(Reading time: 16 - 32 minutes)

பின்னே, காலையில் “ஈஸ்வரா…” என தெரியாமல் சொல்லிவிட்டு பயந்து கொண்டே திரும்பிய தைஜூ முதலில் பார்த்தது வாசலைத்தான்… ஜெய் பூங்காவின் வாசலிலே கால் வைக்கவும், சதியின் புன்னகையை கண்ட தைஜூவிற்கு அப்போது தான் நிம்மதியாகவே இருந்தது… “நல்ல வேளை… தப்பிச்சோம்…” என…. ஆனால் அதை நினைவு வைத்து சதி இப்போது அவளிடம் கேட்க, நெளிந்தாள் தைஜூ…

“ஹேய்… அது எதோ தெரியாம….” என தைஜூ இழுக்க,

“ஹைய்யோ லூசு… நானே இன்னைக்கு என் ஈஸ்வரனை ரொம்ப பக்கத்துல பார்த்துட்டேண்டீ… எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?... சொல்ல தெரியலைடி… ஆனா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்…” என்றவள், தைஜூவின் கைகளைப் பிடித்துக்கொண்டு சுற்ற,

“ஹேய்… இது பார்க்…” என்ற தைஜூவின் வார்த்தைகள் அவள் காதுகளிலேயே விழவில்லை…

சுற்றிக்கொண்டே இருந்தவள், ஒரு கட்டத்தில் சிரித்துக்கொண்டே தலைசுற்றியவளாய் அமர,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

“ஏண்டி… இது பப்ளிக் ப்ளேஸ்டீ… இங்க இப்படி என் கைப்பிடிச்சு சுத்துற?... யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க?..” என தைஜூ அக்கம் பக்கம் பார்த்துவிட்டு யாரும் பார்க்கவில்லை என்ற நிம்மதியோடு அவளிடம் திரும்ப,

‘யார் இருந்தா என்ன?... இது பார்க் தான?... இங்க சின்னப்பிள்ளைங்க தான் விளையாடுவாங்களா?... நம்மளை மாதிரி கொஞ்சம் வளர்ந்த பிள்ளைங்க விளையாட மாட்டாங்களா என்ன?...” என எதிர்கேள்வி கேட்ட சதியை ஒருநிமிடம் நிதானமாக தலை முதல் கால் வரை பார்த்தாள் தைஜூ…

வட்ட நீல நிற பொட்டு அவளின் பிறை நெற்றியோடு ஒட்டி மெருகேற்ற, அதற்கும் மேல் சின்ன விபூதி கீற்று… வெண்ணிற குளத்தில், நீந்தி நீந்தி விளையாடிக்கொண்டிருக்கும் அவளது விழி மீன்கள்… நீ அழகா நான் அழகா என்று அவளின் மூக்கோடு போட்டி போட்டு கொண்டிருக்கும் சிறு ஒற்றைக்கல் பூ மூக்குத்தி… இரண்டு மூன்றாம் பிறை நிலவை எடுத்து ஒட்டி வைத்தது போன்ற அவளது அதரங்கள்… எந்த நேரமும் தன் ஸ்பரிசத்தால் பட்டுப்போன்ற அவளின் கன்னம் தொடும் முடி… அளவான உடல் வாகு… கொடி இடை தட்டி முழங்கால்களை தாண்டி நிற்கும் நீண்ட கார்குழல்… வெண்மேக நிற சுடிதாரில் அந்த மேகமே பெண்ணாய் தன் முன் நிற்கிறதோ என்று தைஜூ எண்ணும் அளவிற்கு இருந்தாள் சதி…

“என்னடி எதுக்கு அப்படி பார்க்குற?...”

“இல்ல அப்படி ஒரு அழகா இருக்குற… நானே உன்னை சைட் அடிக்குறேன்… ஆனா ஏன் ஜெய் மட்டும் இப்படி கண்டும் காணாம இருக்குறார்?... அதை தான் யோசிக்கிறேன்…” என்ற தைஜூவிடத்தில்,

“ஹ்ம்ம்… அதை விடு… அவர் இன்னைக்கு நேத்தா இப்படி பண்ணுறார்… ஒரு வருஷமா நடக்குறது தான… என்ன ஒன்னு ரொம்ப நாளைக்கு அப்புறம், இன்னைக்குத்தான் அவரோட கண்களை ரொம்ப பக்கத்துல பார்த்தேன்… அது போதும்… இன்னும் பல மாசம் தாங்கும்…” என்று சொல்லி சிரித்தவளை விநோதமாக பார்த்த தைஜூ,

“எப்படிடீ, இப்படி பைத்தியமா இருக்குற அவர் மேல?... அவர் ஏன் அவ்வளவு ஸ்பெஷல் உனக்கு?...” எனக் கேட்டதும்,

“அதுவா?... உனக்கு இஷான் எப்படி ஸ்பெஷலோ… அதுபோல எனக்கு என்னவர் ஸ்பெஷல்…” என்றதும்,

“ஹேய்… சீ… போடி…” என்றவள் திரும்பி அமர்ந்து கொண்டு,

“ஹ்ம்ம்… நீ நினைக்குறமாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை… ஜெய் பின்னாடியே வருவார்… அப்போ பார்த்தது தான்… வேற ஒன்னும் இல்லை… ஸ்பெஷல் எல்லாம் இல்ல…” என சொல்லிக்கொண்டே போனவளின் முன் வந்து நின்ற சதி,

“ஓ… எதுவும் இல்லை…” என்ற பாவனையில் தைஜூவிடம் கேட்க,

“போடி…. சும்மா… என்னையே கேள்வி கேட்டுகிட்டு…” என்றாள் தைஜூ வெட்கம் மிக…

“அடடா… என்ன வெட்கம்… என்ன வெட்கம்… சே… இப்போ பார்த்து இஷான் இல்லையே… அய்யோ… அழகான வெட்கத்தை மிஸ் பண்ணிட்டாரே இப்படி…” என்று சதி கிண்டல் செய்ய,

“ஹேய்… அடி வாங்காதடீ… சும்மா இரு…” என்ற தைஜூவிற்கு அப்போதும் வெட்கம் நின்றபாடில்லை…

“இவ்வளவு ஆசையையும் மனசில வச்சிகிட்டுதான் அவர் பார்க்கும்போதெல்லாம் முறைச்சிட்டு இருந்தீயா நீ?.. இதுல திட்டு வேற அவருக்கு?.. அடியே… இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல?...” என சதி அவளை மிரட்ட

“இதோடா… இப்பவே மிரட்ட ஆரம்பிச்சிட்ட போல… அதுசரி… சகவாசம் போலும்…” என்று சொல்லி சிரிக்க,

“காமெடி… நாளைக்கு சிரிக்குறேன்… என்ன?...” என சிரிக்காமல் பதில் சொன்ன சதியை அடித்த தைஜூ,

“அப்படியே வச்ச கண்ணு வாங்காம பசை போட்டு ஒட்டின மாதிரி ஜெய்யை மட்டும் தான நீ பார்த்துட்டிருந்த… அப்புறம் எப்படிடீ என்னை கவனிச்ச?...” என ஆச்சரியத்தோடு தைஜூ கேட்டதும்,  

“ஏன்னா, நான் என் சிவனுடைய சரிபாதி ஆச்சே… அவரோட நெற்றிக்கண் எனக்கும் உண்டே…” என புன்னகையுடன் சதி சொன்னதும்,

“இவ்வளவு நம்பிக்கையோட நீ இருக்குற சரி… ஆனா அவர் உன்னை திரும்பி கூட பார்க்கலையே சதி… ஒரு பேச்சுக்குத்தான் கேட்குறேன், ஒருவேளை உன்னால அவரை சேர முடியலைன்னா என்ன செய்வ சதி?...” என தைஜூ அமைதியாக இழுத்து இழுத்து கேட்டதும்,

இருகைகளையும் குறுக்கே கட்டிக்கொண்டு, “என் மனசுக்குள்ள எரிஞ்சிட்டிருக்குற காதல் நெருப்பில் நான் என்னையே எரிச்சிப்பேன்… அவ்வளவுதான்…” என அவள் இங்கே சொல்லிமுடித்த தருணம்,

“அது எந்த ஜென்மத்திலேயும் நடக்காது… நான் உயிரோட இருக்குற வரை நீ நினைக்குறது நடக்கவே நடக்காது…” என்று உருமினான் ஜெய்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.