(Reading time: 13 - 25 minutes)

20. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

ரியாக சொன்ன நேரத்திற்கு உள்ளே வந்த சாவித்ரியையும், ரூபாவையும் ஸ்ரீதர் வக்கீல் வரதனிடம் அறிமுகப்படுத்தினான்.

“ஏன் ரூபா, நான்தான் உன்னை லீவ் போட வேண்டாம்ன்னு சொன்னேனே, அம்மா மட்டும் வந்திருக்கலாமே. எக்ஸாம் வேற வரப்போகுது. இப்போ எதுக்கு கிளாஸ் மிஸ் பண்ணிட்டு இருக்க”

“இல்லை, அம்மாவைத் தனியா அனுப்ப வேண்டாம்ன்னுதான் நானும் வந்தேன், அதுவும் இல்லாம எங்க காலேஜ்ல செமினார் நடக்குது, அதனால இன்னைக்கும், நாளைக்கும் எங்க டிபார்ட்மெண்ட்க்கு லீவ்தான்”, ரூபா கூற, ஸ்ரீதர் சரி என்பது போல் தலையசைத்தான்.

Vidiyalukkillai thooram

வக்கீல் வரதன் சாவித்ரியைப் பார்த்து, “நான் உங்களை மனமாரப் பாராட்டறேன்ம்மா, தன் மகளை விட நியாம்தான் பெரிசுன்னு எந்த அம்மாவும் சத்தியமா நினைக்க மாட்டாங்க. நீங்க ரொம்ப கிரேட்”, பாராட்ட, சாவித்திரி கண்கலங்கியபடியே தலை குனிந்தார்.

“ஸ்ரீதர், நான் இவங்கக்கிட்ட தனியா பேச விரும்பறேன். நீங்க இங்க இருந்தீங்கன்னா, அவங்களுக்கும் ஓபனா பேசக் கஷ்டமா இருக்கும். அதனால போயிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க. அப்படியே பாக்கத்து ரூம்ல தேவி இருப்பா. அவளை கொஞ்சம் வர சொல்ல முடியுமா, ப்ளீஸ்”, என்று வரதன் கூற, ஸ்ரீதரும் அதற்கு தலையசைத்து விட்டு தேவியை வரதன் கூப்பிடுவதாக சொல்லி, தன் தந்தையை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றான். அவர்கள் சென்றதும் தேவி வரதனிருந்த அறைக்குள் வந்தாள்.

தேவியை சாவித்ரியிடம் அறிமுகப்படுத்திய வரதன் அவர்கள் பேசுவது முழுவதையும் ரெகார்ட் செய்ய சொன்னார். அவளும் வெளியில் சென்று வரதனின் மனைவியிடம் யார் வந்தாலும் தங்களை ஒரு இரண்டு மணி நேரத்திற்கு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அறைக்கதவையும் சாற்றிவிட்டு ரெகார்டரை ஆன் செய்து அவர்கள் பேசுவதைப் பதிவு செய்ய ஆரம்பித்தாள்.

“சொல்லுங்கம்மா, நான் இப்போ ஸ்ரீதர் சொன்னது, அவங்க அப்பா சொன்னதுன்னு எதுவும் கேக்கப் போறதில்லை, மொதலேர்ந்து என்ன நடந்துதுன்னு என்கிட்ட சொல்லுங்க”,சாவித்திரி ரூபாவை ஒரு முறை பார்த்துவிட்டு தன் கணவன் மற்றும் மகளின் லீலைகளை சொல்ல ஆரம்பித்தார்.

“விமலா, சின்ன வயசுலேர்ந்தே கொஞ்சம் அடம் பண்ற டைப்தான். தான் கேட்டதெல்லாம் கிடைக்கணும்னு அடம் செய்வா. நான் என்னால முடிஞ்ச வரை அவளைத் திருத்தப் பார்த்தேன். என்னதான் நாம சொல்றபடிதான் குழந்தைகள் வளரும், அப்படின்னெல்லாம் பேசினாலும், பிறவி குணம்ன்னு ஒண்ணு இருக்கு. அதை ஓரளவுதான் கட்டுப்படுத்த முடியும். விமலா அப்படியே அவங்க அப்பாவின் வாரிசு. அவரோட கோவம், பொறாமை, பேராசை அப்படிங்கற அத்தனை கெட்ட குணங்களும் அவளுக்கும் உண்டு. அவர் ரொம்ப கஷ்டப்படற குடும்பத்துலேர்ந்து வந்தவர். இன்னும் சொல்லப்போனா மூணு வேளை சாப்பாடு ஒழுங்கா கிடைக்கறதே கஷ்டம். அவரோட அப்பாவும் அவருக்கு மூணு வயசா இருக்கும்போதே இறந்து போய்ட்டார். அவங்க அம்மா சில வீட்டுல வேலை செஞ்சு இவரை படிக்க வச்சாங்க. அப்படி அவங்க வேலை செய்த வீடுகள்ல எங்க வீடும் ஒண்ணு”

“எப்படிங்க இப்படி ஒருத்தரை உங்க வீட்டுல கல்யணம் பண்ணி வச்சாங்க”

“என்னோட ஜாதகத்துல ஏதோ பிரச்சனை இருந்ததால என் கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருந்தது. இவரோட அம்மாக்கு ஜாதகம், ஜோசியம் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை, இவருக்கு ஜாதகத்தை விட எங்கப்பா எனக்காக கொடுக்கறதா இருந்த பணம் பெரிசா தெரிஞ்சது”

“புரியுது சொல்லுங்க. ஆனா இந்த மாதிரி குணம் இருக்கறவர் எப்படி படிச்சு வேலைக்கெல்லாம் போனாரு”

“இவர் குணம்தான் கெட்டதே தவிர படிப்புல ரொம்ப கெட்டி. அதனால அவர் டிகிரி முடிச்ச உடனேயே வேலை கிடைச்சுடுச்சு. விமலாவும் அப்படித்தான். ரொம்ப நல்லா படிப்பா. விமலா அவங்க அப்பா ரெண்டு பேருக்கிட்ட இருக்கற அடுத்த ஒற்றுமை ரெண்டு பேரும் தப்பு பண்றாங்க அப்படின்னு கண்டு பிடிக்கவே முடியாது. எங்க வீட்டுல இவர மாதிரி ஒரு தங்கமான மனுஷன் உலகத்துலேயே கிடையாதுன்னு சொல்லித்தான் ஏழையா இருந்தாலும் பரவாயில்லைன்னு கல்யாணம் பண்ணி வச்சாங்க. என் அப்பா இருந்த வரைக்கும் அத்தனை நல்லவரா நடிச்சார். அவர் இறந்து அப்பா சொத்தெல்லாம் எனக்கும் என் தம்பிக்கும் வந்த பிறகுதான் இவர் ஆட்டம் ஆரம்பிச்சுது. அப்போ விமலாவும், ரூபாவும் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தாங்க”,தண்ணீர் குடித்து தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார் சாவித்திரி.

“இவர் வேலை பார்த்துட்டு இருந்தது அக்கௌன்ட்ஸ் பிரிவுல. அங்க கணக்குல ஏகப்பட்ட குளறுபடி, நிறைய பணம் கையாடல் அப்படின்னு பல தப்புக்கள் பண்ணி இருக்காரு. அங்க எடுக்கற பணத்தை வட்டிக்கு விட்டு பணம் கைக்கு வந்த உடனே திருப்பி அலுவலக கணக்குல போட்டு இருக்காரு. சின்ன லெவெல்ல பண்ணும்போது மாட்டிக்கலை. ஒரு தடவை கிட்டத்தட்ட 25 லட்ச ரூபாய் பணத்தைக் கையாடல் பண்ணி ஏதோ புதுசா கம்பெனி ஆரம்பிக்கறாங்கன்னு வட்டிக்குக் கொடுத்திருக்கார். அவங்க இவரை விட பெரிய டுபாக்கூர் போல இருக்கு. பணத்தைத் திருப்பிக் கொடுக்காம ஊரை விட்டே ஓடிட்டாங்க. இவர் கையாடல் பண்ணின விஷயம் முதலாளிக்குத் தெரிந்து இவர் மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி அர்ரெஸ்ட் லெவெல்க்கு போய்டுச்சு. அப்பறம் என் அப்பா எனக்குக் கொடுத்த பணம், வீடு இதெல்லாம் வச்சு அந்தப் பணத்தைக் கட்டினோம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.