(Reading time: 18 - 36 minutes)

டி கார்டை வாங்கிகொண்டு, அவளை இரகசியமாக ரசித்துக் கொண்டே அவள் சொன்னவைகளைக் கேட்டவன் வானத்தில் இறகுகளில்லாமல் பறந்தபடியே இருந்தான்.  வீட்டை அடைந்த பின்பும் கனவுலகிலிருந்து திரும்பாதவனோ அமைதியாகத் தோட்டத்தில் அமர்ந்திருந்தான்.  எப்படியாவது ஜெய்யிடம் விஷயத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடிருந்த மைத்ரீ வீட்டை அடைந்ததும் அவனிடம், “என்னடா கொரங்கே? என்ன யோசனை?” என்றாள்.

மைத்ரீயின் குரலில் தன் கனவுலகிலிருந்து விடுபட்டவன் “வா மைதி.. எப்போ வந்த?”

“எப்படி போச்சு காலேஜ் முதல் நாள்?”

“நீயில்லாமல் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது மைதி”

“போதும் ஜெய்! நீ சொல்ற பொய் எங்கிட்ட செல்லாது.  யாருடா அந்த பொண்ணு?”

“எந்த பொண்ணு? யாரை பற்றி பேசுற மைதி?”

“காலையிலியே இதை பற்றி எல்லார் முன்னிலையில நான் பேசலையேன்னு வருத்தமா இருக்கு.  சரி விடு.. அந்த பொண்ணு யாருன்னு அப்பா, அம்மா, ஆதர்ஷ், நானு எல்லாரும் பேசி கண்டுபிடிக்கிறோம்” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னவள் எழுந்து வீட்டை நோக்கி நடந்தாள்.

வேகமாக அவளை முன்னேறி வழிமறித்த ஜெய், “நானே சொல்லிடுறேன்.  உங்களுக்கு வீண் சிரமம் எதுக்குங்கம்மணி?” என்று அவள் முன் சற்று குறுகி கும்பிடு போட்டான்.

“அது.. அந்த பயத்தை அப்படியே மெயிண்டென் பண்ணு..  இந்த மைத்ரீயை யாருன்னு நினைச்ச? நான் ஜெய்யோட ஃபரெண்டு.. ஞாபகத்திலிருக்கட்டும்” என்று தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு எச்சரித்தாள்.

“சரிங்கம்மணி” என்று சற்று பயந்தவன் போல் ஜெய் பேச இருவரும் சிரித்தபடி தோட்டத்தில் அமர்ந்தனர்.

“அவள் பெயர் என்ன?” என்று தன் காரியத்திலியே குறியாக இருந்தாள் மைத்ரீ.

“அவள் பெயர் சரயூ தேவி” என்று தொடங்கி அவளை முதன் முதலில் பார்த்தது, அவளிடம் காதல் கொண்டதென இன்று அவளிடம் பேசியது வரை எல்லாவற்றையும் உள்ளூர கடல் அலையென எழுந்த ஆனந்தம் வெளியில் சிதறிய புன்முறுவலுடன் சொல்லி முடிக்கவும்

“வாவ்! ஆல் தி பெஸ்ட்” என்று குதூகலித்த மைத்ரீ மேலும் தொடர்ந்தாள்

“இந்த கழுதைக்கும் காதல் வரும்னு நான் நினைக்கவேயில்லை” என்று உரக்க சிரித்து அவனை சீண்டினாள்.

“சரயூ என்ற தேவதையைப் பார்த்து கழுதைக்கும் காதல் வரும்”

“அது சரி! இப்போவாவது நீ கழுதைன்னு உனக்கு புரிஞ்சதே”

“மைதி, நீ என்ன சொன்னாலும் இப்போ உன்னோட சண்டை போடற மூடில்லை”

“சண்டைன்னு சொன்னதும் தான் எனக்கு உரைக்குது.  ஏன் இவ்வளவு நாள் உன்னோட காதலை பத்தி சொல்லலை?” என்றவள்

“என்னை உன் குடும்பத்தில் ஒருத்தியா நினைக்காததால சொல்லலையோ? இல்லைனா அட்லீஸ்ட் உன்னோட ஃப்ரெண்டிடம் சொல்லனும்னு கூடவா தோன்றலையா?” என்று சற்று தழுதழுத்த குரலில் கேட்கவும்

அவன் அவசரமாய் மறுத்தான், “அய்யோ! அப்படியில்லை.  என்ன மைதி? இப்படியொரு கேள்வியை கேட்டுட்ட.  யாருமேயில்லாம நான் தவிச்சபோது நீ தானே எனக்கு எல்லாமுமாய் இருந்து இன்னைக்கு ஒரு குடும்பத்தையும் எனக்கு கொடுத்திறுக்க… சரயூ மேல இன்ட்ரெஸ்ட் இருந்தது.  ஆனால் அது காதல் தானா இல்லை வெறும் ஈர்ப்பான்னு எனக்கு குழப்பமாயிருந்தது.  காதல் தான்னு இப்போ எனக்கு நிச்சயமா தெரியவும் உன்னிடத்தில் தான் முதல்லில் சொல்லியதே” தன்னிலை விளக்கத்தை வேகமாக சொல்லிமுடித்தவன் குரலில் அப்படியொரு வருத்தம்.

“ஸாரி ஜெய்.  நீ இவ்வளவு நாள் சொல்லாமல் மறைச்சுட்டீயேன்னு அவசரத்துல எதேதோ பேசிட்டேன்.  ஐ ம் ரியல்லி ஸாரிடா”

“நீ இன்னொரு முறை இப்படி பேசுவதென்ன நினைக்கவும் கூடாது மைதி.  என்னால் தாங்கிக்க முடியாது. எதுவானாலும் நான் உங்கிட்ட தானே சொல்ல முடியும்.  எனக்குன்னு வேற யாரிருக்காங்க?” என்றான் மிகுந்த வேதனையுடன்.

அப்படி பேசியிருக்க கூடாது என்று தன்னை தானே கடிந்த மைத்ரீ, அவனின் மனதை திசைதிருப்ப, “ஏனில்லை? சரயூ இல்லயா?” என்றவளின் கண்களில் கேலியும் உதட்டில் சிரிப்பும்.

சரயூ என்றதும் அவன் முகம் சற்று தெளிந்தது.  “நிச்சயமா…ஆனால் மைதி! அவளிடம் என் காதலை சொல்லனுமே.  அதுக்கு உன்னோட ஹெல்ப் ரொம்ப அவசியம்”

“என்னோட சப்போர்ட் உனக்கு எப்பவுமே இருக்கும் மகனே” என்று தன் வலது கையை உயர்த்தி அவனுக்கு ஆசி வழங்குவது போல் நிறுத்தவும்

“மனம் மகிழ்ந்தேன் தாயே” என்று நாடக பாணியில் அவனும் அவளின் ஆசியை ஏற்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.