(Reading time: 11 - 21 minutes)

ர்னவ் திலீப்பின் முகத்தையே ஆதங்கத்துடனும் ஆத்திரத்துடனும், என்னதான் செய்வது என்ற இயலாமையுடனும் பார்த்துக்கொண்டிருக்க,

“நீங்க என் மேல வச்சிருந்த நம்பிக்கையை நான் உடைச்சிட்டேன்… இனி என்ன செஞ்சாலும் அந்த நம்பிக்கையை நான் மீட்டெடுக்க முடியாது… செஞ்ச தவறை நான் மாத்த முடியாது, ஆனா திருத்தணும்னு நினைக்கிறேன்… அதுக்கு முதல்ல உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்…”

சொல்லிவிட்டு கைகூப்பி அர்னவினையும், வாசந்தியையும் பார்க்க, வாசந்தி பதில் பேச வாயெடுத்தபோது சரயூ வந்தாள்…

கணவனை நெடுநாட்கள் கழித்து பார்த்தவளுக்கு, அவன் மேல் இருந்த காதலும், அவன் செய்த அநியாயமும் நினைவு வர, கண்கள் கலங்க அப்படியே நின்றாள் திலீப்பை பார்த்தபடி…

சரயூவின் அருகே விரைந்து சென்றவனுக்கு, அவளை நேராக பார்க்கக்கூட முடியவில்லை…

“என்னை மன்னிச்சிடுன்னு சொல்லுறதை தவிற வேறென்ன பேசி உன்னை சமாதானம் செய்யுறதுன்னு எனக்கு தெரியலை சரயூ… ஆனா உன்னைப்பிரிஞ்சி வாழுற வாழ்க்கை எனக்கு துளி கூட பிடிக்கலை சரயூ… என்னை மன்னிச்சிடு…”

மானசீகமாக அவன் மன்னிப்பை வேண்டினான் அவன் அவளிடம் கரம் கூப்பி…

“தப்பையும் செய்துட்டு சுலபமா மன்னிப்பு கேட்டா, ஏற்பட்ட ரணம் ஆறிடுமான்னு நீ கேட்கலாம்… ஆனா எனக்கு வேற வார்த்தையும் தெரியலை… வழியும் தெரியலை… மன்னிக்கக்கூடிய தப்பை நான் செய்யலைன்னு எனக்கு நல்லாவே தெரியும்… நீ எங்கூட இருந்து பட்ட கஷ்டத்தை, நான் உன்னை விட்டு பிரிஞ்சிருந்த நாட்களில் என் மனசு உணர்ந்துச்சுன்னு சொன்னா நீ நம்புவியான்னு தெரியலை… ஆனா அது தான் உண்மை… நீ இல்லாத தனிமை எனக்கு நிறையவே பாடம் சொல்லிக்கொடுத்துடுச்சு… நான் பட்ட காயத்தை உன் மேல திணிச்சு குணமாக்க நினைச்சது என்னோட முட்டாள்தனம்னு நான் புரிஞ்சிக்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு… என்னை நீ மன்னிக்கணும்னு நான் கேட்கமாட்டேன்… என் மேல நீ வச்சிருந்த காதலை நான் சாகடிச்சிட்டேன்… அதுக்கு எனக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்… உனக்கா எப்போ நம்ம வீட்டுக்கு வரணும்னு தோணுதோ அப்ப வா… அதுவரை நான் உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன்…”

சொல்லிவிட்டு சில நொடிகள் சரயூவின் முகத்தினை அவன் பார்க்க, அவள் நிமிரவில்லை கொஞ்சமும்…

“இன்னும் சொல்லப்போனா உன்னை வான்னு கூப்பிடுற உரிமை கூட எனக்கு இருக்கான்னு தெரியலை… அந்த அளவு நான் மோசமா நடந்துருக்கேன் உன் விஷயத்துல… ஆனா உன்னைவிட்டு பிரிஞ்சிருந்த நாட்கள் தான் உன் மேல நான் வச்சிருந்த காதலை உணர்ந்தேன் முழுசா…. இத்தனை நாள் அந்த காதலை தொலைச்சிட்டேன்னு நினைக்கும் போது எனக்கே என்னை நினைச்சா அருவெறுப்பா இருக்கு… என்னை மன்னிச்சிடு சரயூ…”

சொல்லிவிட்டு வாசந்தியிடமும் அர்னவிடமும் வந்தவன்,

“வார்த்தையாலும், கையாலும் என்னை நீங்க அடிச்சிருந்தா கூட இவ்வளவு வலிச்சிருக்காது… ஆனா பெரிய மனசு பண்ணி வாங்கன்னு சொல்லி என்னை வீட்டுக்குள்ள வரவிட்டிருக்கீங்களே…. இதைவிட பெரிய அடி எனக்கு வேற எதுமில்லை…. நான் செஞ்சது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு புரியுது… ஆனா அதைவிட சரயூவை கஷ்டப்படுத்தியிருக்கேன்னு நினைக்கும்போது தான் வலிக்குது… சரயூவுக்கு என்னைக்கு என்னை மன்னிக்கணும்னு தோணுதோ அன்னைக்கு மன்னிக்கட்டும்… அதுக்கு எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை… அதே மாதிரி உங்களுக்கும் என் மேல என்னைக்கு நம்பிக்கை வருதோ அன்னைக்கு சொல்லி அனுப்புங்க… நான் வந்து என் மனைவியை கூட்டிட்டு போறேன்…”

அமைதியாக சொன்னவனின் விழிகள் வீட்டை சுற்றி நோட்டமிட,

“பூஜாவும் பிரேமியும் அவங்க தாத்தா கூட வெளியே போயிருக்காங்க…” என்றார் வாசந்தி…

“அவங்களை எந்த முகத்தோடு பார்ப்பேன்னு நினைச்சிட்டிருந்தேன்… அதான் கடவுளாப்பார்த்து பார்க்க விடாம பண்ணிட்டார் போல…”

விரக்தியுடன் அவன் சொல்லிவிட்டு வாசல் நோக்கி போகையில், அங்கே நின்றிருந்தார் சரயூவின் தந்தை பூஜா, பிரேமி மற்றும் சண்முகத்துடன்…

திலீப்பைக் கண்டதும், “அப்பா…………” என்று ஓடிவந்து காலைக்கட்டிக்கொண்ட பிள்ளைகளைத் தூக்கி அணைத்துக்கொண்டான் திலீப்…

“ஊருக்கு போயிட்டு வந்துட்டீங்களாப்பா?...”

“ஏன்ப்பா இத்தனை நாள் ஆச்சு?...”

“உங்களை எவ்வளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?...”

“அம்மா அழுதுட்டே இருந்தாங்கப்பா நீங்க இன்னும் வரலைன்னு…”

பூஜாவும், பிரேமியும் மாறி மாறிப் பேச, அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை…

கடைசியாக, “அம்மா அழுதுட்டே இருந்தாங்கப்பா நீங்க இன்னும் வரலைன்னு…” பிரேமி சொன்ன வார்த்தை மட்டும் அவனுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது நீங்காமல்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.