(Reading time: 19 - 38 minutes)

"ரி, அவா யாரும் இப்ப உங்களோட வரலையா?" என சாரதா கேட்க,

"சொல்லறேன்.. எனக்கும் இந்த பத்து வருஷமா, அழுத்திண்டு இருந்த மனபாரத்தை இறக்கி வைச்சா மாதிரி இருக்கும்.. அண்ணா, வேலைக்கு சேர்ந்த இரண்டாம் வருஷமே, அவருடன் வேலை பார்த்த ஒருவரின் பெண்ணை மணந்து கொண்டார்.. எல்லாம் நன்னாதான் போயிண்டு இருந்தது.. என் மன்னியும் ரொம்ப நல்லவாதான்.. தாயில்லாத என்னை தன் சொந்த பொண்ணு மாதிரிதான் பார்த்துக் கொண்டிருந்தார்"..

"அந்த சமயத்துல நான் கல்லூரியில் கடைசி வருஷம் படிச்சிண்டு இருந்தேன்.. அண்ணாவுக்கும், மன்னிக்கும் அதுவரைக்கும், ஏன் இன்னும் கூட அவாளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.. அது ஒன்று தான் அவாளுக்கு குறையா இருந்தது.. என்னை தன் சொந்த பெண்ணாதான் பார்த்துண்டா"..

"நான் கல்லூரி முடிச்ச அடுத்த நாளே, எனக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் அப்படின்னா.. மன்னிக்கு ஒரு தம்பி இருந்தார்.. அவர் எங்கோ டெல்லியில் அரசாங்க உத்யோகம் பார்த்துண்டு இருந்தார்"..

"இதன் நடுவிலேயே மன்னி ஆத்துலே எனக்கு என் அண்ணன் எனக்கே தெரியாமல் பேச்சு வார்த்தை நடத்தி, கல்யாணம் வரைக்கும் ஏற்பாடு பண்ணி வைச்சிட்டார்.. எங்கிட்ட சொன்ன போது நான் ஒத்துக்கலை.. அழுது அடம் பிடிச்சேன், கல்யாணம் வேண்டாம்ன்னு"..

"என்ன பார்க்கறே சாரதா.. நான் என்னோட கூட படிச்ச தோழியோட அண்ணனை காதலிச்சிட்டேன்.. அவர் அப்பதான் மருத்துவ கல்லூரியில் படிச்சி முடிச்சி, டாக்டரா பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்ச நேரம்.. காதல் என்ன சொல்லிண்டா வரது.. தங்கையை காலேஜுக்கு ஸ்கூட்டரில் கொண்டு விட வருபவர், என்னை பார்த்து பிடிச்சி, மெல்ல பேசி நாங்களும் காதலிச்சோம்"..

"விஷயம் தெரிஞ்ச அண்ணா, எங்க காதலுக்கு ஒத்துக்கலை.. மன்னிக்கு ரொம்ப கோவம்.. தன் தம்பியை வேண்டாம்ன்னு சொல்லிட்டாளேன்னு.. அதோடு அண்ணாவுக்கும் அந்த சமயத்துல டெல்லிக்கு மாற்றல் வந்தது.. தன்னோட தங்கை தன் மச்சினரை கல்யாணம் பண்ணால், ஒன்றாக இருக்களாமேன்னு அவாளுக்கு எண்ணம்"

"சரின்னு வேறு வழியில்லாம, எனக்காக அவா இரண்டு பேரும் விச்சு வீட்டிலே, அதான் விஸ்வனாதன் வீட்டிலே பேசறதுக்கு போனா.. அவரோட அம்மா, ஒத்துக்கவே இல்லை.. கல்யாணம் ஆகாத இரண்டு தங்கைகள் என் வயசில இருக்கற போது எப்படி அவனுக்கு கல்யாணம் பண்ண முடியும்ன்னு ஒரே ரகளை.. பாவம் அந்த மாமிக்கும் மாமா இல்லை.. ஒண்டியா ஏதோ சமையல் வேலை பார்த்து மூணு பேரையும் படிக்க வச்சிருக்கா.. பையனோ, கஷ்டப்பட்டு மெரிட்ல படிச்சி அப்போதான் டாக்டர் ஆகியிருக்கா.. அவாதான் என்ன செய்வா.. இப்ப கல்யாணம் முடியாது, பொண்ணு இரண்டு பேருக்கும் வரனை பார்த்து முடிச்சிட்டு ஒரு ஐந்து வருஷம் கழித்து பார்க்கலாம்ன்னு தயவு தாட்சண்யமில்லாம சொல்லிட்டார்"

"அண்ணாவுக்கும், மன்னிக்கும் என் மேலே கோபம்.. பேசாம விச்சுவை மறந்துட்டு, அவர் தம்பியை கல்யாணம் பண்ணீக்கோன்னு வற்புறுத்தினா.. அஞ்சு வருஷம் எல்லாம் காக்க முடியாதுன்னு ஒரேடியா சொல்லிட்டா".

"விச்சுவிடம் பேசினா, அவர் என்ன பண்ணரதுன்னு புரியாமல் திணறிண்டு இருந்தார்.. கல்யாணம் ஏற்பாடு நடக்க ஆரம்பிச்சது.. என்ன செய்யறது, இரண்டு பக்கமும் எதிர்ப்புன்னு நாங்க, எங்க தோழர்கள் துணையோடு கோவில்ல வைச்சு எங்க கல்யாணத்தை நாங்களே நடத்திண்டோம்.. இரண்டு பக்கமும் கோவம்தான்"...

"என் மாமியார், வேறு வழியில்லாம் எங்களை ஏத்துண்டா.. அண்ணா,  மன்னிக்கு கோவம்ன்னாலும், என்னை திட்டிவிட்டு, என்னை சீரோடு புக்காம் அனுப்பி வைச்சா.. பையனை தன்கிட்ட இருந்து பிரிச்சேன்னு என் மாமியாருக்கு கோவம்.. பெரியவா சம்மந்தம் இல்லாமல், வெறும் கையோட தாலி கட்டிண்டு வந்தேன்னு என்னை இன்னி வரைக்கும் கரிச்சி கொட்டிண்டுதான் இருக்கா.. எவ்வளோ செய்தாலும் அவளுக்கு திருப்தி இல்லை.. பாவம் விச்சுவும், எங்க கல்யாணம் முடிஞ்ச கையோடு இரண்டு தங்கைகளுக்கும் கல்யாணம் பண்ணி வைச்சு, அவா குழந்தைகளுக்கும் இது வரை சீர் செய்துண்டு தான் இருக்கார்"  என்று பெருமூச்சு விட்டு நிறுத்தினார் கமலா.

"பின்ன என்ன கமலா.. வீடுன்னா எல்லாம் தானே இருக்கும்.. இப்ப அவாளால்லாம் எங்கே?.. நீ ஏன் தனியா இருக்கே?"  என்று கேட்ட சாரதாவுக்கு,

"நான் அவாளுக்காக அழலை சாரதா.. என் ஆத்துக்காரர் என்னை நன்னாதான் பார்த்துக்கறார்.. இப்ப என் மாமியார் அவாளோட இரண்டாவது பொண்ணு வயத்து பையனுக்கு லீவுன்னு மதுரைக்கு போயிருக்கா.. எங்க அண்ணன் குடும்பம் இன்னும் இங்கதான் இருக்கா.. மாற்றல் வந்தாலும் அங்கே போகாம எனக்காக இங்கேயே எங்க பரம்பரை வீட்டிலேயே தங்கி பிசினஸ் செய்யரான்..மன்னிக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.. எனக்குமே பத்து வருஷம் கழிச்சே இப்ப குழந்தை உண்டாயிருந்தது.. என்னோட சீமந்தம் அப்ப, மன்னியை ரொம்ப அவமானப்படுத்திட்டா என் மாமியார்.. என்னையும் அண்ணா ஆத்துக்கு தலை பிரசவத்துக்கு அனுப்ப மாட்டேன்னுட்டா"..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.