(Reading time: 14 - 27 minutes)

'வேண்டாம் அது!!!!  இன்று வேண்டாம்!!! என தோன்றியது அவனுக்கு. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவள் என்னை பார்க்கட்டும். இன்று முழுவதும் நான் அவளை தூரத்திலிருந்து  ரசித்துக்கொண்டே இருக்கவேண்டும்.'

காலுக்கு அருகில் இருந்த ஷாலை இழுத்து முகம் வரை போர்த்திக்கொண்டான். இப்போது வெளியே தெரிந்தது அவன் கண்களும் கேசமும் மட்டுமே. 'இதை வைத்து கண்டு பிடித்துவிடுவாளா என்ன??? அதையும் பார்க்கலாம்!!!!

அவளும் அவனை அவ்வபோது பார்த்திருக்ககூடும்தான். டி.வி.யில்!!! பத்திரிக்கைகளில்!!! சினிமாவில் பிரபலமாகிக்கொண்டிருக்கும் ஒரு பாடகன் அவன். அதோடு மடமடவென வளர்ந்துக்கொண்டிருக்கும் ஒரு தொழிலதிபரும் கூட.....

இந்த எட்டு வருடங்களில் அவனது வாழ்கையில், நடை உடை பாவனைகளில், அந்தஸ்தில் என எல்லாவற்றிலும் கிடு கிடு வளர்ச்சி.. நிறையவே மாற்றங்கள்!!! ஆனால் இதயம் மட்டும் எப்போதும் போல் அவளுடையதாகவே இருக்கிறது!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ஏழு எட்டு வருடங்கள் முன்னால் வரை அவனுக்கு வாழ்கையில் பெரிய பிடிப்பு என்ற ஒன்று இருந்ததே இல்லை. எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் சிக்காமல் சுற்றிக்கொண்டிருந்தவன்தான் அவன். இப்போது வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற பிடிப்பு வந்ததற்கு காரணம் அவள் மட்டுமே. இந்த வளர்ச்சி முழுவதும் அவன் அவள் மீது கொண்ட காதலால் மட்டுமே வந்திருக்கிறது.

'ஹேய்.. கிளம்பும் போது மதுரை மல்லி வாங்கணும்ன்னு நினைச்சேன் மறந்திட்டேன் பாரு.. இங்கே அடுத்த ஸ்டேஷன்லே கிடைக்குமா???.' சட்டென நினைவு வந்தவளாக கேட்டாள்  அபர்ணா. அவளுக்கு பூக்கள் என்றால் கொள்ளை பிரியம். சின்ன புன்னகை அவனிடத்தில்.

'அடடா!!!! ஒரு நாள் தலையிலே பூ வைக்கலைன்னா ஒண்ணும் ஆகாது. இந்த ராத்திரி நேரத்திலே ஸ்டேஷன்லே எல்லாம் பூ கிடைக்காது.  சும்மா இரு ..' அவளை அதட்டினாள் அவள் அருகில் இருந்த தோழி.

அவளுக்கு பழிப்பு காட்டி திரும்பிக்கொண்டாள் அவள். சில நொடி யோசனை அவனிடத்தில். திரும்பி படுத்துக்கொண்டவன் கைபேசியை அழுத்தி மெலிதான குரலில் யாருடனோ பேசினான். ரயில் கொடைரோடு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. கீழே கலகலவென பேச்சு சத்தம் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.

'மேலே ஒருத்தர் படுத்திருக்கார். தூங்கறார் போல... மெதுவா பேசுங்க...' அவர்களுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவனின் காதில் விழுந்தன அபர்ணாவின் வார்த்தைகள். மெல்ல சிரித்துக்கொண்டான் அவன்.

'உன்னை பார்த்த பிறகு உறக்கம் என்பது எனக்கு கிட்டுமா என்ன???'

சில நிமிடங்கள் கரைய ரயில் கொடைரோடு ரயில் நிலையத்தை அடைந்திருக்க அவர்கள் ஜன்னல் அருகில் வந்து நின்றாள் அந்த பெண்மணி.

'அம்மா மல்லிகை பூ மா.  வாங்கிகோங்கமா.. ராத்திரி ஆயிடுச்சு நீங்க வாங்கிடீங்கன்னா நான் அப்படியே வீட்டுக்கு கிளம்பிடுவேன்...' அபர்ணாவை பார்த்து சொன்ன அந்த பெண்ணின்  கையில் ஐந்து முழம் மல்லிகை பூ.

வியந்து மகிழ்ந்து போனாள் அபர்ணா. 'ஹேய்... மல்லிகை பூ..' அப்படியே மொத்த பூவையும் வாங்கிக்கொண்டாள் அவள். சந்தோஷ மழை அவளிடத்தில். அந்த கம்பார்ட்மென்டின் கதவு சாத்தி இருக்க சுகமான மல்லிகை மணம் அவன் நாசி தொட்டது.

'ரயில் நகர ஆரம்பிக்க யாருக்கெல்லாம் பூ வேணும்???' கேட்டாள் அபர்ணா

'அய்யே... எங்களுக்கெல்லாம் வேண்டாம் நீயே வெச்சுக்கோ..' சொன்னார்கள் தோழிகள்.

'வேண்டாம்னா போங்கடி...' சூடிக்கொண்டாள் மலர்களை. அவள் முகத்தில் முழு நிலவின் வெளிச்சம். மெல்ல திரும்பி படுத்தவனின் முகத்தில் ரசனையுடன் கூடிய புன்னகை.. அவள் கேட்டதை அவள் கேட்டவுடனே அவள் கையில் கொடுத்துவிட்ட மகிழ்ச்சி!!! அந்த மல்லிகை சரம் காற்றில் ஆடி அவள் கன்னம் உரசியது. அவனுக்குள்ளே குளிர் சாரல்.

அப்போது ஒலித்தது அவள் கைப்பேசி.  அதை எடுத்து பார்த்தவளின் இதழ்களில் புன்னகை. முகத்தில் வெட்கப்பூச்சு. பார்த்திருந்தான் மேலிருந்தவன்!!! அவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான். எதனால் இந்த வெட்கமாம்???

'ஓய்... யாரது??? உன் ஆளா???' அவளது தோழி கேட்க

'ம்...' என்று தலை அசைத்தவள் அழைப்பை ஏற்றாள்.

உயிர் துடித்து உடைந்து நொறுங்குவது என்றால் இதுதானா??? பேரதிர்ச்சி அலைகள் அவனுக்குள்ளே. சுவாசம் கூட சில நொடிகள் நின்று போனதை போலே தோன்றியது அவனுக்கு. 

இத்தனை நாட்கள் அவளை அவன் பார்த்திரா விட்டாலும் அவள் எங்கே இருக்கிறாள், என்ன செய்துக்கொண்டிருக்கிறாள் போன்ற எல்லா விவரங்களும் அவனுக்கு அவ்வபோது  வந்துக்கொண்டுதான் இருக்கின்றன என்றாலும், இது பற்றி தெரிந்திருக்கவில்லை அவனுக்கு.

'என்ன இது??? யாராம் அவன்???' படபடத்தது அவன் இதயம்.

'ஹலோ......' என்றாள் மெதுவாக.

'எங்கேமா... இருக்கே???' என்றது மறுமுனை.

'ட்ரைன் ஏறிட்டேன்...'  மெல்ல சொன்னாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.