(Reading time: 18 - 36 minutes)

10. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

முகம் தூக்கி வைத்துக்கொண்ட கணவனை அரும்பாடுபட்டு சமாதானம் செய்து, சாயங்காலம் அர்னவினையும் ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் சரயூ நுழைந்த போது,

“மருமகளே…” என்ற குரலில் திரும்பியவள்,

“வாங்க மாமா… பிரயாணம் எல்லாம் நல்லா இருந்துச்சா?...” என்று கேட்டுக்கொண்டே திலீப்பின் தந்தை சண்முகத்தின் கைகளில் வைத்திருந்த பையை வாங்கினாள் அவள்…

“எல்லாம் நல்லபடியா இருந்துச்சும்மா… ஆமா திலீப் எங்கம்மா?...”

“மாமா அவர் வெளியே போயிருக்குறார்…”

“இந்நேரத்துல எங்கம்மா போயிருக்குறான்?..”

“அர்னவ் வந்திருந்தான் நேத்து நைட் எங்கூட… இப்பவே கிளம்புறேன்னு சொன்னான்… அதான் கொண்டு விட போயிருக்குறார் மாமா…”

“அடடா… தம்பி வந்திருந்தானா?... கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா பார்த்திருப்பேனே…” என வருத்தப்பட்டவர்,

“நேத்து ராத்திரி தான் வந்தான்னு சொல்லுற… கூட ஒருவாரம் தங்கிட்டு போக சொல்லியிருக்கலாமேம்மா… அவனும் இங்க வந்து போயி எவ்வளவு நாளாச்சு…” என சொல்ல,

“நானும் சொல்லிப்பார்த்தேன் மாமா… அவன் கேட்கலை… அதை விடுங்க… சுகன்யா எப்படி இருக்குறா?... அவ வீட்டுல எல்லாரும் எப்படி இருக்குறாங்க மாமா?..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

“எல்லாரும் நல்லா இருக்குறாங்கம்மா… இன்னைக்கு கூட போகவேண்டாம்னு தான் மாப்பிள்ளை சொன்னார்… நான் தான் இதுக்குமேல அங்க இருக்குறது சரி இல்லன்னு வந்துட்டேன்… ஆயிரம் தான் பொண்ணைப் பெத்திருந்தாலும், அவளை கட்டி கொடுத்ததுக்கு அப்புறம் ஒரு அடி தள்ளி நிக்குறது தானம்மா அவளுக்கும் நல்லது… அவ இங்க வந்து போறது வேற… ஆனா நான் அங்க போயி மாசக்கணக்கா தங்கி இருக்குறது அவளுக்கும் நல்லதில்லை… நம்ம குடும்பத்துக்கும் கௌரவமில்லை… ஏதோ இரண்டு, மூணு நாள் அவ கூட இருந்தாச்சு… அது போதும்… அதான் கிளம்பி வந்துட்டேன்ம்மா…”

“நீங்க சொல்லுறதும் சரிதான் மாமா…”

“நீயும் ஊருக்கு போக போற நேரத்துல நான் கிளம்பி சுகன்யா வீட்டுக்கு போனது திலீப்க்கு கொஞ்சம் வருத்தம் தான்.. கடையை ஒரே ஆளா கவனிச்சு, வீட்டிலேயும் தனியா இருந்துருப்பான்…” என்றவர் சற்றே யோசித்தவராக,

“ஏன்ம்மா… நீ அம்மா வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு சீக்கிரம் வந்துட்ட… கூட கொஞ்ச நாள் இருந்துட்டு வரவேண்டியது தானம்மா… நீயும் இல்லாத நேரத்துல நானும் இல்லன்னா திலீப் கஷ்டப்படுவான்னு தான் நான் உடனே வந்தேன் இங்க… ஆனா இங்க வந்து பார்த்தா தான் தெரியுது நீயும் இங்க உடனே வந்துட்டன்னு…” என்றார் கொஞ்சம் கவலையுடன்….

“அதனால என்ன மாமா… இன்னொரு தடவை லீவுக்கு போனா போச்சு…” என சிரித்தவள்,

“நீங்க போய் குளிச்சிட்டு வாங்க மாமா.. நான் சாப்பாடு எடுத்து வைக்குறேன்….” என்றாள் அவரிடம்…

“சரிம்மா… நான் போய் குளிச்சிட்டு வரேன்… திலீப் வரட்டும்… எல்லாரும் ஒன்னாவே சாப்பிடலாம்…” என்றபடி அவர் செல்ல, சரயூவும் கிட்சனுக்குள் நுழைந்தாள்…

குளித்துமுடித்துவிட்டு வந்தவர், தூங்கி கொண்டிருந்த பேத்திகளின் நெற்றியில் முத்தமிட்டு,

“அப்பவே தூங்கிட்டாங்களாம்மா?...” என மருமகளிடம் வினவ,

“ஆமா மாமா… முழிச்சிட்டிருந்தா அர்னவை ஊருக்கு போக விட மாட்டாங்க… அழுது ஆர்ப்பாட்டம் செய்வாங்க… அதான் அப்பவே தூங்க வைச்சிட்டேன் இன்னைக்கு…” என்றாள் அவளும்…

“ஓ… சரிம்மா… திலீப் வந்துட்டானா?..”

“இல்ல மாமா…”

“இன்னுமா வரலை?...” என்றவர் யோசித்தபடியே,

“ஒரு போனை போட்டு கேளும்மா.. எங்க இருக்குறான்னு…” என சொல்ல,

“சரி மாமா…” என்றபடியே அவளும் கணவனுக்கு போன் செய்தாள்…

“சொல்லு சரயூ…” என முதல் ரிங்கிலேயே போனையும் எடுத்து திலீப் பேச,

“எங்க இருக்குறீங்க?... வீட்டுக்கு வாங்க சீக்கிரம்…” என்றாள் அவசரமாய்…

“ஏண்டி.. தனியா இருக்க பயமா இருக்கா?...” எனக் கேட்டவன் அவள் பதில் சொல்லும் முன்னமே,

“இரு இரு வந்துடுறேன்… கடை விஷயமா ஒருத்தர்கிட்ட பேசிட்டிருந்தேன்… கொஞ்சம் லேட் ஆகிட்டு…” என்றான்…

“சரிங்க…… மாமா ஊரில இருந்து வந்து ரொம்ப நேரமாச்சு… நீங்க சீக்கிரம் வாங்க..”

“அப்பா வந்துட்டாரா?... எப்போ வந்தார்?...”

“ஒரு மணி நேரம் இருக்கும்…”

“ஓ… சரி.. அவரை சாப்பிட சொல்லு… நான் வந்துடுறேன்…”

“இல்ல நீங்க வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம்னு மாமா வெயிட் பண்ணிட்டிருக்காங்க…”

“ஓ… வரேன்…” என்று அழைப்பை கட் செய்தவன் அடுத்த கொஞ்ச நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட்டான்…

“நேரங்கெட்ட நேரத்துல சாப்பிட்டா உங்க உடம்புக்கு ஒத்துக்குமா?...” என தகப்பனைப் பார்த்து கேட்டவன், அவர் அடுத்து பேச வாயெடுக்கும் முன்,

“நீங்க சீக்கிரம் சாப்பிட்டு தூங்க வேண்டியது தான… நான் வந்தா சாப்பிட மாட்டேனா?... எதுக்கு இப்படி உடம்பை கெடுத்துக்குறீங்க?...” என கொஞ்சம் கோபமாக பேசியவன், சரயூவிடம் தனக்கும் சாப்பாடு எடுத்து வைக்க சொல்ல, அவளும் பரிமாறினாள் இருவருக்கும்…

“இனி இப்படி வெயிட் பண்ணாதீங்க…” என்றவன் மாடி அறைக்கு செல்லும் முன், “சுகன்யா எப்படி இருக்குறா?...” எனக் கேட்டான்…

“நல்லா இருக்குறாப்பா… உன்னைக்கூட ரொம்ப விசாரிச்சா…” என சண்முகம் சொன்னதும்,

“ஓ… சரி…” என்றபடி தனதறைக்கு சென்றுவிட்டான் திலீப்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.