(Reading time: 11 - 21 minutes)

23. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

விண் விண் என்று தலை வலிக்க ஆரம்பிக்க, தலையைப் பிடித்துக்கொண்டான் திலீப்…

இப்படி செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்க்சி அவன் மனதில் தலைதூக்க, சரயூவின் முகம் கண்ணில் வந்து போனது…

உடனேயே அங்கிருந்து கிளம்பினான் அர்னவின் ஊருக்கு வந்தான் திலீப்…

அதே நேரம்,

“அம்மா… கேரட் கட் பண்ணியாச்சு… அடுத்து என்ன பீன்ஸா?...”

சத்தமாக கேட்டான் அர்னவ், வாசந்தியிடம்…

“ஏண்டா கத்துற?.. இங்க தான இருக்குறேன் நான்…”

அதட்டியபடி வந்த அன்னையை முறைத்தான் அர்னவ்…

“நீங்க இங்க தான் இருக்குறீங்க… யார் இல்லன்னு சொன்னது?... ஆனா சீரியல் பார்த்துட்டுல்ல இருக்குறீங்க… அதான் சத்தமா கூப்பிட்டேன்…”

“சரி… சரி… கட் பண்ணிட்டியா?... கொடு பொரியல் பண்ணனும்…”

“இந்தாங்க பிடிங்க…”

வாசந்தியிடம் கொடுத்துவிட்டு அவன் எழுந்த போது இடி இடித்தது…

“மழை வரும் போலயே… இப்போ என்ன பண்ணுறது?...”

யோசனையுடன் அவர் நிற்க,

“அம்மா நீங்க போய் சமையல் பாருங்க… நான் போய் மாடியில காயப்போட்டிருக்குற துணி எல்லாம் எடுத்துட்டு வரேன்…”

சொல்லிக்கொண்டே அவன் மாடிப்படி நோக்கி நகர,

“உனக்கு எப்படிடா தெரியும்… நான் அதை தான் நினைச்சு சொன்னேன்னு?...”

“அதெல்லாம் அப்படித்தான்… என் அம்மாவ எனக்கு தெரியாதா?..…”

சிரித்துக்கொண்டே அவன் கூற,

“சரிப்பா… நீ போய் எடுத்துட்டு வா…”

மகனை அனுப்பிவிட்டு அவன் போவதையேப் பார்த்துக்கொண்டிருந்தார் வாசந்தி…

காலையில் அவர் துணியை துவைத்துக்கொண்டிருக்கும்போது தாயின் அருகில் வந்தவன்,

“அம்மா… எங்கிட்ட கொடுங்க நான் அலசி காயப்போடுறேன்….”

கையை நீட்டி அவன் கேட்க, வேண்டாம் என்றார் வாசந்தி…

“அட குடுங்கம்மா…” என பிடுங்கினான் அவன்…

“டேய்… விடுடா… நீ போய் இதெல்லாம் செஞ்சுகிட்டு… விடு…”

அவன் கையிலிருந்து விடாப்பிடியாய் துணியை வாங்க முயற்சித்தார் வாசந்தி…

“நான் உங்களுக்கு துணி அலசி கொடுத்ததே இல்லையா?... புதுசா நான் பண்ணுற மாதிரி விரட்டுறீங்க?...”

அவன் கிட்டத்தட்ட முறைக்க,

“அப்படி இல்லப்பா… என்னைக்காச்சும் ஒருநாள்ன்னா பரவாயில்லை… எப்பவும் எனக்கு இப்படி எதாவது உதவி செஞ்சிட்டே இருக்க…”

“அடடா அம்மா… எந்த சீரியலோட பிரதிபலிப்பு இது?... ரொம்ப இமோஷனல் ஆகுறீங்களே… முடியலையே…”

அவன் கேலி செய்து நெஞ்சைப் பிடித்துக்கொள்ள,

“போடா வாலு….”

செல்லமாக திட்டியபடி அவனின் காதை திருகினார் அவர்…

அதன் பின் அவர் மறுத்தும் கேட்காமல் துணியை அலசி காயப்போட்டுவிட்டு வந்தான் அவன், மாடியில்…

“இப்போ மழை என்றதும், நான் அதைத்தான் சொல்கிறேன் என்று புரிந்து கொண்டானே என் பிள்ளை… ஹ்ம்ம்… என் பிள்ளை பொறுப்பான நல்ல பிள்ளை….”

மனதிற்குள் சொல்லியபடி மாடிக்கு நடந்து போகும் மகனுக்கு கை வைத்து சுற்றி திருஷ்டி கழித்தார் வாசந்தி…

மகனைப் பற்றி நினைத்து பெருமைப்பட்ட மறுகணமே மகளின் நினைவு வர, தன்னையும் மீறி அவர் கண்கள் கலங்கியது…

“என் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையை குடுத்துட்டீயே கடவுளே… அவ வாழ்க்கையில நடக்குற பிரச்சினைக்கு ஒரு முடிவு கொண்டு வாப்பா… என் பொண்ணு இரண்டு பிள்ளைங்களை வச்சிட்டு தனியா வாழுற கொடுமையை எல்லாம் என்னால பார்க்க முடியாது… பூஜா அப்பாக்கு நல்ல புத்தியை கொடுத்து அவங்க இரண்டு பேரையும் சீக்கிரம் சேர்த்து வச்சிடுப்பா… உனக்கு புண்ணியமா போகும்…”

கைகூப்பி அவர் வேண்டிக்கொள்ள, வாசலில் அழைப்பு மணி கேட்டது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.