அதன் பின் மாலையில் அவன் படிக்கலாம் என்றான்… அவளும் சரி என்று போன் செய்து, படிக்க ஆரம்பித்தார்கள்…
“கார்த்தி… உங்களுக்கு தமிழ் எந்த அளவுக்கு தெரியும்னு எனக்குத் தெரியலை… அதான் எங்க இருந்து ஸ்டார்ட் பண்ணுறதுன்னு யோசனையா இருக்கு…”
“தமிழா?... ஏன் உங்கிட்ட நான் இப்போ வேற மொழியில பேசுறேனா?...”
“அய்யோ… நான் அதை சொல்லலை…”
“பின்ன வேறென்ன சொல்லுற?... எனக்குப் புரியலை…”
“சரி நான் நேரடியாவே கேட்குறேன்… பதினெண் மேற்கணக்கு, கீழ்க்கணக்கு நூல் எதுன்னு சொல்லுங்க….”
“மேல்கணக்கு? கீழ்க்கணக்கா?.......”
“ஆமா அதுதான்… சொல்லுங்க….”
“அப்படின்னா என்னது?.. முதல்ல அத சொல்லு….”
அவனின் வார்த்தையில் அப்படியே அதிர்ந்து போனாள் அவள்…
“கார்த்தி… மேல்கணக்கு கீழ்க்கணக்கு நூல் கேட்குறேன்… விளையாடாம சொல்லுங்க…”
“ஆமா எனக்கு நேரம் போகாம உங்கூட விளையாடுறேன் பாரு… நீ முதல்ல அது என்னதுன்னு சொல்லு….”
“அய்யோ கார்த்தி… நிஜமாவே தெரியாதா?.. படிச்சிருப்பீங்கல்ல… சின்ன வயசில…”
“பார்த்தீயா… நீயே சொல்லிட்ட சின்ன வயசில படிச்சதுன்னு… அப்போ அதை இப்போ கேட்டா எப்படி நினைவு இருக்கும்?...”
அவளை மடக்கி விட்டதாய் அவன் பேச,
“ஓ… அப்படிங்களா சார்… அப்போ ஒன்னும் ஒன்னும் ரெண்டு. ரெண்டும் ரெண்டும் நாலுன்னு மட்டும் எப்படி மனசுல பதிஞ்சிருக்காம் இப்போ வர… அது எப்படி கார்த்தி???…” என கேட்டாள் அவள்…
“மடக்கிட்டாடா…..” என மனதிற்குள் சொன்னவன், வெளியே அவளிடம்,
“அது வாய்ப்பாடு… ரொம்ப ரொம்ப பேஸிக்… அது எப்படி மறக்கும்… யாருக்கும் மறக்காது…” என வாயடிக்க, அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது…
“சரி இப்போ இப்படியே பேசி நேரம் வேஸ்ட் பண்ணனுமா?...”
அவளின் கேள்வியில், “விடமாட்டாளே…” என நினைத்துக்கொண்டவன்,
“சரி சொல்லிக்கொடு… படிச்சிக்குறேன்…” எனவும் அவள் முகத்தில் புன்னகை வந்திருந்தது…
“சரி கார்த்தி… சொல்லுறேன்… நோட்டுல அப்படியே எழுதுங்க சரியா…” என்றவள்,
“பதினெண் அப்படின்னா 18ன்னு அர்த்தம்… இப்போ நான் பதினெண் கீழ்க்கணக்கு நூல் சொல்லுறேன்… இதுல எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் வரும்… சரி கொஞ்சம் அந்த எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் என்னவா இருக்கும்னு யோசிச்சு பாருங்க…”
“பத்துப்பாட்டு தான?...” என்றவன், வேகமாக பத்து சினிமா பாட்டுக்களை சொல்ல, அவள் தனது தலையில் கைவைத்துக்கொண்டாள்…
“கார்த்தி… வேண்டாம்… விட்டுடுங்க… நான் சொல்லுறேன்… எழுதிக்கோங்க…” என்றவள்,
“எட்டுத்தொகை நூல்கள் - நற்றிணை, குறுந்தொகை, ஐஞ்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை…” என சொல்லிவிட்டு எழுதீட்டீங்களா என கேட்க
“ஹேய்… ஆமா அகநானூறு, புறநானூறு… கேள்விப்பட்ட மாதிரி இருக்கே…” என்றான் அவனும்…
“ஹப்பாடா… அப்போ ஹேப்பி… சரி இப்போ பத்துப்பாட்டு சொல்லுறேன்… எழுதிக்கோங்க…” என்றவள் அதையும் கூறி எழுதசொல்லிவிட்டு, அவனிடம் அதை திரும்ப வரிசையாக சொல்ல சொல்லி உத்தரவிட,
அவனும் சொல்லுகிறேன் பேர்வழி என்ற பெயரில் பாதி சொல்லி, பாதி மறக்க, சிரிப்புகளுடன் கடைசியில் ஒருவழியாக சொல்லிமுடித்தான்…
பின், “சரி… மீதியை நாளைக்குப் பார்க்கலாமா?... மணி 8 தாண்டிடுச்சு…” என அவன் சொல்ல,
“8 மணியா?....” என அதிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தவள்,
“அய்யய்யோ ஒரு மணி நேரமா இதை மட்டுமா படிச்சோம்?... சுத்தம்…” என புலம்ப,
“ஏன் ஒரு டாப்பிக் முடிச்சிட்டோம் தான… அப்போ நீ சந்தோஷம் தான படணும்.. எதுக்கு இப்படி ஷாக் ஆகுற?..”
“இது ஒரு டாப்பிக்கா?... அய்யோ கார்த்தி… இது வெறும் தலைப்பு மட்டும் தான்…”
“எது இவ்வளவு நேரம் படிச்சது வெறும் தலைப்பா?.....”
அவன் அதிர்ந்திருப்பது அவனது குரலிலேயே தெள்ளத்தெளிவாய் வெளிப்பட,
“ஆமா கார்த்தி… நான் சொன்ன ஒவ்வொரு நூலோட பேருக்கு பின்னாடியும் நிறைய பாட்டு இருக்கு, அதை யாரு எழுதினா, நூலோட சிறப்பு என்ன?.. அதுல என்ன இலக்கணம் வரும்… அப்படி இப்படின்னு ஏகப்பட்டது இருக்கு….”
“சுத்தம்… விளங்கினது மாதிரிதான்… சூப்பர்…. அப்போ பாஸ் பண்ணி கிழிச்ச மாதிரி தான் நான்…” என அவன் எதிர்மறையாக பேச, அவள் திட்டினாள்…
பின் அவன் சரி படிக்கலாம் என சொல்ல, அவனுக்கு மேலும் படிக்க நோட்ஸ் கொடுத்துவிட்டு போனை வைத்தாள்…