(Reading time: 12 - 24 minutes)

28. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

"ள்ளே வரலாமா" என்ற குரலை கேட்டு திரும்பியவர்கள், அங்கே ஆனந்த் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்தனர்.

'இவர் எங்கே இங்கே?.. அதுவும் இந்த சமயத்தில்.. ஒரு வேளை நாம் பேசியதை எல்லாம் கேட்டு இருப்பானோ?' என நினைத்தனர் சாரதா தம்பதியர்.

பைரவிக்கும், அஜய்க்குமே குழப்பமே..

vasantha bairavi

வசந்தோ, 'இவன் எதற்கு மீண்டும் நம் வீட்டுக்கு வந்திருக்கிரான்.. அது தான் நாம் இவர்கள் வீட்டு சம்மந்தத்தை வேண்டாம் என்று மறுத்து அனுப்பியாகி விட்டதே.. எதற்கு திரும்பவும் வந்து தொல்லை செய்ய வந்திருக்கிறான்.. ஒரு வேளை இவன் தங்கை எப்படியாவது தன்னை மணக்க என்று சிபாரிசு செய்ய அவன் அண்ணனை அனுப்பி இருப்பாளோ?.. அவள் செய்யக் கூடியவள் தான் அவ்வளவு சுலபத்தில் தோல்வியை ஒப்புக் கொள்வாளா என்ன?.. திமிர் பிடித்தவள்' .. என்று எண்ணி தன் அதிருப்தியை தன் முகத்தில் காட்டினான்.

"பெரியவர்கள் மன்னிக்கனும்.. உங்கள் எல்லோர் முகத்தை பார்த்தாலுமே தெரிகிறது, நான் வேண்டாத சமயத்தில் வந்திருக்கிறேன் என்று.. ஆக்சுவலாய் நான் என் குடும்பத்தவருக்காக மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன்.. என்னை தங்கை பேசியது கொஞ்சம் அதிகமே.. என் அம்மா அவளுக்கு சப்போர்டிவ்வா பேசியதும் அதிகப்படியே.. ஒரு நல்ல குடும்பத்து பிள்ளையை, அதுவும் இன்னும் கொஞ்சம் நாளில் ஒரு கலெக்ட்டராக பதவியேற்கப் போகிறவரை அவமானப்படுத்துவது போல பேசியதை யாரால் இருந்தாலும் மன்னிக்க முடியாதுதான்.. வீட்டோட மாப்பிளையாக கேட்டது எனக்கே பிடிக்கவில்லை.. அப்பா இன்னும் அவர்கள் மீது கோபமாகத் தான் இருக்கிறார்".

"சாரி மாமா, மாமி.. வசந்த் நீயும் எங்களை மன்னிக்க வேண்டும்.. அவா செய்த தப்புக்கு நானும், என் அப்பாவும் உங்க எல்லோர் கிட்டேயும் மன்னிப்புக் கேட்கிறோம்.. அம்மாவும், கவிதாவும் தீர்மாணிச்சுட்டா அந்த டாக்டர் விஜய் தான் தங்கள் வீட்டு மாப்பிள்ளை என்று.. அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. கவிதா என் தங்கை என்றாலுமே, அது அவள் வாழ்க்கை.. நான் தலையிட போவதில்லை.. உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கவே இப்போ வந்தேன்.. வசந்த், கவிதா உனக்கு ஏற்றவளில்லை.. ஷி டஸ்ண்ட் டிசர்வ் யூ.. ஐ யாம் சாரி ஃபார் எவ்ரிதிங்க்.. நம்ம உறவு, நல்ல முறையில் தொடரனும்" என்று தழுதழுக்க மன்னிப்பை வேண்டினான் ஆனந்த், அந்த இளம் தொழிலதிபன்.

முதலில் சுதாரித்த ராமமூர்த்தி, "அதனாலென்னப்பா.. எதுக்கு நீ வந்து மன்னிப்பெல்லாம் கேட்கணும்.. என் பையன் மீதும் கொஞ்சம் தப்பியிருக்கு.. ஒரு பெண்ணை காதலிச்சு, பின்னாலே வேண்டாம்ன்னு சொல்லறதும்தான் தப்புதான்.. நீங்க எல்லாரும் எங்களையும் மன்னிக்கனும்.. எப்படியோ, உன் தங்கைக்கு பிடிச்ச வாழ்க்கை அமைஞ்சா சரிதான்" என்றவர்,

"சாரதா, எல்லாருக்கும் காப்பி போட்டுக் கொண்டு வாம்மா" என சொல்ல,

"நான் போய் எடுத்து வரேன்" என்று மஹதி செல்ல, ஆனந்தை பாராட்டும் விதமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, மஹதியுடன் பைரவியும் உள்ளே சென்றாள்..

'பரவாயில்லை, மேடம்க்கு நம்ம மேல் கோபம் இல்லை போல.. எங்கே நம்ம தங்கை செய்து வைத்த வேலையில், நம்மை ஒரேடியா வெறுத்துடுவாளோன்னு நினைச்சேன்.. கோபமா கூட பார்க்கவில்லை.. தப்பித்தேன்'  என்று நினைத்த ஆனந்த்,

"திரும்பவும் உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்கனும்.. நான் உங்க கிட்டே என் தங்கைக்காக மன்னிப்பு கேட்கவே வந்தேன்.. ஏற்கனவே நான் சொன்னது போல, வந்த சந்தர்ப்பம் சரியில்லை..  நான் உள்ளே நுழையும் போது நீங்க பேசினது என் காதுல விழுந்தது" என அவர்களை அதிர வைத்தான்.

"ஈஸ்வரா, இந்த புள்ளையாண்டன் என்னத்தை கேட்டானோ, என்ன புரிஞ்சிண்டானோ தெரியலையே" என சாராதா நினைக்க,

சமையலறையில் இருந்த பைரவி தன் கையில் பிடித்திருந்த பாத்திரத்தை தவற விட்டாள்.. 'டமால்' என்ற ஓசையுடன் உருண்டோடியது அந்த பாத்திரம்.

'அவள் நெஞ்சமும் பதறியது!!.. அய்யோ.. இவனுக்கும் தெரிந்து விட்டதா??.. இப்பொழுது நான் யார் என்று தெரிந்திருக்கும்.. அன்று நான் சொல்லாத அனைத்தும் புரிந்திருக்கும்'

"சொல்லுங்கோ, தம்பி.. நீங்க என்ன கேட்டேள்?? என்ன புரிஞ்சிண்டேள்??"  என்று ராமமூர்த்தி அலட்டிக் கொள்ளாமல் கேட்டார்.

அவருக்கு எதை பற்றியும் கவலையில்லை.. அவர் வரை வசந்த் அவரது மகன் தான்.. இனி யாருக்கு தெரிந்தால் தான் என்ன, இல்லை தெரியாவிட்டால் தான் என்ன?.. யாருக்காவும் , எந்த சந்தர்ப்பத்திலும், அவர் தன் மகன் வசந்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.. அதனால் தான் சாரதா மாதிரி பதறாமல், நிதானமாக ஆனந்தை எதிர் கொள்ள முடிந்தது..  இது அவருக்கு ஒரு ஆரம்பமே.. இனி இன்னும் எத்தனை பேரிடம் தொடர வேண்டுமோ தெரியவில்லை.. அதனால் தான் இப்பொழுது தைர்யமாக எதிர் கொள்ள தயாராகி விட்டார்.

அவரை ஆச்சர்யமாகப் பார்த்தான் ஆனந்த்..  தான் அறிந்து கொண்ட விஷயத்தை தெரிந்து கொண்டால், அவர் பதற்றமடைவார், என்று அவன் எண்ணியிருக்க, அவரோ பெரிதாக எந்த பாதிப்பும் இல்லாமல் தன் எதிர் கொள்வதை பார்த்தவனது மனது சற்று தெளிவடைந்தது.. எங்கே தன்னை தப்பாக நினைப்பார்களோ' என்று நினைத்திருந்தவன் மெல்ல,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.