(Reading time: 18 - 36 minutes)

பிறகு மைத்ரீ அவளின் காலேஜ் முதல் நாள் அனுபவங்களை அவனிடம் பகிர்ந்துக் கொண்டாள்.

ராகுல் வேலை முடித்து வீடு திரும்பிய போது சரயூ டிவியில் டாம் அண்ட் ஜெர்ரி ஷொவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.  அவனும் அவளோடு இணைந்து அதை பார்த்தபடியே சோபாவில் அமர்ந்தான்.  சிறிது நேரத்தில் ரவிகுமார் மற்றும் சாரதாவும் இணைந்தனர்.  சற்று நேரம் கழித்து சாரதா எல்லோரையும் சாப்பிட அழைத்தார்.

சாப்பிட்டபடி மகளைப் பார்த்து, “எப்படியிருந்தது காலேஜ் முதல் நாள்? உனக்கு பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார் ரவிகுமார்.

“நல்லா இருந்தது.  அப்பா எனக்கு காலேஜில் பூத்திருந்த கொன்றைப் பூக்களை ரொம்பவும் பிடிச்சது”

“நீ எங்க போனாலும் திருந்தவே மாட்டியா? இதே வேலையா மரம், செடி, கொடின்னு பார்த்திட்டே இரு” என்று தலையில் அடித்து கொண்டான் ராகுல்.

“உனக்கென்னடா? இயற்கையை ரசிக்கிறது ஒன்னும் தப்பில்லை”

“அண்ணனை மரியாதையா பேசு” சாரதா தான் வழக்கம் போல் கடிந்தார்.

அம்மாவிடமிருந்து தப்பிக்க அப்பாவிடம், “பாருங்கப்பா! என்னை எப்படி சொல்லுறான்” என்று செல்லம் கொஞ்சினாள்.

“பரவாயில்லை விடுடா.  அவனுக்கு ரசனையில்லை”

“அப்பா எனக்கொரு ஃபரெண்ட் கிடைச்சிருக்கான்.  அவன் பேரு சஞ்சய். ரொம்ப நல்லவன் ஆனால் பேசவே மாட்டிங்கிறான்.  அப்புறம் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்” என்று நிறுத்தி தன் தந்தையை பெருமையாக பார்த்து “என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்”

“இது என்ன புதுசா? யாரவது குழந்தை செடியை கிள்ள போயிருக்கும் நீ அதை தடுத்து புத்தி சொல்றேன்னு அந்த குழந்தையை பேசியே அழவைச்சிருப்ப” என்று கேலியாய் ராகுல் சொல்லவும் அவன் கையை கிள்ளினாள் சரயூ.

“நீ பேசறது நிறுத்து ராகுல்.  அவளை சீண்டலைனா உனக்கு சாப்பாடே இறங்காதே” என்று சாரதா சொல்லவும்

“தேங்க்ஸ் அம்மா!”

“இதுக்கு குறையில்லை.  அவன் தான் சீண்டுறான்னு தெரியுதில்லை.  எதுக்கு அவனை கிள்ளின? அதை நான் பார்க்கலைன்னு வேற பெருமை”

மாட்டிக்கொண்டோமே என்று அசடு வழிந்தாள் சரயூ. 

“மாட்டினியா?” என்று அவள் காதில் கிசுகிசுத்தான் ராகுல்.

“ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்’ உன்னை மாட்டிக்கொடுப்பேன்” என்று அதே குரலில் சபதம் ஏற்றாள் சரயூ.

இவர்களை கவனித்த சாரதா, “மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா?”

“விடு சாரதா.  இதென்ன புதுசா?” என்று ரவிகுமார் கேட்கவும் முறுவலித்தார் சாரதா.

“நீ சொல்லுடா என்ன சர்ப்ரைஸ் அது”

“நான் இன்னைக்கு நீங்க சொன்ன மாதிரி தப்பை தட்டிக்கேட்டேன்பா” என்றாள் மிகுந்த மகிழ்ச்சியுடன்.

“எந்த தப்பை தட்டிக்கேட்டாய்?” சாரதா சற்று பதட்டமானார். 

ரவிகுமார் சரயூவை தைரியமான பெண்ணாக வளர்ப்பது சாரதாவிற்கும் சரியாக தான் பட்டது.  ஆனால் அழகும் துணிச்சலும் துருதுருப்புமான தன் மகள் ஏதாவது பிரச்சனையில் சிக்கிவிடுவாளோ என்ற பயம் அவர் மனதில் நிரந்தரமாய் இருந்து கொண்டேயிருக்கும்.  இன்று சரயூ தவறைத் தட்டிகேட்டேன் என்று சொல்லவும் மகளுக்கு ஏதாவது துன்பம் நேருமோ என்று தவித்தார்.    

சரயூ அன்று காலை பேருந்தில் நடந்தவைகளை விவரிக்க சாரதா கோபம் பொங்க “இதென்ன அதிக பிரசங்கி தனமா யாருன்னு தெரியாத ஒருத்தனை அடிச்சிருக்க” என்று சீறினார்.

“ஒரு தப்பை தட்டிக்கேட்டதுல என்ன தப்பிருக்குமா? ஏன் இவ்வளவு கோபமா பேசுறீங்க?” என்றவளின் மகிழ்ச்சி வடிந்து முகம் வாடிவிட்டது.  இதை கவனித்த ரவிகுமார் எழுந்து மகளின் அருகில் அமர்ந்து

“பொறுமை வேணும் சரயூ.  நீ தப்பை தட்டிக்கேட்டதில் எந்த தப்புமில்லை.  ஆனால் அம்மா உங்கிட்ட கோப படுறதுல நியாமிருக்கு.  எல்லா தப்பையும் எல்லாரும் தட்டிக்கேட்க முடியாது.  ஒரு சம்பவம் நடந்ததும் எப்படி அதை சரி செய்யறதுங்கிறது ரொம்ப முக்கியம்.  அப்படி செய்யும் போது முடிந்தளவுக்கு நீ அதில் சம்பந்த பட்டிருப்பதோ நீதான் அதை சரி செய்ததுன்னோ யாருக்குமே தெரியாமல் பார்த்துக்கனும்.  இன்னைக்கு நடந்த பிரச்சனையில் அவனோட தப்பை நீ தெரிஞ்சுக்குன உடனே போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கனும் கண்ணா” என்றார் மகளின் தலையை வருடியபடி.   

சரயூ குழம்பியிருப்பது புரிந்ததும் ரவிகுமார் மேலும் தொடர்ந்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.