(Reading time: 13 - 26 minutes)

08. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

கோடி முறை நினைத்து நினைத்து பார்த்தாலும் சில விஷயங்கள் மனதிற்கு அலுத்துப்போவதேயில்லை எப்போதும்… அதுபோல் தான் சரயூவிற்கும் தன் கணவன் திலீப் தனக்கு கொடுத்த இனிமையான தருணங்களும்…

போனையும் நினைவுகளையும் திரும்பி திரும்பி புரட்டி பார்த்தவளுக்கு ஏனோ மனதிற்கு இதமாகவும், சில்லென்ற தென்றல் தீண்டிச்சென்ற உணர்வும் கிட்டியது…

நினைவுகளோடு மட்டும் வாழ முடிந்தால் வாழ்ந்திடலாம் தான்… எனினும் நடைமுறை என்று ஒன்று இருக்கிறதே... அதன் வாயிலாக உணரக் கூடிய உண்மையும் உண்டு தானே…

அது சரயூவிற்கு அவளது தற்போதைய நிலையை உரைக்க, அவள் உதடுகளில் பரவியிருந்த அந்த அழகான சிரிப்பு அப்படியே விரக்தியை சிந்தியது…

கணவனின் அன்பான பேச்சும், கனிவும், குழைவும் எல்லாம் இருந்த இடம் இப்போது தெரியவில்லைதான்… எனினும் அவனது காதல் மறையவில்லை என்றே அவள் மனம் இப்போதும் அவளிடத்தில் கூறுகிறது ஒரு சில நேரங்களில்…

ஆம்… அவனின் அன்பு வெளிப்படும் விதம் வேண்டுமானால் வேறு விதமாக இருக்கலாம்… ஆனால் அவள் மேல் அவனுக்கு அன்பு என்றுமே உண்டு என்ற நம்பிக்கையை தன் மனதில் இன்றும் வைத்திருக்கிறாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

இந்த நம்பிக்கை மட்டுமே இப்போது அவளுக்கு இருக்கும் ஒரே பிடிப்பு மற்றும் ஆதாரம்… அந்த பிடிப்பை இறுக்கமாக பற்றிக்கொண்டாள் அவள்…

கடவுளே கதி என்று எந்த நம்பிக்கையில் சரணடைகிறோமோ அதே நம்பிக்கை மனதில் நாம் கொண்டுள்ள விஷயத்திலும் இருந்தால் நிச்சயம் ஒருநாள் அது நம்மை கரையேற்றும்…

சரயூவும் அந்த நம்பிக்கையில் மனதினை தேற்றிக்கொண்டு மெல்ல எழுந்தாள்…

“அம்மா… காய்ச்சல் போயிடுச்சாம்மா?..” என தன் முன் முகமெங்கும் கவலையுடன் நின்றிருந்த பூஜாவை பார்த்ததும் அவளின் முன் மண்டியிட்டவள்,

அவளின் முகம் பற்றி, “அம்மாக்கு ஒன்னும் இல்லடா… நீ சாப்பிட்டியா?...” எனக் கேட்க

“மாமா… ஊட்டி விட்டாங்க…” என்றாள் அவள்…

“ஓ… குட்டிக்கு மாமா ஊட்டிவிட்டானா?... குட் குட்….” என அவள் சிரிக்க, தாயின் சிரிப்பு அந்த பிஞ்சின் முகத்திலும் பிரதிபலித்தது…

“என் பூஜாகுட்டி இப்போதான் அழகா இருக்குறா…” என்றவள் மகளின் நெற்றி மீது முட்ட, அவளும் சரயூவின் கழுத்தினை கட்டிக்கொண்டாள்…

மகளை தூக்க முயற்சித்த போது, “வேண்டாம்மா… நான் நடக்குறேன்… நீ வா…” என தாயின் கைப்பிடித்தபடி ஹாலுக்கு அழைத்துச் சென்றாள் பூஜா…

“பூஜா, பாப்பா எங்கடா?..”

“மாமா கூட விளையாடுறாம்மா,,,”

“நீ விளையாடலையா?...”

“விளையாண்டேன்… எனக்கு உங்களை பார்க்கணும்போல இருந்துச்சு… அப்பவே வந்தேன்… நீங்க தூங்கிட்டிருந்தீங்க… அதான் போயிட்டு இப்போ மறுபடியும் வந்தேன்..”

“சாரிடா.. அம்மா கொஞ்சம் தூங்கிட்டேன்… நீ எழுப்பியிருக்கலாம்ல…”

“நீயே பாவம்… உடம்பு சரியில்லாம தூங்கிட்டிருந்த.. அதான்ம்மா எழுப்பலை… உனக்கு இப்போ சரி ஆயிட்டுல்லம்மா…” என தன் நெற்றியின் மீது கைவைத்து பார்த்த மகளின் கைகளில் முத்தம் கொடுத்தவள்,

அவளின் தலையினை கோதிவிட்டு சிரித்துக்கொண்டிருக்கும்போது,

“மாமா… என்னை பிடி…. பார்ப்போம்…” என ஓடிவந்து கொண்டிருந்தாள் பிரேமிதா…

“இப்போ நான் என் பிரேமி குட்டியை பிடிக்க போறேனே…” என அர்னவும் அவளின் பின்னாடியே வர,

“மிதா… இங்க வா… என் கையை பிடிச்சிக்கோ… நாம மாமா கிட்ட மாட்டாம ஓடிடலாம்…” என பூஜா வேகமாய் பிரேமிதாவின் அருகிலே செல்ல,

“அக்கா… வா… வா…” என தமக்கையின் கைபிடித்து அங்கிருந்து ஒடினாள் அவள்…

“ஹேய்… இதோ வரேன் பாரு…” என அர்னவும் மெதுவாக ஓடிவர, அவர்கள் இருவரின் சிரிப்புச்சத்தமும் அவனின் முன்னே சென்று கொண்டிருந்தது…

“ஏண்டா நீ என்ன சின்னப்பிள்ளையா?. என் பிள்ளையோட விளையாடிட்டிருக்குற?...” என ஹாலில் அமர்ந்திருந்த சரயூவின் குரலில் நின்றவன், அவளிடம் வந்தான்…

“இதோடா… அம்மாகிட்ட வந்து கேளுங்க… நானும் சின்னப்பிள்ளைன்னு தான் சொல்லுவாங்க…”

“எருமைமாடு மாதிரி வளர்ந்திருக்குற… இதுல நீ சின்னபிள்ளையா?...”

“கண்டிப்பா சிஸ்… நான் சின்னப்பிள்ளையா இருக்குறதால தான் அம்மா இங்க என்னை குட்டீஸோட விளையாட அனுப்பி வைச்சிருக்காங்க…”

“உனக்கு நினைப்புதாண்டா….” என சொல்லி சிரித்தவள், “ஜானு போன் பண்ணினாளாடா?...” எனக் கேட்க

“ஹ்ம்ம்… பண்ணினா…” என்றான் அவன்…

“என்னடா சொன்னா?..”

“சும்மாதான் பண்ணினா… உங்களை கேட்டா… தூங்கிட்டிருக்கீங்கன்னு சொன்னேன்… அவ்வளவுதான்…”

“பாரு அவளுக்கு கூட அக்கறை இருக்கு… உனக்கு இருக்கா?... எப்படி இருக்கு சிஸ்.. பரவாயில்லையா இப்போன்னு ஒரு வார்த்தை கேட்டீயாடா நீ?...”

“நீங்க நல்லா இருக்கப்போய் தான் இப்படி எங்கிட்ட வாய் பேசுறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் சிஸ்…” என அவன் சொல்ல, அவள் சிரித்தாள் சட்டென…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.