" நாம எப்பவும் நம்மள மாதிரி இருக்கணும் .. சுயத்தை விட்டு கொடுத்து உருவாகுற உறவு நிலைக்காது "
" எல்லாம் ஓகே தான் ..”
“பட்”
“ நீ எப்பவும் என் கண்ணுக்கு ஹீரோ தான் "
என்று அவன் கன்னத்தை அவள் கிள்ளிட
" அடியே " என்று சிரித்து கொண்டே அவளை அவன் துரத்த , அவன் கைகளில் அகப்பாடாமல் ஓடினாள் சங்கமித்ரா ..
சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ
இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்
மொத்தில் இது என்ன வகை பந்தமோ
இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்
இது என்ன கனவா நிஜமா
இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்
இது என்ன பகலா இரவா
இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே...
பாடல் தொடர நான்கு விழிகளும் உறவுடன் சங்கமித்தன ..
ஆஃபிசில் விடுப்பு சொல்லி இருந்த கடைசி நாளது…ஏற்கனவே விபத்தின் காரணத்தினால் ஒரு மாதம் விடுப்பில் இருந்த காவியாவுக்கு மீண்டும் விடுமுறைகேட்க கஸ்டமாகத்தான் இருந்தது..இருப்பினும் எடுத்துகொண்ட வேலையை முடிக்க வேண்டுமே…கால்டேக்சி குணாவின் வீட்டை நோக்கி பயணிக்க அவளின் சிந்தனையோ மீண்டும் அவளின் முடிவை ஆராய்ந்து கொண்டது..
காவியாவின் தந்தை வியாபாரத்தை பொருத்தமட்டிலும்,மிகப்பெரிய சாம்ஜாரஜ்யத்தை உருவாக்கி இருந்தார்.. அதனாலோ என்னவோ அவரை தேடி வந்த உறவெல்லாம் பணத்துக்காகவே வந்தது… இதனால், உறவினர்களைவிட நண்பர்களை அதிகம் நம்பினார் அவர்.. அதுவே சரிஎன்பதுபோல் இதோ இப்போதும் கூட அவர் சேர்த்து வைத்த ஜெயராஜின் நட்புதான் காவியாவின் கவசமாய் இருந்தது…
ஜெயராஜிடம் கலந்துரையாடி, தன் தந்தையின் பரம்பரை சொத்துக்களையும், அவர் உழைப்பில் தொடங்கிய தொழிலையும் இரண்டாய் பிரித்தாள்காவியா.. அவளின் எண்ணதிற்கு ஏற்ப,பரம்பரை சொத்துகள் அதிகமாய் இருக்க, அதை குணாவின் பொறுப்பில் கொடுப்பதற்கு முடிவு செய்து,அதை சட்டப்பூர்வமாக எழுதி, இதோ அவர்களின் வீட்டையும் அடைந்து விட்டாள்.. டெக்சியை அங்கேயே காத்திருக்கவைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்..
“ அத்தை… அத்தை” …
“ அடடே ,கவிம்மா வா வா” என்றவாரு வாசலுக்கு ஓடி வந்தார் சாரதா…
“ எப்படி இருக்கிங்க?”
“நான் இருக்குறது இருக்கட்டும், நீ எப்படி டா இருக்க ?உன்ன பத்தி இந்த குணா கிட்ட கேட்டா, நல்லா இருக்கான்னு ஒரேவார்த்தையில் சொல்லிடுறான்”
“ ஹா ஹா…நானும் குணாவும் சின்ன வயசுல இருந்தே அப்படிதானேஅத்தை …குணா எங்க ?”
“ரூம்ல…வா சாப்பிடலாம்…”
“வேணாம் அத்தை…டேக்சி வைட் பண்ணுது…நான் குணாவை பார்த்துட்டு வரேன்..” என்றவள் அவன் அறைக்குள்புயலாய் நுழைந்து அவன் முகத்தில் அந்த தாட்களை வீசினாள்..
“ஹேய்…என்ன இது ?”
“படிச்சு பாரு..உனக்கு என்ன வேணுமோ அது இதுல இருக்கு”
“எ…..எ …என்ன சொல்லுற நீ ?”
“ தமிழ் புரியாதா உனக்கு ? என் சொத்து முழுசும் உன் பேருல இருக்கு..அதை பத்தி கேட்கவோ இல்ல உரிமை கொண்டாடவோ எனக்கு எந்த உரிமையும் இல்லைன்னு நானே எழுதி கொடுத்திட்டேன்” .. அவள் கண்களில் தெரிந்த தெளிவிலும், பேச்சில் இருந்த வேகத்திலும் தடுமாறி உளறினான் அவன்.
“ எ….எ….என்ன நாடகமா ? கண்ட கண்ட பேப்பர் எல்லாம் தூக்கிட்டு வந்து என்னை எமாத்தலாம்ன்னு பார்க்கறியா ?”
“ ஹாஅ.. நீ படிச்சவன் தானே குணா பொறுமையாய் படிச்சு பாரு … நான் எங்கேயும் ஓடிர மாட்டேன்..அதே கம்பனியில் தான் வேலைசெய்வேன்.. அதே வீட்டில் தான் குடியிருப்பேன்..உன்னை நேருக்கு நேராய் சந்திக்க நான் தயார்” என்றாள் அவள்..
“ முட்டாளா நீ?” என்று விந்தையாய் கேட்டான் குணா…