(Reading time: 12 - 24 minutes)

அமேலியா - 12 - சிவாஜிதாசன்

Ameliya

ரவின் கடுமையான பனியில் நனைந்தபடி கார் சென்று கொண்டிருந்தது. நகரத்தை விட்டு வெகு தொலைவிற்கு வந்துவிட்டமையால் போலீஸ் கெடுபிடி இனி இருக்காது என்ற மனதைரியத்தில் சற்றே தணிந்த பதட்டத்தோடு காரை செலுத்தினான் வசந்த்.

ஒவ்வொரு கிலோமீட்டருக்கு இடையிலும் சில வீடுகள் மட்டுமே தென்பட்டன. அந்த வீடுகளையெல்லாம் கண்களை இமைக்காமல் பார்த்தபடி வந்தான் ஜான். வீடுகளைக் கடந்த பின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் நிலப்பரப்பு மட்டுமே காட்சியளிக்கும் அவ்விடத்தை இரவின் பனி திரையிட்டு பார்வையில் இருந்து மறைத்தது. 

ஜானின் மனதில் பல எண்ணங்கள் உருவாகி உருவாகி மறைந்தன.

"ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டிற்கும் இத்தனை கிலோமீட்டர் தொலைவா? இவங்க தங்களோட தேவைகளை எப்படி நிறைவேற்றிப்பாங்க வசந்த்?"

ஏற்கனவே கோபத்தில் இருந்த வசந்த் ஜானை முறைத்தான். மறுநாள் ஜெசிகா தன்னை அழைத்துச் செல்லவிருக்கும் விளம்பரக் கம்பனியில், தான் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றி திட்டம் தீட்ட வேண்டும் என்று எண்ணியிருந்தான். ஆனால், நடந்ததோ வேறு. ஸ்பான்சரிடம் கதை சொல்லி கவர்வது எப்படியென்று அவனுக்கு புரியவில்லை. தன் வாழ்வின் முக்கியமான தருணத்தை மெல்ல தொலைத்துக்கொண்டிருக்கிறோமா என்ற வேதனையில் இருந்தான் வசந்த்.

"என்னடா முறைக்கிற? நான் தான் உன் மேல கோவப்படணும். என் மேல துப்பாக்கிய தூக்கி போட்டதும் இல்லாம முறைக்க வேற செய்ற. அந்த போலீஸ்காரன் எப்படி பார்த்தான் தெரியுமா? அப்படியே எக்ஸ்ரே மெஷின் போல ஊடுருவி பார்த்தான்"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"தயவு செஞ்சி கொஞ்ச நேரம் பேசாம வரியா?"

"நான் பேசிட்டுதாண்டா வருவேன். என் சோகத்தை நான் சொல்லாம வேற யார் சொல்லுவா?"

"ஜான், ப்ளீஸ், நான் ரொம்ப குழப்பத்துல இருக்கேன்"

"நாங்க மட்டும் என்ன குப்புறப்படுத்து தூங்கிட்டா இருக்கோம்? எதுக்குடா இவ்வளவு தூரம் வர? இங்க தான் யாரும் இல்லையே, அந்த துப்பாக்கிய கார் சன்னல் வழியா தூக்கி போட்டுட்டு வீட்டை பார்த்து போகலாம்ல?"

"முட்டாள்தனமா பேசாத. அந்த துப்பாக்கியை யாராச்சும் எடுத்து போலீஸ்கிட்ட ஒப்படைச்சிட்டா கைரேகை வச்சு நம்மள தூக்கி உள்ள வச்சிடுவாங்க"

ஜான் நீண்ட பெருமூச்சை விட்டெறிந்தான். "ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது. நாம எந்த பக்கம் போனாலும் போய் சேர வேண்டிய இடம் போலீஸ் ஸ்டேஷனா தான் இருக்கபோகுது"

"இன்னும் கொஞ்ச தூரத்துல ஒரு கடற்கரை இருக்கு. அங்க நிறைய மரங்கள் இருக்கும். அங்க இந்த துப்பாக்கியை மறைச்சு வச்சிடலாம்"

"பேய் பட கதை போல சொல்லுறியேடா. எனக்கு இதெல்லாம் தேவையா? இதுக்கு ஜெசிகா கிட்ட பூந்தொட்டியாலேயே அடி வாங்கிட்டு ஹாஸ்ப்பிட்டல்ல படுத்திருக்கலாம். ஆமா, இந்த கடற்கரை சமாச்சாரம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"

"அங்க சில நாள் ஷூட்டிங் போனோம்"

ஜான் கண்களை இறுக மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயற்சித்தான். அவனால் முடியவில்லை. மீண்டும் கண்களைத் திறந்து வசந்தை நோக்கினான்.

"எதுக்கு பயப்படுற? பேய், பிசாசு நம்பிக்கை இருக்கா என்ன?"

"அப்படி எதுவும் இல்லை வசந்த். என்னுடைய வாழ்க்கைல பெரும் பகுதிய தனிமைல தான் கழிச்சேன். சின்ன வயசுல அப்பா அம்மா இறந்துட்டாங்க. பாட்டி வீட்டுல தான் வள்ர்ந்தேன். நான் எங்கே போனாலும் தனிமை மட்டும் தான் கூடவே வரும்"

வசந்த் ஆமோதிப்பதாய் தலையாட்டினான்.

"அழுதா, எனக்கு நானே ஆறுதல் சொல்லிப்பேன். நானே ஜோக் சொல்லி சிரிச்சிப்பேன். இது போல இரவு, கடற்கரை, மரம் எல்லாம் கொஞ்சம் அலர்ஜி"

"அப்போ பேய் இருக்கிறதா நம்புறதான?"

"இருக்குன்னும் தோணுது இல்லன்னும் தோணுது"

"ஒரு முடிவா சொல்லு"

"இருக்குன்னே வச்சுக்கோயேன்"

அந்நேரம், வசந்தின் அலைபேசி சிணுங்கியது. அதை எடுத்து பார்த்தான். "ஜெசிகா தான் கூப்பிடுறா"

"நான் தான் சொன்னேன்ல பேய் இருக்குன்னு, பாரு, உடனே கூப்பிடுது"

"சொல்லு ஜெசிகா" என்றான் வசந்த்,

"எங்கே இருக்க வசந்த்"

"அது வந்து,,.அது..குடும்பத்தோட ரெஸ்டாரண்ட் போயிட்டு இருக்கேன் ஜெசிகா. நான் அப்புறம் கூப்பிடுறேன்" என்று கூறி கட் செய்தான்.

கார் கடற்கரையை நெருங்கியது. பெரிய பெரிய ராட்சசர்களை போல மரங்கள் உயர்ந்து நின்றிருந்தன. எங்குமே வெளிச்சமில்லை. கார் லைட்டின் வெளிச்சமும் அவ்விடத்தை கிலியூட்டுவதாக இருந்தது. 

வசந்த் காரை விட்டு இறங்கினான். .

"ஜான், சீக்கிரம்"

"அவசியம் நான் இறங்கித்தான் ஆகணுமா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.