(Reading time: 11 - 22 minutes)

'சார்... இந்த ஆளை பார்த்தா சந்தேகமா இருக்கு... இந்த கார் யாருதுன்னு தெரியலை... இதையே சுத்தி சுத்தி வந்திட்டு இருந்தான். கேட்டா முறைக்கிறான்...' அவர்கள் சொல்லிக்கொண்டிருக்க அலட்சியமான பார்வையுடன் கார் மீது சாய்ந்து நின்றிருந்தான் அவன்.

'யோவ்... யாருய்யா... நீ இங்கே என்ன பண்றே???' என்றபடியே அவன் அருகில் வந்தார் இன்ஸ்பெக்டர். வாயிலிருந்த சூயிங் கம்மை மென்றபடியே நின்றவனின் பார்வை அவரை ஊடுருவ, இன்ஸ்பெக்டரின் தொனியில் ஏனோ சட்டென ஒரு மாற்றம்.

'வண்டி உங்களோடதா சார்... ஆர்.சி புக், லைசென்ஸ் எல்லாம் கொஞ்சம் பார்க்கலாமா???'

சில நொடிகள் அவரை மௌனமாக பார்த்தவன் 'எந்த லைசென்ஸ் வேணும்...' என்றான் நிதானமாக.

அவர் கொஞ்சம் புரியாமல் பார்க்க அவனது தனது உரிமங்களையும், அடையாள அட்டையையும் எடுத்து நீட்டினான்.

அடுத்த நிமிடம்...  'சார்... 'அவர் குரலில் தொற்றிக்கொண்டது மரியாதை.

அந்த கார்டுகளை அவனிடம் நீட்டியபடியே 'சார்... ரொம்ப சாரி சார்... தெரியலை எங்களுக்கு... மன்னிச்சுக்கங்க.. '

ஏய்.. அறிவிருக்காயா உங்களுக்கு... சார போய் நிறுத்தி வெச்சு கேள்வி கேக்கறீங்க... நீங்க... நீங்க... சார்...  கிளம்புங்க சார்... நீங்க ...கிளம்புங்க...' வார்த்தைக்கு வார்த்தை 'சார்..' இணைத்துக்கொண்டு அவர் பேச...

'தேங்க்யூ...' என்றபடி காரில் ஏறி அமர்ந்தவன் 'இனிமேலாவது ட்ரெஸ்சை வெச்சு ஆளை எடை போடாதீங்க...' சொல்லிவிட்டு காரை கிளப்பிக்கொண்டு பறந்தான் அவன்.

சென்னை பெசன்ட் நகரில் இருந்தது அவனது வீடு!!!

வீடு வந்து சேரும் போது நேரம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லாரும் உறங்கிக்கொண்டிருந்தனர். தன்னிடம் இருக்கும் சாவியால் கதவை  திறந்துக்கொண்டு உள்ளே வந்தான் அவன்.

அவனது அறை மாடியில். அவன் எப்போது வருகிறான். எப்போது போகிறான் என்பது வீட்டில் இருப்பவர்களுக்கு பல நேரம் தெரியாது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலும் இவன் அதிக கவனம் எடுத்துக்கொள்வதில்லை. இவனது உலகம் தனி உலகம்.

நேரம் காலை ஒன்பதரை!!!!

'அம்மா...' என்றபடியே வந்தான் அவன்!!! அவன் ஷிவா!!! மேல் அறையில் இருப்பவனின் தம்பி.

'அண்ணா வந்திருக்காரா என்ன???'

'அப்படிதான் நினைக்கிறேன்டா. அவன் ரூம்லே லைட் எரிஞ்சது. அப்படியே மறுபடியும் கிளம்பிட போறான். கீழே வந்தா ஒரு வாய் சாப்பிட்டு போக சொல்லுடா...' என்றார் சுமித்ரா.

'நானும் ஆபீஸ் கிளம்பலை. அண்ணனை பார்த்திட்டு போறேன். பார்த்தே கிட்டத்தட்ட பத்து நாள் ஆச்சு...'

'அவன் வந்திருக்கானா??? எப்போ வந்தான்???' கேட்டபடியே வந்தார் அப்பா!!!

இவர்கள் பேசிக்கொண்டிருக்க அங்கே இருந்த ஒரு பூ ஜாடியில் ரோஜாப்பூக்களை முனைப்புடன் அடுக்கிக்கொண்டிருந்தாள் அவள்!!! ரஞ்சனி!!!! அவள் ஷிவாவின் மனைவி.

அதை அவள் ஹாலிலே கூட வைத்திருந்திருக்கலாம்!!! செய்யவில்லை!!! அதை எடுத்து சென்று சாப்பாட்டு மேஜையின் நடுவில் வைத்தாள்.

'ஹேய்.... ஹேய்... ' ஓடி வந்தான் ஷிவா. 'என்ன பண்றே நீ... அண்ணனுக்கு ரோஜாப்பூ பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமில்ல. இதை ஏன் இங்கே கொண்டு வந்து வைக்கிறே??? எடுத்திட்டு..போ...' பேசாமல் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் ரஞ்சனி.

அவள் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்து சில மாதங்கள் ஆகின்றன. வந்த புதிதில் கணவனிடம் கேட்டாள் அவள்.

'நிஜமாவே உங்க அண்ணனுக்கு என்னதான் ப்ராப்ளம்??? ஏதாவது லவ் ஃபெய்லியரா???'

சிரித்தான் ஷிவா 'நீ வேறே... எங்க அண்ணனாவது லவ் பண்றதாவது. வாய்ப்பே இல்லை. இது வேறே கதை...'

'என்ன கதை???' அவள் கேட்க அப்போது எல்லாவற்றையும் அவளுக்கு விளக்கி இருக்கிறான் ஷிவா..'

இன்று வேண்டுமென்றே அவள் இதை இங்கே கொண்டு வைத்திருக்கிறாள் என்று தான் தோன்றியது ஷிவாவுக்கு.

'உன்னைத்தான் சொல்றேன்...... எடு...' ஷிவாவின் குரலில் கொதிப்பேற...

'இந்த வீட்டிலே நான் நினைச்ச இடத்திலே ஒரு பூவை கூட வைக்க முடியாது...' அவள் சொல்லிக்கொண்டிருந்த அந்த நொடியில் விறுவிறுவென படி இறங்கி வந்தான் அவன்.

நேற்றிரவு ஈ.சி.ஆர் ரோட்டில் அலைந்துக்கொண்டிருந்தவனாக இல்லை அவன்!!! திடீரென அவனது தோற்றத்தில் எங்கிருந்து வந்து ஒட்டிக்கொண்டதாம் அப்படி ஒரு கம்பீரம்???

பளிசென்ற அந்த யூனிஃபார்ம், நன்றாக ஷேவ் செய்ய்பட்ட முகத்தில் நேர்த்தியாக இருந்த அந்த மீசை, காற்றில் ஆடிக்கொண்டிருந்த கேசம், பளபளக்கும் ஷூக்கள் என எல்லாமே அவனது கம்பீரத்தை இன்னமும் கூட்டுவதை போலவே தோன்றியது ஷிவாவுக்கு.

அவன் வந்து நின்றதும் எல்லார் பேச்சும் சட்டென நின்று போனது. அவனது பார்வை எல்லாரையும் ஒரு முறை உரசி செல்ல, ஒரு அன்பான புன்னகையுடன் பொதுவாக எல்லாருக்குமாக ஒரு முறை  தலை அசைத்து வீட்டு அவன் அங்கிருந்து நகர எத்தனிக்க...

'சாப்பிட்டு போ பா...' அப்பாவின் குரல் அவனை தடுத்தது.

'இல்லப்பா டைம் ஆச்சு. நான் கிளம்பறேன்..' அவன் நகரப்போக..

'டேய்... சாப்பிட்டுட்டு போடா ...' ஒரு ஆணையாகவே வந்தது சுமித்ராவின் குரல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.