(Reading time: 13 - 25 minutes)

27. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

"து தான் நடந்தது.. என்னை மன்னிச்சுங்கோன்னா"  என்றாள் சாரதா.

இத்தனை நேரமாக சாரதா சொன்ன அனைத்தையும் வாயை மூடாமல் அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தனர் அங்கிருந்த அனைவரும்.

ராமமூர்த்தி முகம் இறுக, கல்லென சமைந்து நின்று விட்டார்.. அவரால் எதையும் நம்ப முடியவில்லை.. தன் தலையில் பெரிய இடியை தூக்கி போட்டதை போல உணர்ந்தார்.. 'இத்தனை காலமாக, கடந்த இருபத்து ஆறு வருஷமாக மூன்று பெண்களுக்கு அடுத்து பிறந்த தன் செல்ல மகன் என்று நினைத்து வளர்த்து வந்த தன் அருமை மகன், தனது மகனே இல்லை, வேறு ஒருவருடைய குழந்தை'... என்று ஒரே நொடியில் சொல்லி விட்டாளே,  உண்மையில் இவளை நான் மணந்து, இத்தனை வருஷம் வாழ்ந்தேனா?'.....

vasantha bairavi

'அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.. ஏதோ பிரமை பிடித்தது போல தலையை பிடித்துக் கொண்டவர், அப்படியே அங்கே இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு தன் நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. இந்த ஷணமே தான் இந்த உலகத்தை விட்டு போய் விடக்கூடாதா?' என்றே நினைத்தவர் கண்களை மூடிக் கொண்டார்.

அங்கு நடந்த அனைத்தையும், பார்த்தும் , கேட்டுக் கொண்டும் இருந்த வசந்த், தன் தந்தை அருகே சென்றான்..,

"அப்பா, நான் உங்க பிள்ளை இல்லையாப்பா?.. அம்மா என்னென்னவோ சொல்லறாளேப்பா?.. நீங்க சொல்லுங்கோப்பா?.. அம்மா சொல்லறது எல்லாம் பொய்.. தெரியாம எதையோ சொல்லறான்னு.. ஏம்ப்பா பேச மாட்டேன்றேள்.. நான் உங்க பிள்ளை தான்ப்பா"  என்று புலம்பியவன், தன் தாய் சாரதாவிடம் சென்று கைகளை பிடித்துக் கொண்டான்.

"அம்மா.. நீங்க என்னோட அம்மா இல்லையா?.. சொல்லும்மா?..  எதுக்கு இப்படி சொன்னே?.. ஏம்மா இப்படி செஞ்சே?.. நீங்க என் உண்மையான அம்மா இல்லையா?.. பொய் சொல்லக் கூடாதுன்னு சின்ன வயசிலிருந்து எங்க எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்தீங்களே?.. பொய் சொன்னா அந்த பகவான் மன்னிக்க மாட்டான்னு சொல்லி சொல்லி வளர்த்தீங்கோ?.. இப்போ நீங்களே பொய் தான் சொன்னேன்னு சொல்லுங்கோ?.. பகவான் மன்னிக்கலேன்னா பரவாயில்லைம்மா.. நான் உங்க மகன் இல்லேன்னு சொன்னது பொய்ன்னு சொல்லுங்கோ?"  என்று கதறி அழுத வசந்த், தன் அன்னை சாரதாவை உலுக்க,

"அம்மா.. நீ என் அம்மான்னு சொல்லுமா.."என்றவன், சாரதா பதில் பேசாமல் வசந்தை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு தலையசைக்க,

"உன்னை நான் அம்மான்னு இனி மேல் கூப்பிட முடியாதா?.. நீ எனக்கு அம்மா இல்லை, பைரவிக்குதான் அம்மாவா" என்று அவரை பிடித்து தள்ளி நிறுத்தி விட்டு, நகர்ந்து கொள்ள முயல,

அதற்குள் அஜய் வசந்தை பிடித்துக் கொண்டு தன் தோள்களில் சாய்த்துக் கொண்டு அவனுக்கு ஆறுதல் அளிக்க முயன்றான்.

"அஜய் இவா என் அம்மா, அப்பா இல்லை" என புலம்ப ஆரம்பித்தான் வசந்த்.

மஹதி, "அழாதே வசந்த்.. " என அவன் அருகே வர, பைரவியும் "வசந்த்" என கண்ணீருடன் அழைக்க, மஹதியை கட்டி பிடித்துக் கொண்டு கண்ணீர் சிந்தினாள் பைரவி..

அவன் அழுகையை காண சகிக்காமல் சாரதா, தன் கணவர் அருகே சென்றவள்,  "ஏன்னா, நம்ம குழந்தையை பாருங்கோன்னா.. எப்படி கதறறான்" என சொல்லியபடி, "நான் பாவின்னா.. இத்தனைக்கும் நான் தான் காரணம்.. என்னை மன்னிசிடுங்கோ"  என அவர் கால்களை பிடித்தபடி கதறலானாள்.

"இன்னும் என்னை என்ன பண்ண சொல்லறே?.. இப்படி ஒரு இடியை என் தலை மேல போட எத்தனை நாளா காத்திண்டு இருந்தே சாரதா?.. உனக்கே இது நியாயமா?..  உன்னால் எப்படி இப்படி செய்ய முடிஞ்சுதுமா?.. பாரு.. நீ பண்ணி வைச்ச காரியத்தாலே அங்கே இரண்டு குழந்தைகள் எப்படி கதறி அழறதுகள்ன்னு?.. இப்போ நான் யாரைன்னு சமாதானம் செய்யறது?.. இரண்டுமே நம்ம குழந்தைகள்தான்.. ஒரு கண்ணுல வெண்ணையும், ஒரு கண்ணுல சுண்ணாம்புமா இருக்க முடியுமா சொல்லு?".. யாரை நான் பார்ப்பேன்?".. இதை பார்த்துண்டும் நான் இன்னும் உசிரோடத்தான் நான் இருக்கனுமா?.. இந்த ஷணமே என் உயிர் போகாதான்னு இருக்குடி சாரதா எனக்கு" 

"அய்யோ.. என்னை மன்னிசுடுங்கோன்னா.. நான் என்ன பண்ணுவேன்.. இத்தனை நாளா தெரியாத இருந்த விஷயம் என்னோடையே புதைஞ்சி போயிடும்ன்னு நினைச்சேனே?.. இப்படி மறுபடியும் விஷயம் முளைக்கும்ன்னு நினைச்சு பார்க்கலைன்னா"  என்று சாரதா கதற,

தன் கால்களை பிடித்திருந்த சாரதாவை பிடித்து விலக்கிவிட்டு எழுந்த ராமமூர்த்தி,  "அப்படின்னா.. சாரதா நாம வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் சொல்லும்மா.. உன்னோடையே இந்த விஷயத்தை மறைஞ்சி போகனும்ன்னு நீ நினைச்சிருக்கே?.. எங்கிட்ட இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி நீ மறைக்க துணிஞ்சே?.. சொல்லு சாரதா சொல்லு.. அப்ப நாம இரண்டு பேரும் இத்தனை நாள் சேர்ந்து வாழ்ந்ததே பொய்யா தெரியறது நேக்கு?.. உன் மனசுல இவ்வளவு கல்மிஷமா?"

"இல்லைன்னா.. இப்பவும் நான் சொல்லறேன்.. உங்களை நான் ஏமாற்ற நினைக்கலே.. அன்னிக்கு அந்த ஷணத்துல இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டியதா போச்சு.. அன்னிக்கு நான் இருந்த நிலைமை அப்படி. எனக்கு நான்காவதும் அந்த அம்பாள் பொண்ணா கொடுத்துட்டா.. நான் என்ன பண்ணியிருக்க முடியும்.. உங்கம்மா, ஏற்கனவே நான் பிரசவத்துக்காக என் பிறந்தாத்துக்கு போன பொழுதே இந்தவாட்டி எனக்கு பையன் பொறக்கலைன்னா ஆத்து பக்கமே வர வேண்டாம்ன்னும், உங்களுக்கு வேற கல்யாணம் செய்து வைச்சிடுவேன்னும் சொல்லித்தான் அனுப்பி வைச்சா"  என்று சற்றே நிறுத்தியவள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.