(Reading time: 21 - 42 minutes)

29. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

Kadalai unarnthathu unnidame

டுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு...

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும்

பொண்ணும் தான்...

பேரு விளங்க இங்கு வாழனும்...

சோலை வனத்தில் ஒரு ஜோடிக்குயில்

போலத் தான்...

காலம் முழுக்க சிந்து பாடனும்...

ஒரு பெரிய திருமண மண்டபத்தில் நடந்துக் கொண்டிருந்த அந்த வரவேற்பு நிகழ்ச்சியில்... அந்த மண்டபமே அதிரும்படி, இன்னிசை குழுவினரால்... முதல் பாடலாக இந்த பாடல் ஒளிப்பரப்பிக் கொண்டிருக்க... அப்போது தான் மேடையேறி இருந்தனர், புதுமணத் தம்பதிகளான வரூனும், பிரணதியும்...

நான்கு நாட்களுக்கு முன்னால், வரூனின் அன்னை திருப்பதியில் திருமணம் நடக்க வேண்டும் என்று முன்னரே அந்த பெருமாளிடம் வேண்டியிருந்ததால்... வெறும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் சென்று திருப்பதியில் திருமணத்தை முடித்துக் கொண்டு வந்தனர்... சென்னையில் வைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தனர்.. அந்த ஏற்பாட்டின்படி இப்போது இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏற்கனவே நிச்சயதார்த்தமும், இப்போது திருமண செலவும் வரூன் குடும்பத்தாரே ஏற்றுக் கொண்டதால்... இந்த வரவேற்பு நிகழ்ச்சியை செந்திலும், பிருத்வியும் எடுத்து நடத்துவதாக வரூன் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டனர்...

இந்த நிகழ்ச்சி அவர்கள் பொறுப்பில் நடப்பதால்... வெளியில் வாசலில் நின்று யுக்தா அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தாள்... பிருத்வி வருபவர்களுக்கு உபசரிப்பு நன்றாக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்... செந்திலும், மதியும் வந்த விருந்தினர்களிடம் அருகில் சென்று விசாரித்துக் கொண்டிருந்தனர்... மாதவன், சுஜாதா, சாவித்திரியும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்தனர்...

ஆகாய நீல நிற வஸ்த்ரகலா பட்டுப் புடவையை வட இந்தியர்கள் முறையில் கட்டிக் கொண்டு பிரணதியும், ஆஃப் வைட் நிறத்தில், ஆகாய நீல நிறத்தில் காலரும், கை பார்டரும் கொண்ட ஷெர்வானியுடன் வரூனும்... இள பிங்க் நிற ரோஜா மாலை அணிந்து மேடையில் நின்றிருக்க... உறவும், நட்பும் வந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வரும் விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டு நின்றிருந்தாள் யுக்தா... ஆனால் அவள் பார்வையோ யாரையோ எதிர்பார்த்து கொண்டிருந்தது... அது வேறு யாருமில்லை, அவள் கவியை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்...

வரூன், பிரணதி திருமணத்தன்று தான், தேவாவின் தங்கை தர்ஷினிக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால்... அவர்கள் இருவராலும் திருமணத்திற்கு வரமுடியவில்லை... அப்படி ஊருக்கு சென்ற போது தான் கவி மயங்கி விழுந்து அவள் கருவுற்றிருப்பது தெரிய வந்தது... யுக்தாவை போல் கவியும் முதலில் அந்த விஷயத்தை யுக்தாவிற்கு தெரியப்படுத்தினாள்...

செந்திலும், மதியும் நேரில் சென்று தேவாவின் பெற்றோரையும், தாத்தா, பாட்டியையும் திருமணத்திற்கு அழைத்ததால் அனைவரும் ரிஸப்ஷனுக்கு வருவதாக கூறியிருந்தனர்... கவியும் பாதுகாப்பாக ட்ராவல் செய்யலாம் என்று டாக்டர் சொன்னதால்... எல்லோரும் வர முடிவெடுத்தனர்... எல்லோரும் கிளம்பிவிட்டதாக போன் செய்ததால் தான் யுக்தா அவர்களை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்...

கவி கர்ப்பமாக இருப்பதில் இவளுக்கு ரெட்டிப்பு சந்தோஷம்... ஆம் இவர்கள் இருவரைப் போல இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளும் மூன்று மாத இடைவெளியில் பிறக்கப் போகிறது... அந்த சந்தோஷத்தை கவியோடு பகிர்ந்துக் கொள்ள தான் அவளை யுக்தா ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்...

வாசலில் கார் வந்து நிற்க, அதிலிருந்து தேவா, கவி, தேவாவின் பெற்றோர், தாத்தா, பாட்டி எல்லோரும் வந்து இறங்கினர்... அவர்களை பார்த்துவிட்ட யுக்தா அவர்கள் அருகில் சென்றாள்... கவியைப் பார்த்ததும்.... "கவி கங்க்ராட்ஸ்" என்று கட்டிக் கொண்டாள்... பிறகு எல்லோரையும் வரவேற்றாள்...

"கவி... தர்ஷினி எப்படி இருக்கா... வளைகாப்பெல்லாம் நல்லா நடந்துச்சா.."

"நீ வேற சம்யூ... வளைகாப்புக்கு என்னை போகவே விடல... ரெண்டுப்பேரும் கர்ப்பமா இருக்கறதால, ரெண்டுப்பேரும் பார்த்துக்கக் கூடாதாம்.. அதான் நான் நம்ம வீட்லேயே இருக்க வேண்டியதாப் போச்சு..." என்றதும் யுக்தா புரியாமல் ஒரு பார்வை பார்த்துவிட்டு...

"ஏன் கவி, அப்போ நாம ரெண்டுப்பேரும் கூட பார்த்துக்கக் கூடாதா..??" என்றுக் கேட்டாள்.

"அப்படி இல்லம்மா... நாத்தனாரும், அண்ண பொண்டாட்டியும் மாசமா இருந்தா தான் பார்த்துக்கக் கூடாது... நீங்க அக்கா, தங்கச்சி தானே பார்த்துக்கலாம்.." என்று லஷ்மி அதற்கு விளக்கம் அளித்தார்...

"இப்போ தர்ஷினி எப்படி இருக்கா அத்தை... அவளை தனியாவா விட்டுட்டு வந்தீங்க..."

"இல்லம்மா... அவளோட மாமியார் நாங்க வர வரைக்கும் அவளுக்கு துணையா அங்கேயே இருக்கறதா சொன்னாங்க... அதனால பயப்பட வேண்டியதில்ல..."

இவர்கள் வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்த போதே... செந்தில், மதி, பிருத்வி எல்லோரும் அவர்களை வரவேற்க அங்கு வந்தனர்...

"யுக்தா, என்ன எல்லாரையும் வெளியிலேயே நிக்க வச்சுப் பேசிக்கிட்டு இருக்க..." என்ற மதி, எல்லோரையும் வரவேற்றாள்.

"அட எங்களை விருந்தாளியா நினைக்காத மதி.. இது நம்ம வீட்டு விஷேஷம் புரியுதா.." என்றார் பாட்டி..

"பாட்டி... போனதடவை கவி கல்யாணத்துக்கு நீங்க வந்தப்பவே.. எங்கக்கூட தங்கனும்னு சொன்னதுக்கு... அடுத்த முறை பார்த்துக்கலாம்னு சொல்லிட்டுப் போய்ட்டீங்க... அப்போ சொன்ன மாதிரி இந்த தடவை நீங்க எங்கக் கூட தங்கனும் பாட்டி..." என்றாள் யுக்தா.

"கண்டிப்பா பிள்ளைங்களா... நான் கேட்டுக்கிட்டா மாதிரி இப்போ ரெண்டுப்பேரும் நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க... அங்க தர்ஷினிக்கு பக்கத்துல பெரியவங்க நிறைய பேர் இருக்காங்க...

இங்க என்னத்தான் உங்களை கவனிச்சிக்க... சுஜாதா, சாவித்திரி, மதி எல்லோரும் இருந்தாலும், என்ன போல வயசானவ ஒருத்தி உங்கக்கூட இருக்கறது நல்லது... அதனால நான் இங்கேயே உங்களுக்கு குழந்தைப் பொறக்கற வரைக்கும் இருக்கறதா முடிவுப் பண்ணிட்டேன்..." என்று பாட்டி சொன்னதும்...

"கண்டிப்பா நீங்க இங்க இருக்கனும்மா... உங்களை மாதிரி பெரியவங்க எங்கக் கூட இருக்கறது நல்லதுதான்..." என்றாள் மதி... யுக்தாவும், கவியும் தாத்தா, பாட்டி இங்கு இருக்கப் போவதை நினைத்து மகிழ்ந்தனர்.

பின் பெரியவர்களெல்லாம் உள்ளே செல்ல... அந்த இரு ஜோடிகள் மட்டும் அங்கேயே நின்றிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.