(Reading time: 23 - 45 minutes)

விதாவோ, தன் தாயை பார்த்தவள்,  "மாமி, தப்பாக நினைக்காதீர்கள்.. எனக்கு டாக்டர் விஜய்யை என் வாழ்க்கை துணையாக யோசிக்க ஒரு இரண்டு நாள் டயம் வேண்டும்.. என் முடிவை இரண்டு நாட்கள் கழித்து சொல்கிறேன் ப்ளீஸ்"  என நேரடியாக சொல்லிவிட,

சப்பென்று ஆனது அமிர்தாவிற்கு.. அவர் எண்ணவோ, அவள் உடனே வெட்கப்பட்டு 'சரி, உங்காத்துக்கு மாட்டு பொண்ணா வர நான் ரெடின்னு சொல்லுவாள் என்று நினைத்தாள்.. உ..ம்.. இந்த காலத்து பொணுங்க எல்லாம் நன்னா நாலும் யோசிக்கறதுங்கோ.. கெட்டிகாரி.. அன்னிக்கே, இவாத்து சம்மததுக்கு இந்த விஜய் பையன் ஒத்துண்டு இருந்தால், நாம இப்ப இவக்கிட்ட எதுக்கு நாம நிக்கணும்.. கொழுப்பு பிடிச்சவ.. கல்யாணம் ஆகட்டும், இந்த அமிர்தம் இவளையெல்லாம் வைக்கற இடத்துல வைக்கறேன்' என மனதில் கறுவியவள்,

"அதனாலென்னம்மா, கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர்.. நன்னா யோசித்து நல்ல பதிலா சொல்லு.. நீ எங்காத்துக்கு மாட்டு பெண்ணா வந்தா நான் திருப்தி படுவேன்.. பிராப்தம் எப்படியிருக்கோ.. இந்தாம்மா இந்த பூவை தலையில வைச்சுக்கோ" என்று மல்லி பூ பந்தை கவிதாவிடம் கொடுத்தி விட்டு,

"அப்போ, நாங்க உத்தரவு வாங்கிக்கட்டுமா"  என புறப்பட்டனர்.

தன் தமக்கையை பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லும் அமிர்தம் மாமியை கடித்து குதறத் தோன்றியது வசந்துக்கு.. இதில் கவிதாவை வேறு தன் தமக்கையை நிச்சயம் செய்யும் முன்பே பேசியிருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அவன் ஆத்திரம் அதிகரித்தது.. கவிதாவின் பதிலையும் கேட்டவன், தன்னை பெரும் பாடுபட்டு அடக்கிக் கொண்டவன்,  இதற்கும் மேலும் அங்கே நிற்க பிடிக்காமல், ஏதாவது அசிங்கமாக பேசி விடுவோமோ என பயந்து வெளியே வந்தான் வசந்த்..

அமிர்தாவும், அவர் கணவரும் அவனை அங்கே பார்த்து திகைப்படைந்தனர். வசந்த் அவர்களை கண்டு கொள்ளாமல், கவிதாவை ஒரு முறைத்து விட்டு, சட்டென ஆனந்திடம் திரும்பி,  "ஆனந்த், சார்... எல்லாவற்றையும் முடித்து விட்டேன்.. லேசா தலை வலிக்கிறது.. லைப்ரரி வேறு செல்ல வேண்டும்.. நாளை வரவா"  என கேட்க,

"ஹேய் .. நோ ப்ராப்ளம்..  யூ கேரி ஆன்.. நாளைக்கு வா.. ஒன்றும் பெரிசா அர்ஜென்ட் வொர்க் இல்லை.. நீ கிளம்பு.. வேணுமானால் சமையல் மாமிகிட்ட ஒரு சூடான காப்பி சாப்பிட்டு விட்டு போ"  என அவன் மனனிலை அறிந்து அன்பாக சொன்னவனை,

நன்றியுடன் பார்த்த வசந்த், வேண்டாம் என்று மறுத்து விட்டு, பொதுவாக ஆனந்தின் பெற்றோரிடம் தலையாட்டி விட்டு விடை பெற்றான் வசந்த்.. அவன் உள்ளம் உலைகளமாக கொதித்தது.. 'எவ்வளவு கொழுப்பு இவளுக்கு.. சீ .. என்ன பெண்.. இப்பொழுது கூட தன் காதலை வெளியிடவில்லை.. இரண்டு நாட்கள் கழித்து பதில் சொல்லுவாளாம்.. திமிர்.. உடம்பு முழுவதும் பணக்கார திமிர்.. ஏன் ரெண்டு நாள் கழித்து நான் இன்டர்வீயூவில் செலக்ட் ஆகவில்லையென்றால் நான் வேண்டாம் அவளுக்கு.. அதான் அந்த அல்டாப்பு அமிர்தாவின் பையன் இருக்கானே.. டாக்டர் வேறு.. இனி இவளே என் பின்னால் வந்தாலும் எனக்கு இவள் காதலும் வேண்டாம், கத்திரிக்காயும் வேண்டாம்.. மெல்ல ஆனந்திடம் சொல்லி விட்டு, நாளையிலிருந்து இந்த வீட்டுப் பக்கமே வரக் கூடாது"  என்று தீர்மாணித்தான் வசந்த்.

"இவன் அந்த மஹதியின் சகோதரன் வசந்த் தானே.. சரியான திமிர் பிடிச்சவனாச்சே.. இவன் எதற்கு உங்காத்துல இருந்து போறான்"  என அமிர்தா கேடக,

"மாமி இங்கே அந்த பையன் ஆனந்துக்கு உதவியா பி.ஏ. வா கொஞ்ச நாளா இருக்கான்.. பார்ட் டயம் வேலை பார்க்கிறான்.. எதோ கலெக்டர் பரீட்சை எழுதியிருக்கானாம்." என கவிதாவின் தாயார் சொல்ல,

"ஆமாம் .. கிழிச்சான்.. ஏற்கனவே ரெண்டு வாட்டி எல்லாம் எழுதி ஒன்னும் தேறலை.. அவாத்து சங்காத்தமே வைச்சுக்காதீங்கோ"  என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லி விட்டு அமிர்தா குடும்பத்தவர் விடைபெற,

“வசந்த் அப்படிப்பட்டவன் இல்லை மாமி” என ஆனந்த் சொல்ல,

அவர்கள் பேசியது எல்லாம் காதில் விழ,  "இந்த மொத்த கூட்டமே திமிர் பிடித்தது தான்.. ஏதோ ஆனந்த் சார் தப்பி பிறந்து விட்டார் போல"  என நினைத்தபடி வேகமாக வெளியேறினான் வசந்த்.

டுத்த நாள் விடியல் காலையிலேயே அஜய்யும், மஹதியும் வந்துவிட அந்த வீடு மகிழ்ச்சியில் களை கட்டியது.. முகமெல்லாம் பூரிப்பாக வந்தவர்களை பார்த்த அந்த தாயின் மனது குளிர்ந்தது..

பைரவியும், வசந்தும் அவர்கள் இருவரையும் விடாமல் கிண்டல் அடித்தபடி இருந்தனர்.

அஜய் அந்த வாரக் கடைசியில் தங்கள் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு, குல தெய்வம் கோவிலுக்கு செல்லலாம் என சொல்ல, அனைவருமே அதற்கு ஒப்புக் கொண்டனர்.

பைரவி, அஜய்யிடம் தனது மாமாவை மீட் பண்ணிய விஷயத்தை கூறிவிட்டு, மாமாவும் உதவுவதாக சொன்னதை சொன்னவள், அவள், அம்மாவின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருப்பதாக அவள் தந்தை போன் செய்ததாகவும், அதனால் இந்த மாத கடைசியில் தான் அமெரிக்கா கிளம்ப போகிறதாகவும் சொன்னாள்.. சாராதா மாமியிடம் பேசியதையும் கூறினாள்.. வேறு ஏதாவது வழி கிடைக்குமா என்றும் பார்க்க வேண்டும் என்றவளுக்கு, தான் எப்படியாவது அவளுக்கு உதவுவதாக ஆறுதல் அளித்தான் அஜய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.