(Reading time: 19 - 38 minutes)

ஹாய்… ஜானி… என்ன பஸ் சீக்கிரம் வந்துட்டா இன்னைக்கு… இவ்வளவு சீக்கிரமே வந்துட்ட?...”

“எருமை மாடே… உனக்கு எத்தனை தடவை சொல்லுறது… என் பேரை இப்படி கொலை பண்ணாதன்னு… அடங்கவே மாட்டியாடி நீ பிசாசே…” என தன்னுடன் வேலை பார்க்கும் தன் சக தோழி ஜனனியை திட்டினாள் ஜானவி….

“என்னடி பண்ணுறது?... உன் பேரோ ஜானவி, என் பேரோ ஜனனி… வேற எப்படி கூப்பிடுறது சொல்லு?.. ஜனனின்னு சொன்னாலும், ஜானவின்னு சொன்னாலும் ஓரே உச்சரிப்பு போலத்தான் இருக்கு….” என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு ஜனனி சொல்லிவிட்டு சிரிக்க,

“அப்போ இனிமே உன்னை நான் ஜன்னின்னு கூப்பிடுறேன் இருடி….” என்றாள் ஜானவி…

“அடிப்பாவி… சண்டாளி…. ஏண்டி… உனக்கு இந்த கொடூரம்?... நானும் வேலைக்கு சேர்ந்த புதுசுல இருந்து என்னை ஜன்னி ஜன்னின்னு கூப்பிட்டு என் இமேஜையே கெடுத்துட்டடீ பாவி….” என ஜனனி குமுற,

இப்போது சிரிப்பது ஜானவியின் முறையானது….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

“சிரிக்கிறீயா?.... உன்னை இப்போ என்ன பண்ணுறேன் பாரு?...” என ஜானவியின் மேல் ஜனனி பாய,

“ஏம்மா… இங்க என்ன நடக்குது?... சாப்பிடுறதுக்கு தான இந்த நேரம்… அத விட்டுட்டு இப்படி சண்டை போட்டுகிட்டு இருக்குறீங்க?...” என்ற குரலில் சண்டையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்த போது, அங்கே அவர்கள் இருவரும் வேலைப் பார்க்கும் கம்பெனியின் ஒரு உயர் அதிகாரி நின்று கொண்டிருந்தார்…

“இல்ல சார்…. சும்மாதான் பேசிட்டிருந்தோம்….” என ஜானவி சொல்ல, ஜனனி மூச்சு கூட விடவில்லை…

“பேசிட்டிருந்தீங்களா?... இதுதான் நீங்க பேசுற லட்சணமா?... பெல் அடிச்சதும், இப்போ அவரவர் இடத்துக்கு போயிடணும் சொல்லிட்டேன்…” என்ற மிரட்டலோடு அவர் நகரவும்,

“அப்பாடா…” என்றபடி சேரில் தொப்பென்று அமர்ந்தாள் ஜானவி…

“என்னடி கரடி இப்படி சொல்லிட்டு போறார்?...” என்று கேட்ட ஜனனியிடம்,

“நீ வேற கரடிக்கு இன்னைக்கு காலையிலேயே கடிக்குறதுக்கு யாரும் கிடைச்சிருக்க மாட்டாங்க… அதான் இங்க வந்து நம்மளை மிரட்டிட்டு போறாராம்… அதை விட்டு தள்ளு… அவர் கிடக்குறார்…” என்று அசால்ட்டாக சொல்ல,

“வா ஜானி… நாம சீக்கிரம் சாப்பிட்டு இடத்துக்கு போகலாம்… இல்ல அங்கயும் வந்து இந்த ஆள் எதாவது சொல்லிடப்போறார்…” என ஜனனி சற்றே கலக்கத்துடன் சொல்ல,

“அடியே… இதுக்கு ஏண்டி இவ்வளவு பீல்…” என்று இழுத்தவளிடம்,

“காலையிலேயே திட்டு வாங்கிட்டோமேடி… அதான்…” என்ற ஜனனியின் தோள் மீது கைவைத்தபடி,

“உனக்கொரு விஷயம் தெரியுமா?... காலையிலேயே கரடி முகத்துல முழிச்சா அதிர்ஷ்டமாம்… அப்போ நமக்கு இன்னைக்கு என்னது?...” என ஜானவி கேட்க, “அதிர்ஷ்டம் தான்….” என்றாள் ஜனனி சிரித்துக்கொண்டே…

“ஹ்ம்ம்… அது….” என்றபடி தோழியின் சிரிப்பிலும் கலந்து கொண்டாள் ஜானவி…

“அர்னவ்…. அர்னவ்…..” என்ற சத்தம் இயந்திரத்தின் சத்தத்தையும் மீறி அவன் காதுகளில் விழ,

“குட் மார்னிங்க் சார்….” என்றபடி புன்னகையுடன் வந்தான் அர்னவ்…

“குட் மார்னிங்க் அர்னவ்…. வேலை எப்படி போயிட்டிருக்கு… இன்னைக்கு வேலை முடிஞ்சிடும் தான….” என தனக்கு மேலே இருக்கும் ஓர் உயர் அதிகாரி கேட்க,

“அதெப்படி சார் முடியும்?... இப்போதான் பேஸ்மெண்ட்டே போட ஆரம்பிச்சிருக்காங்க…. இன்னும் அந்த வேலை முழுமையா முடிய இரண்டு நாளாவது ஆகுமே….” என்றான் அர்னவ்…

“எந்த காலத்துல அர்னவ் இருக்குறீங்க?... சும்மா இரண்டு ஜல்லி, கல், மண், சிமெண்ட், செங்கல், தண்ணீர், கம்பி வச்சி போட்டா வேலை முடிஞ்சது… அத விட்டுட்டு நீங்க என்னாடான்னா?...” என அவர் சிரிக்க,

“இன்னும் பத்து வருஷம் கழிச்சு இந்த இடத்துக்கு நாம வந்தாலும், நான் கட்டின இந்த இடம் இங்க இருக்கும்… ஆனா நீங்க சொல்லுற மாதிரி நான் பில்டிங்க் கட்டினா அடுத்த மாசமே இடிஞ்சு விழுந்துடும்… ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யுறேன்… வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை பார்க்கணும்னு நினைக்குறேன் சார்…” என அவன் சொன்னதும் அவரின் சிரிப்பு மேலும் பெரிதானது…

“இள ரத்தம் இல்லையா அதான்… இப்படி இருக்கிறீங்க… பட் இங்க இதெல்லாம் ஓரம் கட்டி தான் வைக்கணும்… அனுசரிச்சு போக தெரியணும் அர்னவ்… இல்லன்னா கடைசி வரைக்கும் இப்படி சைட் இன்ஜினியரா மாசம் 15,000 சம்பளம் மட்டும் தான் கிடைக்கும், அதுவும் வேலை இருந்தா மட்டும்… வேலையோட சூட்சமத்தை புரிஞ்சிகிட்டு அதுக்கு தக்கபடி நடந்துக்க பழகுங்க அர்னவ்… அப்பதான் நீங்களும் இந்த மாச சம்பளத்துல இருந்து வெளியே வந்து, நீங்களே சொந்தமா ஒரு பில்டிங்கிற்கு ப்ளான் போட்டு சம்பாதிக்க முடியும்… புரிஞ்சி நடந்துக்கோங்க…” என அவனின் தோள் மீது கைவைத்து அவர் சொல்ல,

அவரின் கையை பிடித்து மெல்ல கீழிறக்கியவன், “மன்னிச்சிடுங்க சார்… காலம் பூரா நான் சைட் இன்ஜினியரா மட்டும் வேலை பார்த்தாலும் பரவாயில்லை… நீங்க சொல்லுற பைலை நான் மூவ் பண்ண மாட்டேன்… சம்பளத்துக்கு மேல நீங்க கொடுக்குற எதுவும் வேண்டாம்… இப்போ கையில இருக்குற வேலையை முடிச்சு கொடுத்துட்டு ரிசைன் பணணிடுவேன் சார்… தேங்க்ஸ்…” என்றவன், அதற்கு மேலும் அங்கே நிற்கவில்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.