(Reading time: 19 - 38 minutes)

02. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ன்னடி… யாருகிட்ட பேசிட்டிருந்த?....”

சட்டென்று வந்துவிட்ட கேள்வியில் பேச வார்த்தை இல்லாமல் தவித்திருந்தாள் சரயூ….

“இதுக்குதாண்டீ உன்னை உன் அம்மா வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு சொன்னேன்… பசங்க ஆசைப்பட்டாங்கன்னு என்னை ஏமாத்தி உங்கம்மா வீட்டுக்கு போய் கூத்தடிச்சிட்டிருக்கிறீயா நீ?... இன்னொரு தடவை அம்மாவீட்டுக்கு போகணும்னு சொல்லிப்பாரு அப்ப தெரியும்டீ உனக்கு இந்த திலீப் பத்தி…” என கிட்டத்தட்ட போனில் மிரட்டினான் அவன்…

அவனின் மிரட்டல் அவளையும் கலங்க வைக்க, அதுவரை வார்த்தை வராமல் இருந்தவள், “இல்லங்க… நீங்க நினைக்குற மாதிரி எதுவும் இல்லங்க…” என்றாள் பதட்டத்துடன்….

“அப்போ யாருகிட்டடீ பேசிட்டிருந்த அதுவும் காலையிலேயே…” என அவன் இம்முறை கேட்டதும்

“ஜானவி….” என்றாள் பட்டென்று….

“ஓ… அந்த பொண்ணா?... அதை முதலிலேயே சொல்லுறதுக்கு என்ன?...” என்றான் அவன் சற்றே காட்டத்துடன்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "விடியலுக்கில்லை தூரம்.." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“இல்லங்க… வந்து…” என அவன் இழுக்க,

“சரி… நீ எப்போ வர்ற இங்க?... அம்மாவீட்டுக்குப் போய் ஒருநாள் ஆகிடுச்சு….” என அவன் அந்த ஒருநாளை ஒரு யுகம் போல சொல்ல, அவள் விரக்தி புன்னகை ஒன்றை சிந்தினாள்….

“இரண்டு நாள் இருந்துட்டு வான்னு நீங்க தான சொன்னீங்க….” என அவள் எடுத்துக்கொடுக்க,

“ஆமா… சொன்னேன் தான்… அதான் ஒருநாள் முடிஞ்சு போச்சே… இன்னும் ஒரு நாள் தான இருக்கு… அத நியாபக படுத்த தான் போன் பண்ணினேன்…. காலையிலேயே…” என்றான் அவனும் விடாமல்…

“நாளை மறுநாள் நாங்க கிளம்புறோம்ங்க…” என அவள் சொல்ல,

“என்ன விளையாடுறீயா?... அதெல்லாம் முடியாது… இன்னைக்கு சாயங்காலமே கிளம்புற வழியைப் பாரு…. அப்போதான் இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வந்து சேருவ…” என அவனும் சொல்லிவிட,

அவளுக்கு அவனை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை…

“இன்னும் ஒரு நாள் இருந்துட்டு வரேனே…” என எவ்வளவோ கெஞ்சினாள் தான்... ஹ்ம்ம்… ஹூம்… அவன் அதை கண்டு கொள்ளவே இல்லை…

“சாயங்காலம் கிளம்புற…. அவ்வளவுதான்…” என்றபடி போனை அவன் வைத்துவிட, இவளோ அந்த போனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சற்று நேரம்…

அந்த நேரம் அங்கு வந்த பூஜிதா அவளிடம், “என்னம்மா எதுக்கு போனையே பார்த்துட்டிருக்கீங்க?.. யாரு பேசினா இப்போ?....” எனக் கேட்க,

“உன் அப்பா….” என்றாள் சரயூ….

“அப்பாவா… ஜாலி… குடுங்கம்மா… நான் பேசறேன்…” என போனை சரயூவின் கைகளிடமிருந்து பூஜா வாங்க முற்பட, அவள் கொடுக்க மறுத்தாள்…

“எதுக்கும்மா தரமாட்டிக்குறீங்க… குடும்மா… நான் அப்பாக்கிட்ட பேசணும்….” என அவள் அடம்பிடிக்க,

“உன் அப்பா போனை வச்சி ரொம்ப நேரமாச்சு… அவர் வேலைக்கு கிளம்பி போயிட்டார்…” என சரயூ சொல்ல,

“பரவாயில்லை… போனை குடுங்கம்மா… நான் போன் பண்ணி அப்பாகிட்ட பேசிக்கிறேன்….”  என்றாள் பூஜாவும்…

“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை… நாம சாயங்காலமே ஊருக்கு கிளம்பிடுவோம்… ராத்திரி போய் உங்க அப்பாகிட்ட பேசு நீ….” என சரயூ கொஞ்சம் கோபத்துடன் சொல்ல,

அதுவரை சரயூவிடம் அடம்பிடித்தவள், “இன்னைக்கே கிளம்பணுமாம்மா?.... நேத்து காலையில தான வந்தோம்… இப்போ அதுக்குள்ள கிளம்ப சொல்லுறீங்க… ஏன்மா… நான் வரமாட்டேன்…” என அவள் சிணுங்க…

“அப்போ வராம இங்கேயே கிட நீ… உங்க அப்பா உன்னை வந்து கூப்பிட வருவார்ன்னு நினைச்சிட்டே இரு… நானும் பாப்பாவும் கிளம்புறோம்…” என சரயூ மகளின் முகம் பார்த்து சொல்ல,

“ஹ்ம்ம்… ஹூம்ம்… நானும் பாப்பாவும் வரமாட்டோம்… நீங்க வேணும்னா போங்க… அப்பா வருவாங்க எங்களை கூப்பிட… நாங்க இன்னும் இரண்டு நாள் பாட்டி வீட்டுல இருந்துட்டு தான் வருவோம்… அப்பா எங்களை ஒன் வீக் தங்க சொல்லி தான் அனுப்பி வச்சார்… நீங்க தான் அவசரம் அவசரமா எங்களை அங்க கூட்டிட்டு போக நினைக்குறீங்க…” என பூஜா விம்மவும்,

சரயூவிற்கு பட்டென்று கோபம் வந்தது…. “ஆமாடி… நான் தான் உன்னை கூட்டிட்டு போக நினைக்கிறேன்… போதுமா… அப்படியே நினைச்சிக்கோ…” என படபடவென்று பொரிய, பூஜா அழ ஆரம்பித்தாள்…

அவளை காணவில்லை என தேடி வாசந்தி, பூஜா அழுது கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, அவளிடம் ஓடி வந்தார்….

“அய்யோ… என் செல்லம் எதுக்கு அழுறா?... யாரு அடிச்சா என் தங்கத்தை?...” என அவர் அவளை சமாதானம் படுத்த,

“பாருங்க பாட்டி… இப்போ ஸ்கூல் லீவ் தான… அதான நாங்களும் இங்க வந்தோம்… அம்மா என்னடான்னா, எங்களை அங்க இன்னைக்கே கூட்டிட்டு போவேன்னு சொல்லுறாங்க… ஏன்னு கேட்டா அப்பா தான் வர சொன்னாங்கன்னு சொல்லுறாங்க…” என கண்ணை கசக்கிக்கொண்டே சொல்ல, அவள் பேத்தியையும் பார்த்துவிட்டு, மகளையும் பார்க்க, அவருக்கு புரிந்து போனது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.