங்கேர்ந்து இழுத்துண்டு போயிட்டான்"  என்ற பிதற்றி கொண்டிருந்த அமிர்தா,

"நான் ஏன் இதெல்லாம் உங்களுக்கு சொல்லறேன்னா, நாளைக்கு யாரும் ஒரு பேச்சு பேசப்படாது பாருங்கோ.. நீங்க முதன் முதல்ல உங்க பொண்ணுக்கு என் பையனை கேட்டு வந்தேள்.. மேலே அவனுக்கு வேறே சம்மந்தம் பண்ணரதுக்கு முன்னாலே, உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்கலாம்ன்னு நினைச்சே வந்தோம்.. இதோ, உங்க பொண்ணே இங்கே இருக்கா.. உங்க குடும்பத்துல எல்லாருமே இருக்கேள்..  ஏம்மா கவிதா, உனக்கு என் பையன் டாக்டர் விஜய்யை பிடிச்சிருக்கா..  சொல்லு, நான் அவனை அழைச்சிண்டு வர ஞாயிற்றுக்கிழமை உன்னை பொண்ணு பார்த்து ஒரு ஒப்பு தாம்பூலம் மாற்றிப்போம்"  என பட்டென கேட்க,

அங்கே அமைதி சூழ்ந்தது.. ஒவ்வொருவர் ஒவ்வொரு மனனிலையில் இருந்தனர்.

சந்துக்கு ஒரு நிமிடம் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.. 'கவிதா என்ன சொல்லப் போகிறாள்..  கடந்த இரண்டு மாதங்களாக இந்த வீட்டில் வேலை பார்க்கிறோம்.. அன்று பார்க்கில் சண்டை போட்டுக் கொண்டு போனதுடன் சரி.. இங்கு வேலையில் ஜாயின் செய்த அன்றைக்கு தலையாட்டிவிட்டு போனவள், அதன் பின்னால் லட்சியமே செய்யவில்லை..  மஹதி கல்யாணதிற்கு இவன் ஆனந்திடம் குடும்பத்தோடு வருமாறு அழைத்தும், ஆனந்தை தவிர யாரும் வரவில்லை.. இப்பொழுது என்ன சொல்லப் போகிறாள்' என்று நெஞ்சம் படபடக்க காத்திருந்தான்'

ஆனந்த் தன் தங்கை யாரையோ காதலிக்கிறாள் என்று அறிந்திருந்தான்.. அவன் அதை பற்றி பிறகு சொல்வதாக அவள் சொல்லியிருந்ததால், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அதற்கேற்ப கவிதாவுமே இத்தனை நாட்களாக மேலே எதுவும் பேசாததால், ஒரு வேளை அவள் இன கவர்ச்சியை, காதல் என்று நினைத்து தப்பாக எண்ணி விட்டாளோ, அது தான் தன் தவறை உணர்ந்து தன்னிடம் பேச வெட்கப் படுகிறாள் என்று நினைத்து பேசாமல் விட்டு விட்டான்.. தன் நண்பன் அஜய்-மஹதி திடீர் திருமணமும், டாக்டர் விஜய் குடும்பத்தவர் மஹதியின் திருமணத்தில் நட்ந்த குளருபடிகளையும் அறிந்திருந்தவன், இப்பொழுது இந்த மாமி தானாக திருமணப் பேச்சு தொடங்கியவுடன், தன் தங்கை என்ன சொல்லப் போகிறாள் என கேட்க ஆவலாக அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.