25. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி
காலையிலிருந்தே, கமலாவிற்கு ஏனோ மனசை சரியில்லை.. என்னவோ நடக்கப் போகிறது என்று தோன்றிக் கொண்டே இருந்தது.
'அய்யோ ஆண்டவா, என் பிள்ளையை காப்பாற்றேன்.. பிறந்து இரண்டு நாள்கூட ஆகவில்லையே.. உனக்கு கல் மன்சா.. இப்படி கூட அந்த பச்சிளங்குழந்தையை துன்புறுத்துவாயா?.. இதற்கு நீ எனக்கு பிள்ளையே கொடுத்திருக்க வேண்டாமே?.. ஈஸ்வரா என்னை எடுத்துக் கொள்.. என் குழந்தையை காப்பாற்றேன்'..
'என் செல்லமே, ஒன்றா, இரண்டா.. பத்து வருஷம் கழிச்சி உன்னை பெற்றது இப்படி பறி கொடுக்கத்தானா.. இதற்கு நான் மலடியாகவே இருந்திருக்கலாமே?.. என்ன செய்யப் போகிறேன்'..
'ஒன்று மட்டும் நிச்சயம், இந்த குழந்தை எனக்கு தக்கவில்லையென்றால், நானுமே அதனுடனேயே போய் விடுவேன்'...
விக்கி விக்கி அழுது கொண்டிருந்த கமலா, சட்டென புரை ஏற, விக்கல் எடுத்து இன்னும் பலமாக அழ ஆரம்பித்தாள் கமலா...
'"டக், டக்" ... இடையில் இருந்த மெல்லிய தடுப்பு விலக்கப்படும் ஓசைக் கேட்டு, அழுகையில் விக்கியப்படி, "யாரு... யாரது" என அழும் குரலில் முனகியபடியே கேட்க,
"மன்னிச்சிக்கங்கோ.. நான் சாரதா ராமமூர்த்தி" என்றபடி தனது நிறை மாத வயிற்றை பிடித்தபடி, தடுப்புக்கு மறுபுறத்தில் இருந்து உள்ளே நுழைந்த பெண்மணியைப் பார்த்த கமலா, ... தன் கண்களை துடைத்தபடி,
"நான் கமலா விஸ்வனாதன்".. என்று மெல்ல விசும்பியபடியே சொன்ன கமலா, ...
"இன்னிக்கு காலையில தான் அட்மிட் ஆகியிருக்கீங்களா?.. தனியாவா இருக்கேள்?.. யாரும் துணைக்கு வரலை?"
"இல்லை.. காலங்கார்த்தாலே வலி எடுக்க ஆரம்பிச்சிடுத்து.. அதான் அம்மா, அப்பாவோட வந்தேன்.. அம்மா ஆத்துக்கு போயிருக்கா.. பக்கத்துல தான் மாம்பலத்தில் குடியிருக்கோம்.. அப்பா டாக்டர் என்னவோ ஃபாரம்ல கையெழுத்து போடனுமாம்.. சித்த முன்னேதான் போனார்" என்றாள் சாரதா.
"ஓ.. கொஞ்சம் நேரம் முன்னாலே பாட்டு சத்தம் கேட்டதே.. நீங்கதானா பாடிண்டிருந்தது?.. நன்னா குரல் இழயரது... என் மனசுக்கு ஆறுதலா கூட இருந்தது"
"ஆமாம், கமலா.. எனக்கு பாட்டுன்னா ரொம்ப இஷ்டம்.. அதுவும் இந்த வசந்தபைரவி ராகத்துல அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்"..
"நாம இரண்டு பேரும் ஒரே வயசா இருப்போம்னு தோன்றது.. அதனாலே பேர் சொல்லியே கூப்பிடறேன்.. எனக்கு இது நாலாவது பிரசவம்.. முதல் மூணும் பொண்ணா பிறந்துடுத்து.. ஆண்டவன் மனசு வச்சி இந்த குழந்தையாவது பிள்ளையா கொடுத்து ரட்ஷித்து, என் வாழ்க்கையில வசந்தத்தை வரவழைக்கனும்"....
"ஏற்கனவே என் மாமியார் என்னை வையறா, நான் சாமர்த்தியம் இல்லாமல் மூணும் பொண்ணா பெத்து வச்சிருக்கனாம்.. இந்த வாட்டி பிள்ளையை பெத்து எடுத்துண்டு வரலைன்னா, நான் ஆத்து பக்கமே தலை வைச்சி படுக்கப்படாதாம்.. புள்ளையை கூட அனுப்ப மறுக்கிறா.. பாவம் அவர், அம்மாவுக்கு தெரியாமல் என்னை வந்து பார்ப்பார்"
"அமாம் உங்களை பார்த்தால் ஏற்கனவே குழந்தை பிறந்துட்டா மாதிரி இருக்கு.. ஏன் அழுதுண்டு இருந்தேள்.. உங்களுக்கும் பொண்ணா.. அதான் வருத்தப்பட்டு அழறேளா.. உங்க மாமியாரும் வையறாளா?.. உலகை ரட்ஷிக்கிற அந்த லோக மாதாவே ஒரு பொண்ணுதானே.. யார் நம்மளை புரிஞ்சிக்கறா? .. சொல்லுங்கோ" என்ற வெகுளியாக கேட்ட சாரதாவின் கையை பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தார் கமலா.
"எப்படி சொல்லுவேன் சாரதா.. பொண்ணோ, பையனோ, நமக்கு நல்லபடியா உயிரோட தங்கினா போததா?".. என்று மீண்டும் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள் கமலா.
"என்ன கமலா, என்ன பேசறீங்கோ? ..எதுக்கு இப்படி அழறேள்.. பிள்ளை பெத்த பச்சை உடம்பு, இப்படி நீங்கள் அலட்டிக்கலாமா?.. ஜன்னி கண்டுடுமே.. ஏதுவா இருந்தாலும் கொஞ்சம் பொறுத்துக்கங்கோ?.. ஆமாம் ஏன் உங்களோட யாருமே கூட இல்லை.. உங்காத்துக்காரரோ, யாராவது பெரிய மனுஷாளோ இல்லையா உங்களுக்கு துணைக்கு?"
"சாரதா.. நான் என்னென்னு சொல்லுவேன்.. எனக்கு பையன் பிறந்து இரண்டு நாளாச்சு.. இங்கே தான் பிறந்தான்.. திவ்யமா ஆம்பளை குழந்தையை எனக்கு கொடுத்த அந்த பகவான், திரும்பி தனக்கே வேணும்ன்னு கேட்டா நான் என்ன பண்ணுவேன்?.. அதான் என் விதியை நினைச்சு அழுதுண்டு இருக்கேன்?"
"அய்யோ, பகவானே?... என்ன ஆச்சு கமலா.. உங்களுக்கு சொல்ல பிரியப்பட்டா எங்கிட்ட சொல்லுங்கோ.. என்னை உங்களோட மூத்த அக்காவா நினைச்சிக்கோ கமலா" என்ற சாரதா கமலாவின் கைகளை பிடித்து கொண்டார் .. அவளருகே இருந்த அந்த பென்ஞ்சில் அமர்ந்தாள்.
என்ன தோன்றியதோ கமலாவிற்கு,.. தாயை இழந்து தன் அண்ணனின் வளர்ப்பில் இருந்தவள், அங்கே தனது அன்னையே அவளுக்கு ஆறுதல் அளிக்க மீண்டும் வந்தது போல எண்ணி, தன்னை பற்றி அவரிடம் பகிர்ந்து கொள்ள தொடங்கினார்.
"சாரதா, நான் சின்ன வயசிலேயே என் அம்மா, அப்பாவை இழந்துட்டேன்.. என் அண்ணா சிவராமன் தான் என்னை வளர்த்து வந்தார்.. எங்கள் அம்மாவின் அம்மா , என் பாட்டி நான் பதினைந்து வயது இருக்கும் வரை எங்களுடன் இருந்தார்.. அவர் இறந்து போனவுடன், நானும் அண்ணாவும் மாத்திரம் தனியாகவே இருந்தோம்.. அண்ணாவிற்கும், எனக்கும் எட்டு வயது வித்யாசம்.. அண்ணா, தன் கல்லூரி படிப்பை முடிச்சி, தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேர்ந்து,.. மேலாளராக இருந்தார்"..