(Reading time: 17 - 33 minutes)

மேலி கிராமம் பள்ளத்தாக்கு

திகாலை சூரியக் கதிர்கள் அந்த பள்ளத்தாக்கில் மெல்ல ஊடுருவ கண்விழித்தார் விஜயகுமார்.

தலையில் இருந்து வடிந்து கொண்டிருந்த குருதி தற்போது உறைந்து போய் நின்று விட்டிருந்தது.

சுற்றிலும் பார்வையை சுழற்றியவர் அது பாறைகளும், முள் புதர்களும் நிறைந்த சிறிய பள்ளத்தாக்கு என்றும் கண்ணுக்கு சற்றே தொலைவில் அடர்ந்த மரங்கள் தென்பட்டதையும் அறிந்து கொண்டார்.

“இது என்ன இடம். இன்று என்ன நாள். அந்த விபத்து நடந்து நான் உயிரோடு இருப்பது அதிசயம் தான்” மனதுக்குள் நினைத்துக் கொண்டவர் நினைவில் சிறுவன் சமீர் வந்து போனான்.

அவருக்கு அந்நிகழ்வுகள் அனைத்தும் நினைவில் இருந்தது.

“அப்படினா இங்க இருந்து கொஞ்சம் தூரத்தில் கிராமம் இருக்கு. அங்கே போனா எங்க  இருக்கோம் என்ன தேதி எல்லாம் தெரிஞ்சிடும்”

அவர் பேச முற்பட்ட போது குரல்வளையில் இருந்து ஒலி கிளம்பவில்லை.

“ராத்திரி பூக்குட்டின்னு கூப்பிட்டது எனக்கு கேட்டதே” குழப்பமாய் யோசித்தவர் தன் செவிகளுக்கு கேட்கும் திறன் முழுமையாக திரும்பி விட்டதை உணர்ந்தார்.

“அவருக்கு காது கேக்கல...வாய் பேசவும் முடியல” சமீரின் தாய் கூறியது நினைவு வந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“சரி முதலில் இங்கிருந்து வெளியேறுவோம்” மெல்ல எழுந்து நிற்க முற்படுகையில் காலில் பலத்த வலி.

இடது காலை அசைக்க முடியாத அளவு மிகுந்த வலி. சற்றே அவர் குனித்து ஆராய்கையில் இடது காலில் நல்ல அடி பட்டிருப்பதை உணர்ந்தார்.

“பராக்ஷர் ஆகிருக்கு போல” பார்வையை சுழல விட்டவர் சற்று தொலைவில் ஆங்காங்கே மரக்கட்டைகள் உருண்டு விழுந்திருப்பதைக் கண்டார்.

“முதலில் காலுக்கு முட்டு கொடுக்க வேண்டும். இல்லைனா கஷ்டம்”

இடது காலை அதிகம் அசைக்காமல் மெல்ல நகர அவர் முற்படுகையில் அவரின் ஆடையில் இருந்து சலங்கை மணிகள் உருண்டு மடியில் விழுந்தன.

ஆடுகளின் கழுத்தில் கட்டிருந்த சலங்கை மணிகள் சில அவை மேயும் போது கீழே விழுந்த போது சமீர் அவரின் சட்டை பைக்குள் அவற்றை கொண்டு வந்து போட்டது நியாபகம் வந்தது.

அந்த சலங்கை மணிகளை கையில் வைத்துக் கொண்டு ஆராய்ந்து கொண்டிருந்தார்.

ஏதோ நினைத்தவர் அருகில் இருந்த நீண்ட உறுதியான புல்லினைக் கொண்டு அந்த சலங்கை மணிகளை இணைத்து ஆட்டிப் பார்த்தார்.

இப்போது அதன் ஓசை ஜல் ஜல் என்று சப்தித்தது.

அதை மீண்டும் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டவர் வலியைப் பொறுத்துக் கொண்டு அந்த கட்டைகளை எட்டி அதனை தனது இடது காலுக்கு முட்டு கொடுத்து கால் அசையாமல் கட்டினார்.

இன்னோர் உறுதியான கட்டையை ஊன்றுகோலாய் பற்றியபடியே மெல்ல எழுந்து நின்றவர் அங்கிருந்து மெதுவாக அடி வைத்து நகர்ந்தார்.

சற்று தொலைவில் கனிவகை மரங்கள் தென்படவே அவற்றில் இருந்து கனிகளை எடுத்து உண்டு அந்த மரத்தின் மேல் சாய்த்து கொண்டார்.

வலி மிகுதியில் கண் அசந்து போனவர் கண் விழிக்க சூரியன் மேற்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கி இருந்தான்.

“நிறைய நாட்கள் ஆகியிருக்கணுமே. வருஷங்கள் ஆகியிருக்கும். நான் இறந்து போயிருப்பேன்னு நினச்சுட்டு இருப்பாங்க. ரத்னா குழந்தைகள் எப்படி இருக்காங்களோ”

அவரின் மனம் பலவாறு தவித்தது.

“எப்படியேனும் நான் உயிரோட இருக்கேன்னு தெரிவிக்கணுமே...எப்படி தகவல் சொல்றது” சிந்திக்க தொடங்கினார்.

“சித்து கூட இருந்து பத்திரமா பூக்குட்டிய பார்த்துகிட்டு இருப்பான்” தற்சயலாக நினைத்தவர் மனதில் சட்டென்று அந்த எண்ணம் உதித்தது.

“சித்து...யெஸ் சித்துக்கு எப்படியாச்சும் சொல்லணும்...எப்படி சொல்றது” கண்களை மூடி ஒருமுகமாய் ஆழ்ந்த சிந்தனை செய்தார்.

அப்போது அவர் கண்கள் முன் அபூர்வாவின் சலங்கை அணிந்த பாதங்கள் தென்பட்டன.

“சலங்கை...அபி சலங்கை” சொல்லிக் கொண்டே தனது சட்டை பையில் இருந்து தான் கோர்த்திருந்த அந்த சலங்கை மணிகளை கையில் எடுத்தார்.

“இது சாத்தியமா என்று தெரியலேயே” அவர் மனதில் சஞ்சலம்.

“இது பாசிபிலா தெரிலயேன்னு கவலையா இருக்கும் போது நீங்க தானே எப்போவும் சொல்வீங்க ‘எறிகிற கல்லை எறிவோம். விழுந்தா மாங்காய் லாபம். இல்லைனாலும் மறுபடியும் எறிய கல்லு கிடைக்குமே’ நஷ்டம் ஒன்றும் ஏற்பட போவதில்லை எனும் போது முயற்சி செய்து பார்ப்பதில் என்ன தயக்கம்..இப்போ நீங்க ஏன் இவ்வளவு யோசனை செய்றீங்க டாடி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.