(Reading time: 13 - 25 minutes)

ம்மா கல்யாணம் பண்ணி அத்தனை நாள் குடித்தனம் பண்ணி இருக்கீங்க. நீங்களும் டிகிரி படிச்சவங்க. சாதாரண கம்பெனில கணக்கு எழுதறவங்களுக்கு என்ன சம்பளம் வரும்ன்னு உங்களுக்குத் தெரியாதா? அவர் ஆடம்பரமா செலவழிக்கும்போது உங்களால அவர் தப்பு பண்றார்ன்னு கண்டுபிடிக்க முடியலையா”

“ரெண்டு பாங்க்ல அக்கௌன்ட் வச்சுட்டு இருந்து இருக்காரு. சம்பளம் போடற பேங்க் பத்தி மட்டும்தான் எனக்குத் தெரியும். அதே மாதிரி எப்போவுமே அவருக்கு பணம் சேர்க்க மட்டும்தான் பிடிக்கும், அதை செலவழிக்கப் பிடிக்கவே பிடிக்காது. அதனால அவர் குடுத்த பணத்துல வந்த வட்டி அப்படியே சேர்ந்துட்டுதான் இருந்து இருக்கு. எங்க அப்பா எங்க கல்யாணம் முடிஞ்ச உடனேயே ஒரு 2 பெட்ரூம் flat வாங்கி எங்களை குடித்தனம் வச்சாரு. அப்பா இறந்ததுக்கு அப்பறமா இன்னொரு flat எங்களுக்கு அவர் சொத்துலேர்ந்து வந்தது. சொந்த வீடு அப்படிங்கறதால வாடகை செலவு இல்லை. பொண்ணுங்க படிச்சதும் வீட்டுக்குப் பக்கத்துலையே இருக்கற ஸ்கூல்லதான். ரெண்டு பேருமே ஸ்கூல் டாப்பெர்ஸ். அதனால ரெண்டு பேருமே ஸ்காலர்ஷிப்லதான் படிச்சாங்க. விமலா இன்ஜினியரிங் படிச்சதும், ரூபா இப்போ படிக்கறதும் கூட ஸ்காலர்ஷிப்தான்”, சாவித்திரி சொல்ல, வரதன் புரிந்ததற்கு அறிகுறியாக தலையை அசைத்தார்.

“அவர் பணம் கையாடல் பண்ணின விஷயம் எப்போ உங்களுக்குத் தெரிஞ்சது”,நடுவில் புகுந்து தேவி கேட்டாள்.

“எனக்கு இவரை அர்ரெஸ்ட் பண்ணி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போனதுக்கு அப்பறமாத்தான் தெரியும். அப்போ விமலா பன்னிரெண்டாவது படிச்சுட்டு இருந்தா. ரெண்டு மாசத்துல பப்ளிக் எக்ஸாம் இருந்தது. திடீர்ன்னு போலீஸ் ஸ்டேஷன்லேர்ந்து போன். உங்க கணவரை கைது செய்து இருக்கோம்ன்னு. அடிச்சு பிடிச்சு என் தம்பியையும் கூட்டிட்டு போய்ப் பார்த்தா இவர் இல்லாத தப்பை எல்லாம் பண்ணிட்டு மாட்டி இருக்கார். ரெண்டு பெண் பிள்ளைங்களை வச்சிருக்கோமே. அப்பா முன்னாள் கைதின்னு தெரிஞ்சா அவங்க எதிர்காலம் என்ன ஆகறது. அதனால என் கணவரோட முதலாளி கைல, கால்ல விழுந்து கேஸை வாபஸ் வாங்க வச்சு, இவர் கையாடின பணத்தை வீட்டை வித்து அடைச்சோம். இந்தக் காலத்துல சின்ன வயசுல உள்ளவங்களுக்கே வேலை கிடைக்கறது கஷ்டமா இருக்கு. இவருக்கு அப்போவே கிட்டத்தட்ட நாற்பத்து எட்டு வயசு. எங்க இருந்து வேலை கிடைக்கறது. ரெண்டாவது இவர் போன ரெண்டு, மூணு இடத்துல இவரைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சு இருக்கும் போல. அவங்க இவரை அவமானப் படுத்தறா மாதிரிப் பேச இவரும் அதுக்கப்பறம் வேலை தேடறதை நிறுத்திட்டார். இவர் ரொம்ப பெரிய வேலைக்கெல்லாம் போகல. அதனால சேமிப்புன்னு எங்கக்கிட்ட பெரிசா எதுவும் இல்லை. ஒரு ரெண்டு மாசம் விமலா எக்ஸாம் முடியறவரை தாக்குப்பிடிக்க முடிஞ்சது. அதுக்கப்பறம் பணத்துக்கு என்ன பண்ணன்னு யோசனை”

“அதுதான் உங்க கணவர் சேர்த்து வச்ச வட்டிப்பணம் இருந்து இருக்குமே”

“இருந்தது சார். ஆனால் அப்படி ஒரு பணம் இருக்கறதே எனக்குத் தெரியாதே. அடுத்த மாத செலவை எப்படி சமாளிக்கப் போறோமோன்னு இவர்க்கிட்ட கவலைப் பட்டுட்டு இருந்த உடனதான் இவர் அந்த இன்னொரு அக்கௌன்ட் பத்தி சொல்லி அதுல இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார். ஆனால் செம்ம கோவத்தோடதான் பணத்தைக் கொடுத்தார். அவர்க்கிட்ட ஒரு ஒரு முறையும் பணம் வாங்கும்போதும் அத்தனை வேதனையா இருக்கும். தான் இத்தனை நாள் சேமிச்சது அத்தனையும் கரையுதேன்னு அவ்வளவு கோவம் வரும்”

“என்னம்மா இது, அவர் யாருக்காக செலவழிக்கறார். அவரோட குடும்பத்துக்காகத்தானே. அதுவும் இல்லாம அவர் செஞ்ச தப்புனாலதான நீங்க அந்த நிலைமைக்கே வந்தீங்க”

“அதெல்லாம் நியாயமா நடக்கறவங்க யோசிப்பாங்க. இவர் தன் சுகமே பெரிசுன்னு நினைக்கறவர். பொண்டாட்டி, பிள்ளைங்க உறவுகள் கூட அவருக்கு அடுத்தவங்கதான். உடல் அளவுல வருத்தலையே தவிர, நாங்க ரொம்ப அன்னோன்யமான தம்பதிகள்லாம் கிடையாது. எங்க வீட்டுல என் பேருல கொஞ்சம் சொத்து இருக்குன்னு தெரிஞ்சதாலதான் நான் மாட்டினேன். இல்லைனா என்னை எல்லாம் அவர் கல்யாணம் கூட பண்ணி இருக்க மாட்டார். அவர் செஞ்சது தப்புன்னு உணர்ந்தாத்தானே. சில ஜென்மங்கள் இருப்பாங்க. எத்தனை பட்டாலும் திருந்த மாட்டேன்னு. அதுல ஒருத்தர் என் கணவர். விமலாவும் இப்போ அதுல சேர்ந்துட்டாளோன்னு கவலையா இருக்கு”

“வறுமைதான் உங்க கணவரை தப்பு வழி போக வச்சுதுன்னு கண்டிப்பா சொல்ல மாட்டேன். ஏன்னா அவர் முன்னாடி இருந்த நிலைமைக்கு உங்க கல்யாணத்துக்கப்பறம் ரொம்ப நல்ல நிலைமைதான் இருந்து இருக்காரு. அவருக்கிருந்த பேராசைதான் தப்பு பண்ண வச்சிருக்கு. நீங்க மேல சொல்லுங்க”

“கரெக்ட் சார். பேராசை மட்டுமேதான். விமலாக்கு +2 ரிசல்ட் வந்தது. நல்ல மதிப்பெண்கள் எடுத்து பாஸ் பண்ணி இருந்தா. அவ ஸ்கூல்ல முதல் இடம். மாநிலத்துல எட்டாவது இடம். ஸ்காலர்ஷிப்ல இன்ஜினியரிங் கிடைச்சுது. அதுவரை பக்கத்துல இருக்கற ஸ்கூல்லதான் படிச்சா. அங்க எங்க மாதிரி நடுத்தர வர்க்க மக்கள்தான். ஆனா அவ சேர்ந்த காலேஜ்ல நிறைய ஹைகிளாஸ் பசங்க படிச்சாங்க. அப்போ ஆரம்பிச்சது வினை. அங்க இருந்த பசங்க இவ போடற டிரஸ்ல ஆரம்பிச்சு செருப்பு வரைக்கும் கமெண்ட் அடிக்க ஆரம்பிச்சாங்க. விமலா நல்லா படிப்பா அப்படிங்கறது வேற சில பெண்களுக்கு பொறாமையைத் தூண்டி விட்டிருக்கு. அவங்க கிண்டலா பேசறது பொறுக்காம வீட்டுக்கு வந்து எங்கக்கிட்ட கத்த ஆரம்பிச்சா. அதுவும் இங்க இருக்கற பண நிலைமையை குத்திக் காட்டி காட்டி கத்துவா. ரெண்டு மூணு முறை இவ கத்தறதைப் பார்த்த அவங்கப்பா நான் அவக்கிட்ட பேசறேன்னு அவளை வெளில கூட்டிட்டுப் போய்ட்டார். இவங்க ரெண்டு பேரும் வெளியப் போய் என்ன பேசினாங்கன்னு தெரியாது. அதுக்கப்பறமா அவ வீட்டுல கத்தறதோ, இல்லை எங்க நிலைமையை சுட்டிக் காட்டிப் பேசறதோ கொறைஞ்சு போச்சு. நானும் என் கணவர்க்கிட்ட அப்படி என்ன அவ மாறும்படிப் பேசினீங்கன்னு கேக்க அவர் அதுக்கு அவக்கிட்ட நான் பணம் எடுத்த உண்மையை சொல்லிட்டேன். அவளும் நிலைமையைப் புரிஞ்சுட்டு அமைதியாய்ட்டா, இன்னும் கொஞ்ச நாள்தான், நான் என் நண்பன் கூட சேர்ந்து பிசினஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன். அப்பறம் எல்லாம் சரியாகப் போய்டும்ன்னு சொன்னார்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.