(Reading time: 19 - 38 minutes)

"ன்ன பண்ணறது, அந்த பகவான் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சோதனையை தரான்.. பாரு, என் பொண்ணுக்கும் பார்க்கப் போனால் உன் வயசுத்தான் இருக்கும்.. அதுக்குள்ளே நாலாவது பிரசவம்.. முதல் மூணும் பெண்ணாப் போச்சு, இப்பவாது ஆம்பிள்ளை பிள்ளை பிறக்கனும்.. அவளோட மாமியார் சரியான ராட்ஷசி.. மூணாவது பொண்ணு பிறந்ததுக்கே அவ்வளவு கோபம் அவளுக்கு.. அவாத்துக்கு பேர் சொல்ல ஆண் வாரிசு வேணுமாம்"..

"அதுக்கு என் பொண்ணு என்ன பண்ண முடியும் பாவம்.. யாருக்கு என்ன குழந்தை பிறக்கறது இதெல்லாம் அந்த பகவானோட செயல்..  என்னவோ என் பொண்ணு கையில இருக்கற மாதிரி இந்தவாட்டி ஆம்பளை குழந்தை பிறக்கலைன்னா, புக்காத்து பக்கமே வரவேண்டாம்ன்னு சொல்லிட்டா.. என் பெண் சாரதா நன்னா பாட்டு பாடுவா.. அவ பொண்ணை பெற்றால் என்றால், இந்த வாட்டி அவளுக்கு மங்களம் பாடிடுவாளாம் அவ மாமியார்க்காரி"...

"எங்க மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்.. இரண்டு பொண்ணுகளுக்கு அண்ணா, ஒரே பையன்.. அவாத்துக்கு வாரிசு வேணுமாம்.. அது என்ன அவ கையிலா இருக்கு சொல்லுங்கோ.. என் மாப்பிள்ளையை கூட அனுப்பி வைக்கலை.. தகவல் சொல்லலாம்ன்னு அவாத்து பக்கதாத்துக்கு காயின் போட்டு போன் பண்ணா, பேசக் கூட வர மாட்டேன்னுட்டா அவ மாமியார்காரி.. பிள்ளை பிறந்தா ஸ்வீட்டோட போய் தகவல் சொல்லனுமாம்.. இல்லைன்னா அப்படியே என் பொண்ணை பிறந்தாத்துக்கு அழைச்சுண்டு போகனுமாம்"...

"ஏற்கனவே என் பொண்ணு கிட்ட ஒரு மாசத்துக்கு முன்னாலே பிரசவத்துக்கு அனுப்பும் போதே சொல்லித் தான் அனுப்பிச்சியிருக்கா, இந்த வாட்டியும் பொண்ணா பெத்தா, அவா பையனுக்கு வேறு இடத்துல மறு கல்யாணத்தை முடிப்பாளாம்.. மாப்பிள்ளை என்ன பண்ண முடியும்.. என் பொண்ணை பார்க்க கூட அனுப்ப மாட்டேங்கறா.. ஏதோ இப்ப சத்திக்கு, என் மூணு பேத்திகளையும் அவாளே பார்த்துண்டு இருக்கா.. என்னவோ போங்க.. லோகத்துல ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான கஷ்டத்தை அந்த பகவான் கொடுக்கிறார்"  என்றவருக்கு,

"நீங்க சரியா சொன்னேள் மாமி.. அந்த பகவான் எனக்கு பத்து வருஷம் கழிச்சு கண்ணை தெறந்தார்.. இத்தனை வருஷமா, மலடின்னு, எத்தனையோ, ஏச்சும் பேச்சும் கேட்டாச்சு.. எங்காத்துக்காரரும் ஒத்தை பிள்ளை தான்.. எங்க மாமியார் அவாளுக்கு ஒரு வாரிசை இத்தனை நாள் கழிச்சி பெற்றுக் கொடுத்துட்டு, அந்த குழந்தையும் இப்படி உசிருக்கு போராடிண்டு இருந்தால் நாளைக்கு என்னை எப்படி சேர்த்துப்பா.. ஏற்கனவே எங்காத்துல யாருக்குமே குழந்தை பாக்கியம் இல்லைன்னு சொல்லி வைவா.. பொண்ணோ, பிள்ளையோ, குழந்தை நல்லபடியா உசிரோட இருந்தாலே போதுமே?"

"என் குழந்தைக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, அவ்வளவுதான், நான் உசிரோடையே இருக்க மாட்டேன்.. என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணி ஒரு சுகமும் இவர் படலே.. நான் போனதுக்கு பிறகாவது வேறு யாரையாவது கல்யாணம் செஞ்சிண்டு சுகப்படட்டும்.."  என்று ஏதேதோ புலம்ப ஆரம்பித்தார் கமலா.

"கமலா ஏம்மா இப்படி அவநம்பிக்கையா பேசறே?.. நம்ம குழந்தைக்கு ஒன்னும் ஆகாதும்மா"  என்று விஸ்வனாதன் அவளை தேற்ற முயன்றார்.

"ஏம்மா இப்படி உடம்பை அலட்டிக்கறே.. கொஞ்சம் படுத்துக்கோம்மா கமலா"  என்ற விசாலம், "இந்த மனுஷன் போய் இவ்வளவு நேரம் ஆச்சு.. என் பொண்ணுக்கு என்ன ஆச்சோ தெரியலயே?" என்று கையை பிசைந்தபடி இருக்க,

அந்த சமயத்தில் சாரதாவின் தந்தை ஸ்வாமினாதன் அங்கே பரபரப்புடன் வந்தார்.

"ஏன்னா.. டாக்டர் என்ன சொல்லறார்?.. சாரு எப்படி இருக்கா?.. ஏதாவது விஷயம் தெரிந்ததா?" என பதைபதைக்க,

"நான் என்னத்தை சொல்லுவேன்டி விசாலா... நம்ம பொண்ணுக்கு மறுபடியும் பொண்ணு பிறந்திருக்காம்.. நன்னா மூக்கும், முழியுமா ரோஜாப்பூ மாதிரி இருக்குன்னு சொன்னார் டாக்டர்.. அந்த அம்பாளே வந்து பொறந்திருக்கான்ரார்.. என்னவோ போ.. எனக்கு ஒன்னுமே புரியலையடி"

"பகவானே, ஈஸ்வரா, திரும்பவும் பொண்ணை கொடுத்து ஏம்ப்பா என் சாருவை சோதிக்கறே?... உன்னையே நினைச்சுண்டு பாடிண்டு இருப்பாளே? .. ராமா எதுக்கு இந்த சோதனை?... நீயே வந்து இந்தவாட்டி பிறப்பேன்னு எவ்வளவோ நம்பிக்கையோட பாட்டு பாடிண்டு இருந்தாளே?.. உனக்கு கண்ணு இல்லையா?.. அய்யோ.. நாங்க என்ன பாவம் பண்ணினோம்.. எப்படி அவாத்துக்கு இந்த விஷயத்தை சொல்லுவோம்.. அவ மாமியார் அவளை சேத்துக்கவே மாட்டாளே?"

"எல்லாம் அந்த ஈஸ்வரன் செயல்.. நாம்ப என்னடி பண்ண முடியும்.. அம்பாளே பொறந்திருக்கா.. அப்புறம் என்ன.. நான் போய் மெல்ல மாப்பிளைக்கு போன் செய்து பார்க்கிறேன்.. அவர் புரிஞ்சுப்பார்.. சாரு மட்டும் என்ன பண்ண முடியும் சொல்லு?" என்று சொல்லிக் கொண்டிருக்க,

ஓடி வந்தாள் ஒரு செவிலி..  "ஐயர் வீட்டம்மா.. உங்களை டாக்டர் கையோடு கூப்பிட்டு வரச் சொன்னார்கள்.. உங்க பொண்ணு ஒரே அழுகை.. பொண் குழந்தை பிறந்துடுச்சு, எனக்கு ஏதாவது ஊசி போடுங்கோ.. நான் செத்துப் போறேன்னு அழறாங்க.. ரூமுக்கு அழைச்சிட்டு வரனும்.. வர மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறாங்க?.. நீங்க வந்து சமாதானம் படுத்துவீங்களாம்"  என விசாலத்தை அழைக்க,

"தாயே இது என்ன சோதனையா கொடுக்கறே?.. இந்த பொண்ணு ஏன் இப்படி நடந்துக்கறது?"   என்று அந்த செவிலியுடன் விரைந்தாள் விசாலம் மாமி.. அவரை பின் தொடர்ந்தார் ஸ்வாமினாதன்.

Episode 24

Episode 26

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.