15. புத்தம் புது காலை - மீரா ராம்

அர்னவிடம் பேச தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தவள், ஒருகட்டத்தில் பொறுமையையும் இழந்துவிட்டாள்…
“என்னாச்சு இவருக்கு?... படிக்கலாம்னு சொல்லிட்டு எங்க போனார்?... போன் அடிச்சா எடுக்குறாரா பாரு… பக்கி…. வரட்டும்… பேசிக்கிறேன்…”
பல அர்ச்சனையை செய்துகொண்டே மீண்டும் போன் செய்ய இம்முறையும் ரிங்க் போய்க்கொண்டே இருந்தே தவிர அவன் எடுத்தபாடில்லை…
“அய்யோ கார்த்தி… என்ன பண்ணுறீங்க?...” என புலம்பியபடி இருந்தவள், மணியை பார்த்தாள்… அது 5.30 என காட்டியது…
“5 மணிக்கு போன் பண்ண ஆரம்பிச்சேன்… அரை மணி நேரம் ஆச்சு… இன்னும் போன் எடுக்கலை… இனி இன்னைக்கு படிச்ச மாதிரி தான்…” என முணுமுணுத்துக்கொண்டே புக்கை மூடி வைத்து முழங்காலை மடித்து பிடித்து அதில் தனது தலையை சாய்த்து வைத்துக்கொண்டு அமைதியாய் இருந்தாள்…
பின், பொழுதும் விடிந்து ஏழு மணி ஆக, அவசரம் அவசரமாக குளிக்கச் சென்றவளை செல்போன் சத்தம் கலைத்தது…
“யாரது காலங்கார்த்தால?... ஜன்ன்ன்னியா இருக்குமோ?... லீவ் சொல்லுறதுக்காக போன் பண்ணுறாளோ?... அய்யய்யோ அவ லீவு போட்டா எனக்கு வேலை ஓடாதே… கடவுளே அவளா மட்டும் இருக்கக்கூடாது…” என எண்ணிக்கொண்டே வேகமாக சென்று போனை எடுத்து பார்க்க அதில் மின்னிய பெயரைக்கண்டதும் முதலில் துளிர்த்த கோபம் பின் எங்குதான் மாயமானதோ அவளே அறிந்திடவில்லை…
அறிய முற்படும் ஆராய்ச்சிக்கும் செல்லாமல் வேகமாக போனை அவள் எடுக்க,
மறுமுனையில், “ம்ம்ம்…. போன் பண்ணிருந்தீயா?....” என கொட்டாவி விட்டுக்கொண்டே கேட்ட அர்னவினை முறைப்பதற்கு பதில் செல்லம் கொஞ்சினாள் அவள்…
“இப்பதான் எழுந்தீங்களா?...”
“ம்ம்ம்ம்… ஆ………மா…..”
“ஓ… சரி… இன்னும் தூக்க கலக்கம் போகலையோ?....”
“ம்ம்ம்…. அசந்து தூங்கிட்டேன்…”
“நல்லது… இப்படியே தூங்குங்க… சூப்பரா இருக்கும்….”
“அது நான் ரெகுலரா பண்ணுறதுதான்… சரி நீ சொல்லு… எதுக்கு அத்தனை போன் பண்ணின?...”
அவனது கேள்வியில் நிஜமாகவே அவளுக்கு இம்முறை கோபம் வந்தது… எதுவும் பேசாமல் அமைதியாகவே அவள் இருக்க,
“உங்கிட்ட தான கேட்குறேன்… எதுக்கு போன் பண்ணின நீ?... அதும் அத்தனை தடவ?...”
அவன் சற்றே குரலை உயர்த்த,
“எதுக்கு போன் பண்ணினேன்னு கூட தெரியலையா அப்போ?...”
அவள் குரல் சற்றே இறங்கியிருந்தது…
“என்ன விளையாடுறீயா?... காலங்கார்த்தால போனை போட்டுட்டு எதுக்குன்னு தெரியலையான்னு கேட்டா என்ன சொல்லுறது நான்?...”
“யாரு நான் விளையாடுறேனா?... சரி… ஓகே…”
“காலையிலேயே கடுப்பேத்தாத… ஒழுங்கா சொல்லு…”
“இல்ல எனக்கு நேரம் போகலை… அதான் டைம் பாஸுக்கு உங்களுக்கு போன் பண்ணினேன்…”
“எது நேரம் போகலையா?.. உனக்கு டைம் பாஸுக்கு நான் தான் கிடைச்சேனா?... நல்ல வேளை போனை சைலண்ட்டுல போட்டு தூங்கினேன்… இல்ல என் தூக்கம் கலைஞ்சிருக்கும்… ஷப்பாடா… தப்பிச்சேண்டா சாமி…”
அவன் அப்படி சொன்னதும் அதுவரை அடக்கி வைத்த அவள் கோபம் வெளியே வந்தது…
“ஆயிரம் தடவை நேத்து நைட் சொல்லியிருப்பேன்… போனை சைலண்ட்டுல போட்டு தூங்கிடாதீங்க… படிக்கணும்… எக்ஸாமுக்கு அதிக நாள் இல்லன்னு… சரி சரின்னு மண்டையை ஆட்டிட்டு, போன் பண்ணிப்போ நல்லா இழுத்து போத்தி தூங்கிட்டு இப்போ எதுக்கு போன் பண்ணினன்னு கேட்குறீங்க?... கேட்பீங்க… நீங்க ஏன் கேட்கமாட்டீங்க?... அரை மணி நேரமா போன் பண்ணிட்டே இருந்தேன் என்னாச்சோ ஏதாச்சோன்னு… இப்பதான தெரியுது நான் போன் பண்ணுறது உங்க தூக்கத்தை கலைச்சிடக்கூடாதுன்னே சைலண்ட்டுல போட்டு வச்சிருக்கீங்க… நல்லது… நான் என் நல்லதுக்குத்தான உங்களை படிக்க சொல்லுறேன்… அப்போ இப்படி கஷ்டமாத்தான் இருக்கும்… செய்யுங்க கார்த்தி… உங்களுக்குத் தோணுறதையே செய்யுங்க… பரவாயில்லை…”
ஆரம்பத்தில் கோபமாக பேச ஆரம்பித்தவள், பின்னர் ஆதங்கத்துடன் வருத்தமுமாய் முடிக்க, அவள் பேச்சில் உணர்ந்தான் அவன் தன்னுடைய தவறை…
“ஹே… ஆமால்ல… சாரி… தூங்கிட்டேன்… மறந்தும் போயிட்டேன்…”
அவன் உண்மையாகவே மன்னிப்பும் கேட்க, இங்கே அவளுக்கு அனைத்தும் மறந்து போனது…
“சரி கார்த்தி… விடுங்க… பரவாயில்லை… சாரி… நான் எதுவும் கோபப்பட்டு பேசியிருந்தா….”
“ஹே… சீ… அதெல்லாம் இல்ல… என் மேல தான் தப்பு… நான் தான் மறந்து போனை சைலண்ட்டுல போட்டு தூங்கிட்டேன்… சாரிடா…”
“விடுங்க கார்த்தி… பரவாயில்லை…”
“சரி நீ படிச்சியா?...”
என்ன சொல்லுவாள் அவனின் கேள்விக்கு?... ஆம் என பொய் சொல்லுவாளா?... இல்லை உனக்காகத்தான் காத்திருந்தேன் என மெய் சொல்லுவாளா?...
எதுவும் சொல்லாது அமைதியாக இருந்தவள், “கார்த்தி நேரமாச்சு… ஆஃபீஸ்க்கு கிளம்பணும்… நான் அப்புறம் பேசவா?...” எனக் கேட்க,
“ஓகே.. ஒகே… பை…” என்றபடி கட் செய்துவிட்டான் அவன்…