(Reading time: 16 - 32 minutes)

02. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

பாடலை முணுமுணுத்துக்கொண்டே மெல்ல விழி உயர்த்தியவளின் பார்வையில் தென்பட்டான் அவன்…

ஆறடி உயரத்தில், கலையான முகம், கூர் நாசி, சின்ன நெற்றி, மயங்க வைக்கும் கருவிழிகள், ரோஜா இதழ்கள், அதற்கும் மேல் அடர்த்தியான மீசை அந்த இதழுக்கு பாதுகாப்பாய் இருக்க,  கம்பீரத்தின் மொத்த பிறப்போ என பார்ப்பவர்கள் யாராக இருப்பினும் ஒரு நொடி புருவத்தை உயர்த்திட செய்யும் அழகு தான் அவன் தோரணையும், அவனும்…

வான் நீல நிறத்தில் அவன் அணிந்திருந்த அந்த டீசர்ட் அவனது கட்டுடலை அழகாய் வர்ணிக்க, அவனின் அழுத்தமான காலடி ஓசை அவளின் காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது…

அவன் வாசலுக்கு வந்துவிட்டான் என்பதை, அவன் வருகையை, அவள் குறுநகை வெளிப்படுத்த, அவனின் ஒவ்வொரு அடியையும் தன் மனதினுள் ஆழமாக பதிய வைத்தவள், அவனை விட்டு பார்வையை சற்றும் அகற்றவில்லை…

வாசலில் நின்றிருந்த ஒரு குட்டி குழந்தை அவனிடம் எதுவோ கேட்க, அவன் அதற்கு பதில் சொன்ன போது, இங்கே அவளின் பார்வை மொத்தமும் அவனிடத்தில்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவளை தூக்கி அவளின் பெற்றவனின் கையில் அவன் கொடுக்க, அக்குழந்தை பாய்ந்து அவனின் கன்னத்தில் முத்தமிட, அவனின் இதழ்கள் ஒரு சில விநாடிகள் மலர்ந்தது தன்னையும் அறியாமல்… அதனை மலர்ந்த முகத்தோடு பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் அவள்…

மெல்ல கைகளை உயர்த்தி அக்குழந்தையின் முடியினை அவன் கலைத்துவிட, அதுவும் அவனின் சிகையில் கைவைத்து கலைக்க, அவன் “ஹேய்….” என போலியாய் மிரட்ட, அதில் மொத்தமாய் தொலைந்தே போனாள் அவள்…

சிரிக்கின்றான்ரசிக்கின்றான்

எனக்கே எனக்காக….”

என்ற வரிகளும் நினைவு வர, அவள் இதழ்கள் மேலும் விரிந்தது அழகாய்…

குழந்தைக்கு குட்டி டாட்டா சொல்லிவிட்டு அவன் உள்ளே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வர, இங்கே அவளின் மனம் துள்ளிக்குதித்தது…

ஜாக்கிங்க் வந்தவன், தன் கடமையை இனிதே வாசலில் இருந்தே ஆரம்பித்து வர, அவளருகில் வர வர அவள் நெஞ்சம் துடித்தது…

அவனின் ஒவ்வொரு அசைவையும் தனக்குள் பொக்கிஷமாய் சேமித்துக்கொண்டிருந்தவள், அவன் பார்வையை சந்திக்க போராடினாள்…

அவனின் அழகிய கருவிழிகளில் பார்வையை பதித்தாள் அவள்… மயக்கும் விழிகள் தான் அவனுடையது… ஆனால் அதில் ஏனோ எப்போதும் ஒரு கண்டிப்பும் இருக்கும்… இன்றும் அந்த கண்டிப்பு கொஞ்சம் கூட குறையவில்லை… ஆனால், அந்த குழந்தையை பார்த்து, தூக்கி ரசித்த போது மட்டும் காணவில்லையே இந்த கண்டிப்பு… என்று மனதினுள் அவள் கேள்வி கேட்க,

அட லூசுப்பெண்ணே, ஹேய்… என அவன் அக்குழந்தையை மிரட்டியது நினைவில்லையா… என மனமும் எடுத்துரைக்க, “அதுதானே… அத சொல்லு முதலில்… சிரிப்பும் வராது… கண்டிப்பும் மாறாது… ஆனால் என்னமோ அதிசயமாய் ரொம்பவே கொஞ்சமாய் ஒரு 6 செகண்ட் விரிந்த இதழ்களை நான் பார்த்தேன்… என்ன அழகு சிரிக்கும்போது….” என அவள் கொஞ்சிக்கொள்ள,

“போதும்… நிறுத்து… 6 செகண்ட் சிரிச்சதுக்கு இந்த அக்கப்போறா?... ஆனா அதையும் உட்கார்ந்து எத்தனை செகண்ட்ன்னு எண்ணிகிட்டிருந்திருக்கப் பாரு… சரியான லூசு தான் நீ… என்னவோ பண்ணு…. நான் போறேன்பா… இல்ல நானும் அவனை பக்கத்துல பார்த்து லூசாகிடுவேன்… எப்படியும் நீ அவனை கொஞ்சம் குளோஸ்ல பார்க்கத்தான் போற… அப்போ கண்டிப்பா லூசாகித்தான் நிப்ப… சோ நான் ஸ்டெடியா இருந்தாத்தான உன்னை தேத்த முடியும்…” என்ற அவளின் அந்த பைத்தியக்காரத்தன மனம் அவளுள் மறைந்து கொள்ள,

அவன் அவள் இருக்குமிடத்தை கடக்க ஓடி வந்து கொண்டிருந்தான்… படபடவென்று அடித்துக்கொண்டவளின் மனம் அவன் விழிகளை ஒருமுறை கிட்ட சந்திக்க ஏங்கி நின்றது…

சுவாசம் கூட சற்று நேரம் தடைபட்டு போனதாய் அவள் உணர ஆரம்பித்த தருணத்தில், அவனும் அவள் இருக்குமிடம் கடந்து சென்று கொண்டிருக்க,

“ப்ளீஸ்… திரும்பி பாருங்க… ஒரு நிமிஷம்… அட்லீஸ்ட் ஒரே ஒரு செகண்ட்….” என மனதிற்குள் ஆயிரம் முறை அந்த கணப்பொழுதில் அவள் வேண்டிக்கொள்ள, அவள் வேண்டுதலுக்கும் பலன் இருந்ததோ…

“ஹேய்… ஜெய்…” என்ற அழைப்பு எங்கிருந்தோ வர, ஓடிக்கொண்டிருந்த அவன் கால்கள் நிற்க,

“ஹேய்… ஜெய்… உன்னைத்தான்….” என்ற அழைப்பில் சட்டென்று அவனும் திரும்ப, தடைப்பட்டிருந்த அவள் சுவாசமே சற்று வினாடி நின்று தான் போனது…

அவனுக்கும் அவளுக்கும் ஆறடி இடைவெளி கூட கிடையாது… எந்த விழிகளை சந்திக்க வேண்டுமென்று துடித்தாளோ, அந்த விழிகள் சற்று தூரத்தில் எங்கோ பார்வையை பதித்திருந்தாலும் அதில் தன் பார்வையை தொலைத்துவிட்டிருந்தாள் அவள் கொஞ்சம் கூட மிச்சமில்லாது… சிதறாது… பதறாது… அகலாது… அக்கம் பக்கம் உணராது…

முகத்தில் எந்த சலனமும் இல்லாது குரல் வந்த திசையை பார்த்தவனை இங்கே அணுஅணுவாய் ரசித்தவள், அவனிடத்தில் உருகி கரைந்து காணாமல் போய்க்கொண்டும் இருந்தாள்…

ஒற்றை பார்வை, அதுவும், அவளை நோக்கிய பார்வை இல்லை… எனினும் அவள் மனம் அதில் மூழ்கி திளைப்பதும் என்ன விந்தையோ?...

அதை மற்றவர்கள் அறியாது போயினும் அவள் அறிந்து தான் இருந்தாள்… ஆம், அவன் அவளுள் வாழ்பவன் என்று… இன்று நேற்றல்ல… ஜென்ம ஜென்மமாய் தொடர்ந்து கொண்டிருக்கும் பந்தம் போல, ஒளி வீசிக்கொண்டிருக்கிறது அவளுக்குள்ளே அந்த காதல் கனல்… அவனை சேர வேண்டுமென்ற அழியாத அவளின் காதல் எரிதழல்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.