(Reading time: 18 - 36 minutes)

ரு நல்லது நடந்ததுன்னா அது எல்லோருக்கும் நல்லதுன்னு சொல்லுவாங்க.  ஆனால் ஒவ்வொரு நல்லது நடக்கும்போதும் அதற்கு எதிர்மறையான கெட்டது அழியுது.  அப்படி அழியும்போது அதில் சம்பந்தப்பட்டவங்களுக்கு நிச்சயமா அது சந்தோஷத்தைத் தருவதில்லை.  அப்படி பாதிக்கபட்ட மனசு இன்னொருத்தரோட சந்தோஷத்தை அழித்து நிம்மதியடையும்.  அதனால் நல்லது செய்கிறபோது முட்டாள்தனமாக நாம் எந்த பாதிப்புக்குள்ளாகக் கூடாது.  இதை நீ எப்பவுமே மறக்காதே கண்ணா” என்று அவர் மேலும் விளக்கம் கொடுக்கவும் சரயூவின் முகம் சற்று தெளிந்தது.

“ஸாரி அம்மா! ஸாரி அப்பா! இனிமேல் இப்படி முட்டாள்தனமா எதுவும் செய்யமாட்டேன்” என்றாள் கெஞ்சும் குரலில்.

சாரதா இப்போதும் கவலையுடன் இருப்பது கண்டு ரவிகுமார்

“சரயூ புத்திசாலி! எப்படி சட்டுனு புரிஞ்சிகிட்டா பாரு. நீ கவலைப்பட வேண்டாம் சாரதா”

சாரதா பதிலேதும் சொல்லாது தவிப்போடு கணவரைப் பார்க்கவும்

“ராகுல் சரயூவை கூட்டிட்டுப் போயி படுக்க வை.  அவள் நாளைக்கு காலேஜ் போகனுமில்லை” என்று ரவிகுமார், ராகுலைப் பார்த்தப் பார்வையின் காரணத்தை உணர்ந்தவன் தங்கையை அழைத்துச் சென்றான்.

பிள்ளைகளிருவரும் அங்கிருந்து சென்றதும் மனைவியின் அருகிலமர்ந்த ரவிகுமார்

“என்ன சாரதா? ஏன் இவ்வளவு தவிப்பு? சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பண்ணிட்டா.  இப்படி இன்னொரு முறை நடக்காதுன்னு உனக்கே புரிஞ்சிருக்கும்” என்றபடி மனைவியின் முகத்தைப் பார்க்கவும்

“இன்னொரு முறை இப்படி நடக்காது என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கு.  ஆனால் அதே பஸ்ஸில் சரயூ தினமும் காலேஜ் போயிட்டு வரனும்னு நினைக்கும்போதுதான் பயமாயிருக்கு”

“இதுக்கு ஏன் பயப்படனும் சாரதா? நடந்தது நடந்திடுச்சு இதுக்காக யோசிக்க ஒன்னுமில்லை”

“இவள் பஸ்ஸில் போய் வரும்போது அந்த அறை வாங்கியவன் ஏதாவது பிரச்சனை பண்ணா… அய்யோ! அப்படியேதும் நினைக்கவே பயமாயிருக்கு”

“நீ சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்” என்று புருவ முடிச்சுடன் இருந்த கணவரின் முகத்தை கவலையோடுப் பார்த்திருந்தாள் மனைவி.

“இதுதான் சரியாயிருக்கும்.  சரயூக்கு ஒரு டூ வீலர் வாங்கி கொடுத்திடலாம்.  அவளும் ரொம்ப நாளாவே வண்டி வேணும்னு கேட்டிட்டிருந்தா.  இதனால அவளுக்கும் சந்தோஷம் நமக்கும் நிம்மதி.  அவள் பஸ்ஸில் போக வேண்டிய அவசியமுமில்லை”

“சரிங்க. அதையே செய்திடலாம்.  இப்போ தான் ஞாபகம் வருது சரயூ வண்டி வேணும்னு கேடக ஆரம்பிச்சு ஆறு மாசமாகுது.  விஷயம் தெரிஞ்சா ரொம்பவே சந்தோஷப் படுவாள்” என்ற சாரதாவின் மனகண்ணில் தெரிந்த மகளின் மகிழ்ச்சி அவர் முகத்தில் கனிவை தந்தது.

“வண்டி வாங்க நாளைக்கே பேசிடுறேன்.  எல்லா ஃபார்மாலிட்டீஸ் முடிஞ்சு அது கிடைக்க இரண்டு நாளாவது ஆகும் அதுவரைக்கும் நானே சரயூவை காலேஜில் விடுறேன்.  ராகுல் சாயங்காலம் அவளை வீட்டுக்குக் கூப்பிட்டு வரட்டும்” என்று வராத பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் சரயூவின் அன்பு பெற்றோர்.

அன்று காலை சரயூவைப் பார்க்கும் அவசரத்தில் வழக்கத்தை விட சீக்கிரமாகவே பஸ் ஸ்டாப்பிற்கு வந்தான் ஜெய்.  வெகு நேரமாகியும் அவள் வராதபோது ஏதேதோ விபரீதமான எண்ணங்கள் தோன்றின.  ‘நேற்று அவளிடம் அறை வாங்கினவனால் ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்குமோ?’ என்று நினைக்கவேப் பிடிக்காதவனாய் மைத்ரீயை ஃபோனில் அழைத்தான்.

“சொல்லுடா ஜெய்! சரயூவைப் பார்த்ததும் உலகத்தையே மறந்திருப்பன்னு நினைச்சேன்”

“…………..”

“எரும! போன் பண்ணினா பேசனும்.  லைன்ல இருக்கியா? இல்லையா?”

“……………….”

அவன் இப்போதும் பேசாதிருக்க, ‘ஏதாவது பிரச்சனையா? பேசாமலிருக்கானே’ என்று தோன்றிட

“என்ன பிரச்சனை ஜெய்?” என்று மென்மையாக கேட்டாள்.

அப்போதிருந்த மனநிலையிலும் மைதி தன்னை எவ்வளவு ஆழமாகப் புரிந்திருக்கிறாள் என்று வியந்து அவளை தோழியாக கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல தவறவில்லை ஜெய்.

“ஒன்னுமில்லை மைதி! சும்மா தான் கூப்பிட்டேன்…” என்று இழுத்தவனின் குரலில் காலையிலிருந்த குதூகலம் இப்போதுக் காணாமல் போயிருப்பதை உணர்ந்தவள்

“என்ன விஷயமா இருந்தாலும் ஜெய் எங்கிட்ட மறைக்க மாட்டானே.  அவன் ரொம்ப நல்ல பையனாச்சே! நீ யாரு? இப்படி பேசாமலிருக்கயே?” என்று ஜெய்யிடமே அவனை வேறொருவனாக பாவித்து கேட்டாள் மைத்ரீ.

தாய் தன் குழந்தையிடம் நயமாக பேசி அதன் மனதை அறிவதை போல் மைத்ரீ கேடகவும் குழந்தையாக மாறினான் ஜெய்.

“மைதி பஸ் ஸ்டாப்பில் ரொம்ப நேரமாவே காத்திட்டிருக்கேன்.  சரயூ வரவேயில்லை.  எனக்கு என்ன செய்யன்னு தெரியலை” என்றான் வருத்தமாக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.