(Reading time: 14 - 28 minutes)

30. கிருஷ்ண சகி - மீரா ராம்

பாட்டி….”

அழைப்பு வந்த திசையை நோக்கி பார்த்த காவேரிக்கு தூக்கிவாரி போட்டது…

“பாட்டி… வான்னு சொல்லமாட்டீயா?...”

krishna saki

அதிர்ச்சியுடன் நம்ப இயலாத பார்வை ஒன்றை வீசியவர் வேறெதுவும் பேசவில்லை…

“இன்னமும் என் மேல உனக்கு கோபம் போகலையா பாட்டி?...”

அதற்கு மேலும் பொறுமை இல்லாது, “பவித்ரா…” என சத்தமாக அழைத்தார் காவேரி…

“ஏன் பாட்டி என் கூட பேச பிடிக்கலையா உனக்கு?..”

எதுவும் பேசாது அவர் முகம் திருப்பிக்கொண்டபோது,

“கூப்பிட்டீங்களாம்மா?...” என அவசரம் அவசரமாக வந்தாள் பவித்ரா…

வந்தவள், “என்னம்மா… என்னாச்சு?...” என கேட்டுக்கொண்டே போனவள், அவருக்குப் பின்னாடி தெரிந்த உருவத்தைப் பார்த்ததும், அதிர்ந்து போனாள்…

“முதலில் இங்க இருந்து போக சொல்லு… பவித்ரா… என் கண் முன்னாடி யாரும் நிற்க வேண்டாம்…” என அவர் கத்த,

“எங்கிட்ட பேச கூடாதுன்னு நீ இருக்குறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்… ஆனா நான் ஏன் உன் வெறுப்புக்கு ஆளானேன்னு ஒரு நிமிஷம் நீ யோசிச்சு பார்த்திருப்பீயா?...??” என்ற கேள்வி வர, ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தார் காவேரி…

“எனக்கு அம்மா இல்ல… பொறந்ததும் செத்து போயிட்டாங்க… அப்ப நீ தான என்னை தூக்கி வளர்த்த… இப்போ என்னை வெறுக்குற அதே காவேரி தான அன்னைக்கு என்னை செல்லம் பேசி கொஞ்சினது… உன்னால இல்லன்னு சொல்ல முடியுமா?... சொல்லு பாட்டி… சொல்லு….” என காவேரிக்கு முன் உணர்வு பூர்வமான கேள்விகளை முன் வைத்ததும், அவர் சற்று தளர்ந்தார்…

“உனக்கு அப்ப இருந்து இப்போ வர இந்த ஆசிரமம் தான முக்கியமா பட்டுச்சு… எனக்கு விவரம் தெரியுற வரை என் கூட இருந்து என்னை பார்த்துகிட்ட… 7, 8 வயசு வரைக்கும் கூட இருந்து வளர்த்த… அப்புறம், நீ இந்த ஆசிரமே கதின்னு இருந்துட்ட… என்னை மாசத்துக்கு இரண்டு மூணு தடவை வந்து பார்க்குறதோட சரி… உனக்கு எப்பவுமே நான் முக்கியமா படவே இல்லல்ல… இந்த இடம் தான உனக்கு முக்கியமா படுது…????”

“எல்லாரையும் விடவும் எனக்கு இந்த இடம் தான் முக்கியம்… பதில் கிடைச்சிட்டுல்ல… கிளம்பு…” என பட்டென்று பதில் சொல்லிவிட்டு அவர் மீண்டும் முகம் திருப்பிக்கொள்ள,

“ஓ... இதுதான் முக்கியம்னா, அப்போ நான் பொறந்த அன்னைக்கே என்னை வளர்க்க முடியாதுன்னு கொன்னுருக்க வேண்டியது தான?... ஏன் செய்யலை?... சரி அப்போ தான் முடியாம போச்சுன்னா, அதுக்குப் பிறகாவது கொஞ்சம் விஷம் வச்சி சாகடிச்சிருக்கலாமே என்னை… ஏன் செய்யலை?...”

“அந்த பாவத்தை என்னை இப்போ செய்ய வச்சிடாத… போயிடு… போ….” என அவர் விரட்ட

“முடியாது பாட்டி… நான் போகமாட்டேன்… நீ எங்கூட இருந்த வரை நான் பாதை மாறி போகலை… ஆனா நீ என்னை விட்டு விலகின பிறகு, நான் நானாக இல்லை… என்னை சுத்தி பணம் அதிகம் இருந்துச்சு… அன்பா இருக்க ஆள் தான் அதிகம் இல்லை… அது உனக்கும் தெரியும்… தெரிஞ்சும் ஏன் பாட்டி இப்படி பிடிவாதம் பிடிக்குற?... உன்னால இந்த ஆசிரமம் விட்டு வர முடியாதுன்னு தான என்னை விட்டு நீ பிரிஞ்ச… அப்போ நான் உன்னோட இங்கேயே இருந்துடுறேன் இனி…”

“இந்த வார்த்தையை முன்னாடி ஒரு காலத்துல நீ சொல்லியிருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன்… ஆனா இப்போ சத்தியமா நம்பமாட்டேன்…” என்றார் காவேரி பிடிவாதமாக…

“தெரியும் பாட்டி நீ நம்பாக இருக்குறதுக்கு காரணம்… அது என்னோட திமிறால எனக்கு நானே போட்டுகிட்ட தூக்கு கயிறுன்னு….” என விரக்தி குரலில் இழையோட, காவேரிக்கு மனம் துடித்தது…

“எனக்கு மட்டுமே நீ சொந்தம்னு நான் நினைச்சிட்டிருந்தப்போ, இந்த ஆசிரமத்து ஆளுங்களும் உனக்கு சொந்தம்னு நீ சொன்னதை என்னால ஏத்துக்க முடியலை… உன் இடத்துல இருந்து பார்க்குறதுக்கு எனக்கு வயசும் இல்லை… அனுபவமும் இல்லை… ஆனா நீ என்னோட இடத்துல இருந்து என்னைக்காவது கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்திருக்கியா பாட்டி…” என தன் பக்க நிலையை எடுத்துரைத்ததும் காவேரிக்கு மனம் மேலும் கனமானது…

“அறிஞ்சும் அறியாத வயசுல இருந்த எனக்கு அப்போ நல்லதை கெட்டதை எடுத்து சொல்ல இருந்த ஒரே ஒரு உறவு நீ தான்… நீயும் எனக்கே எனக்குன்னு இல்லன்னு ஆனப்போ என் மனசு…. அது… அது பட்ட பாடு உனக்கு தெரியுமா பாட்டி?...” என வருத்தத்தோடு கேட்டபோது காவேரிக்கு தொண்டை அடைத்தது…

“அந்த கோபத்துல வெறியில தான் நான் திமிறெடுத்தவளா மாறினேன்… என் இஷ்டப்படி வாழ்க்கையை வாழ்ந்தேன்… அதுல எனக்கு எந்த தப்பும் தெரியலை… ஒருவேளை உங்க எல்லாருக்கும் அது தப்பா தெரிஞ்சா அதுக்கு முழுக்க முழுக்க காரணம் நீங்க எல்லாரும் தான்…”

“நான் என் திமிரால உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்தினப்போ கூட நீ அமைதியாதான் இருந்த… என்னால நம்ம குடும்ப கௌரவம் கெட்டுப்போச்சுன்னு நீ நினைச்சப்போ கூட மனசுதான் உடைஞ்சி போனீயே தவிர, என்னை நீ வெறுக்கலை… ஆனா எப்போ நான் இந்த ஆசிரமத்தை குறை சொன்னேனோ, அப்போ ஆரம்பிச்சது பிரச்சினை… அது போதாதுன்னு எப்ப பாரு ஒரு பேரு என்னை தொந்தரவு செஞ்சிட்டே இருந்துச்சு… அதையும் நான் சொல்லித்தான் நீ தெரிஞ்சிக்கணும்னு இல்ல… உனக்கே தெரியும் அது என்ன பேருன்னு… என் பக்கம் இருந்து பார்க்குறப்போ எனக்கு நான் திமிறா இப்படி இருக்குறது தான் சரின்னு பட்டுச்சு… அந்த நேரத்திலேயும் உங்கிட்ட ஓடி வந்து தான என் மனசோட ஆசையை பகிர்ந்துகிட்டேன்… உன்னால அதை இல்லன்னு சொல்ல முடியுமா?... பாட்டி…” என்றபோது காவேரிக்கு கண்ணில் நீர் நிரம்பி நின்றது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.