(Reading time: 11 - 21 minutes)

திலீப் மேல் அவருக்கு கோபம் பெரிதாக இருந்தாலும், மகளின் வாழ்வு அதைவிட பெரிதாய் தெரிந்தது அவருக்கு… கல்யாணம் முடிவான போதும் அதன் பின் வந்த நாட்களிலும் திலீப் போன்ற அன்பான மருமகன் தன் மகளுக்கு கிடைத்ததை எண்ணி பூரிப்படைந்தவர், சமீப காலமாக அவனது நடவடிக்கையின் மாற்றம் அறிந்து பெரும் கவலை கொண்டார்… ஆயினும் அவன் சரி ஆகிவிடுவான் என்றே அவரும் நம்பினார்…

ஆனால் அவர் நம்பிக்கையை தகர்ப்பது போல் அமைந்த திலீப்பின் செயல் அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது… அவனை அதுவரைக்கும் ஒருவார்த்தை கூட திட்டி பேசாதவர், அன்று சண்முகத்திடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது அவருக்கே வியப்பு தான்…

வேறென்ன செய்ய முடியும்?... திட்டாமல், தன் ஆத்திரத்தை கொட்டாமல் எந்த தாயால் தான் இருக்க முடியும்?.. அது சாத்தியமும் ஆகுமா?...

திட்டி தீர்த்து தனியே வந்து யோசித்தவர் ஒன்றில் மட்டும் தெளிவாய் இருந்தார்… ஆம்… நடந்த தவறுக்கு அவன் நிஜமாகவே வருந்தி மன்னிப்பு கேட்டு, இனி இதுபோல் என்றும் நடந்திடாது என்ற உத்திரவாதமும் கொடுத்த பின்னரே தன் மகளை அந்த வீட்டிற்கு அனுப்புவேன் என தான் எடுத்த முடிவில் உறுதியாய் இருந்தார்…

நகர்ந்து போகும் நாட்களை எண்ணிக்கொண்டே இருந்த மனதினுள், அது கொண்ட பாரமும் கூடிக்கொண்டே போனது…

அடிப்படையிலேயே கெட்டவனை கூட திருத்திவிடலாம் உண்மையான அன்பின் மூலம்… ஓர் உண்மையான நேசம் அவர்களை மாறவைத்திடும்… எனில் சரயூவின் அன்பும் திலீப்பை ஓர்நாள் மாறவைக்கும்… அந்த மாற்றம் தன் மகளின் வாழ்வில் ஒளியைக்கொடுக்கும் என்று எண்ணினார் அவரும் இந்த கசப்பான நாட்களிலும்… ஆயிரம் மனக்கசப்புகள் உள்ளுக்குள் இருந்தாலும், மகள் அவள் கணவனுடன் சந்தோஷமாக சேர்ந்து வாழத்தானே அந்த தாயுள்ளமும் நினைக்கும்…

எண்ணங்களிலிருந்து அவரை விடுபட வைத்து நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது... விடாமல் கேட்டுக்கொண்டிருந்த அழைப்பு மணி…

“அம்மா…. காலிங்க் பெல் அடிக்குது பாருங்க… ரொம்ப நேரமா…”

அர்னவ் கத்திக்கொண்டே கீழே இறங்கி வந்தான் கையில் துணியுடன்…

“இதோ பார்க்குறேண்டா…”

வாசல் பக்கம் நகர்ந்தவரை சமையலறையிலிருந்து வந்த விசில் சத்தம் தடுக்க,

“அச்சச்சோ….” என பதறியபடி அர்னவினைப் பார்க்க,

“நான் யாருன்னு பார்க்குறேன்.. நீங்க போய் அடுப்பை ஆஃப் பண்ணுங்க…”

சொல்லிவிட்டு சென்றவன் கதவைத்திறந்தான்… யாராக இருக்கும் என்ற யோசனையுடனே…

அப்பட்டமான அதிர்ச்சி அர்னவின் முகத்தில் தெரிய, சில நொடிகள் என்ன பேச என்றே தெரியாது நின்றான் அவன்…

பின், சுதாரித்து, “வாங்க….” என்று கஷ்டப்பட்டு சொல்லிவிட்டு உள்ளே செல்ல, அவனைத் தொடர்ந்து திலீப்பும் வந்தான் உள்ளே தயங்கியபடி…

“யாருப்பா வந்திருக்காங்க?....”

உள்ளிருந்து வாசந்தி குரல் கொடுக்க, பதிலே சொல்லவில்லை அர்னவ்…

“என்னாச்சு இவனுக்கு?...”

சிந்தித்தவாறே ஹாலுக்கு வந்த வாசந்திக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது…

மறுநிமிடமே கடவுளிடம் தான் வைத்த வேண்டுகோள் நிறைவேறப்போகிறதோ என்ற எண்ணம் தோன்றிய மாத்திரத்திலேயே, சரயூ தன் வீட்டில் இருப்பதற்கான காரணமும் அவரின் எண்ண வளையத்திற்குள் வந்து நிற்க,

ஆத்திரப்படுவதா இல்லை சந்தோஷப்படுவதா என தெரியாது குழம்பி போய் நின்றார் அவர் மௌனமாக…

அவரின் அருகில் அர்னவ் வந்ததை கூட உணராமல் இருந்தவர், தன் மீது ஒரு கரம் படிந்ததும் தான் சுயநினைவு அடைந்தார்…

“வாங்க….” என தொண்டைக்குள்ளிருந்து வார்த்தைகள் போராட்டத்துடன் வெளிவர,

“மன்னிச்சிடுங்க….” என்று கை எடுத்து கும்பிட்டான் திலீப் சட்டென…

அர்னவிற்கும், வாசந்திக்கும் கோபம் வந்த போதும், எதுவும் பேசவில்லை…

செய்வதெல்லாம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டால் போதுமா?... என மனம் முரண்ட, செய்த தவறுக்கு மன்னிப்பை பிராயசித்தமாய் கேட்கும்போது, முரண்டிய மனமும் சற்றே கட்டுப்பட, வார்த்தைகள் அங்கே பிறக்கவில்லை ஏனோ…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.